தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

0
493

தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது
நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்யும் முடிவைத் தமிழக அரசு கைவிட்டு காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்களை நியமித்திட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் 2012இல் முதன் முதலில் நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். 2013இல் நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் ஒரு சிலருக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. அதன் பின்பு இரண்டு முறை நடைபெற்ற தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. 2013க்குப் பின்பு தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனமே நடைபெறவில்லை, இதனால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் இன்று வரை பணி வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இதுபோன்று அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்ட பலருக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. இவ்வாறு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு முழுத்தகுதி பெற்ற பல்லாயிரக்கணக்கானோர் இருக்கும் நிலையில் 13331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்பது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி பல ஆண்டுகளாக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

இதற்கு முன்பு 1990 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். 1990ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. அதேபோன்று 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் பெரியார் திடலில் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை நடத்தியது. அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வின் சார்பில் ஆற்காடு வீராச்சாமி அவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 01.06.2006 முதல் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது என்பது கடந்த கால வரலாறு.

இவ்வாறு தொகுப்பூதியத்தை ஒழித்து ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய கலைஞர் அவர்களின் வழியில் நடை போடுவதாகக் கூறும் இன்றைய தமிழக அரசு மீண்டும் மதிப்பூதிய நியமனத்தைக் கொண்டுவருவது சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது.

மேலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட முன்கூட்டியே உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டிருக்க முடியும். தமிழக அரசின் இந்நடவடிக்கை இனிவருங்காலங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதையே தமிழக அரசு கைவிட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமன அதிகாரம் என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியோ என்ற ஐயத்தையும், ஆசிரியர்களை நியமித்திட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது