பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது? அமைச்சர் பொன்முடி முக்கியத் தகவல்!

0
309

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது? அமைச்சர் பொன்முடி முக்கியத் தகவல்!


தமிழகத்தில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியிடப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் கொரோனா சூழல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 28ஆம் தேதி முதல் கணினி வழியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் நிர்வாகக் காரணங்களால் தேர்வு நடைபெறும் நாட்கள் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.


இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி, வரும் 20ஆம் தேதி முதல் நெட் தேர்வுகள் நடைபெறுகின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களும் நெட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி IGCAR, SBI PO மெயின்ஸ் உள்ளிட்ட தேர்வுகளும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகின்றன. இதுபோன்ற காரணங்களால் வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 100 கிலோமீட்டர் தொலைவிற்குள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த தேர்வுகள் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற அச்சத்தில் இருக்க வேண்டாம். 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். வரும் டிசம்பர் 8ஆம் தேதி அன்று 23,683 பேரும், 9ஆம் தேதி 21,299 பேரும், 10ஆம் தேதி 24,719 பேரும், 11ஆம் தேதி 32,190 பேரும், 12ஆம் தேதி 36,248 பேரும் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கு தயாராகி வருபவர்கள் டிசம்பர் 8ஆம் தேதியை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.