
வரலாறு போற்றும் தமிழக பெண்மணிகள்
சீர்திருத்தம் என்பது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய சில சமூக நடைமுறைகளை ஒழிப்பதைக் குறிக்கிறது.
இந்த நடைமுறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கின்றன.
சமுதாயச் சீர்திருத்தங்களை அடைய ஆண்கள் மட்டுமல்ல நிறையப் பெண்களும் பாடுபட்டுள்ளனர்.
அத்தகையப் பெண் சீர்திருத்தவாதிகளில் குறிப்பிடத் தகுந்த சிலர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் மற்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோராவர்.
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)
சமுதாய மாற்றத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தது.
தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சார பாரம்பரியத்தில் இருக்கும் சில கருப்பு புள்ளிகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப் பட்டன.
அத்தகைய ஒரு கரும்புள்ளி ‘தேவதாசி’ அமைப்பு ஆகும்.
இந்த முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய முக்கியமான தலைவர்களில் ஒருவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.
மருத்துவர். முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் ஆவார்.
1923 ஆம் ஆண்டில் அவரது சகோதரி புற்றுநோயால் இறந்தார். அன்று அவர் புற்றுநோயை அழிக்க சபதம் எடுத்தார். எனவே, அவர் 1949 ஆம் ஆண்டில் புற்றுநோய் நிவாரண மருத்துவமனையைத் தொடங்கினார்.
சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் நிறுவனம் அவரது அரும்பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டது.
முதல் பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அந்த நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார்.
அவர் மருத்துவத்தில் மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களிலும் ஆர்வமாக இருந்தார்.
கொடூரமான நடைமுறையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவதற்காகத் தன் வாழ்நாட்களை அவர் அதற்காக அர்ப்பணித்தார்.
தேவதாசி அமைப்புக்கு எதிராகத் தீவிரமாக பிரச்சாரம் செய்ததற்காக காந்திஜியால் அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டப்பட்டார்.
தேவதாசி அமைப்புக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அவர் 1927 ஆம் ஆண்டு தமிழக சட்ட மேலவைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
இதன் விளைவாக, 1947 ஆம் ஆண்டில் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இருந்த மதராஸ் மாகாண அரசு தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்றியது.
மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டில் அவர் மதராஸ் சட்டமன்றத்தில் இருந்து பதவி விலகினார்.
1930 ஆம் ஆண்டில், அவர் புனேவில் அகில இந்திய மகளிர் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.
அவர் 1933 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்தியப் பெண்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.
மதராஸில் உள்ள சாந்தோமில் (தற்போது அடையாரில்) அவ்வை இல்லம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் தொடங்கியுள்ளார்.
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பின் மூலம் கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது என்றக் கருத்தை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
அவர் தனது 82 வது வயதில் 1968 ஆம் ஆண்டில் காலமானார்.
இவர் தனது பெயருக்கு முன்னால் பல்வேறு துறைகளில் முதலிடம் என்ற சிறப்பினைக் கொண்டிருந்தார்.
மகாராஜா ஆண்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி.
1907 ஆம் ஆண்டில் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட முதல் மற்றும் ஒரே பெண் மாணவர்.
அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் பயிற்சி மாணவராக பணி செய்த முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
1954 ஆம் ஆண்டில் மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் முதல் தலைவர்.
தமிழகச் சட்டமேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்.
1937 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சிக் குழுவில் மேயருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய முதல் பெண் உறுப்பினர்.
மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் (1890-1959)
செல்வம், அதிகாரம், கல்வி மற்றும் தகுதிநிலை காரணமாக அல்லாமல், மாறாக நாட்டிற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு காரணமாக பலர் பிரபலமடைந்துள்ளனர்.
மனிதநேயம் மற்றும் நல்லெண்ணம் மூலம் சேவை செய்ய முடியும் என்பதை நிரூபித்த அத்தகைய சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் மருத்துவர் எஸ்.தர்மாம்பாள் ஆவார்.
சமூக சேவையில் அதிக ஈடுபாடுகளைக் கொண்டிருந்த அவர் சித்த மருத்துவம் பயின்றார். அதன்பின் அவர் சென்னையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.
பின்னர் அவர் பொது சேவையில் ஈடுபட்டார்.
மருத்துவர் எஸ். தர்மாம்பாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கருந்தட்டான்குடியில் பிறந்தார்.
பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், விதவை மறுமணம், சாதிக் கலப்பு திருமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையின் வளர்ச்சியிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.
அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் (1937-40) பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றார்.
1940 ஆம் ஆண்டு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, அவர் ‘இழவு வாரம்’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்.
இதன் விளைவாக கல்வி அமைச்சர் திரு. அவிநாசிலிங்கம் செட்டியார் மற்ற ஆசிரியர்களைப் போலவே தமிழ் ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.
மாணவர்கள் தமிழில் தங்கள் அறிவை மேம்படுத்தவும், தேர்வுகளில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் “சென்னை மாணவர் மன்றம்” நிறுவப்பட்டது.
அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மன்றத்தின் தலைவராக இருந்தார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது சேவையைப் பாராட்டி 1951 ஆம் ஆண்டில் அவருக்கு “வீரத் தமிழன்னை” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
முற்போக்கு மகளிர் சங்கத்தின் 1938 ஆம் ஆண்டு மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர், அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்
மேலும் அவர் எம். கே. தியாகராஜ பாகவதருக்கு “ஏழிசை மன்னர்” என்ற பட்டத்தையும் வழங்கினார்.
தனது வாழ்க்கை முழுவதையும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் மக்களுக்காகத் தியாகம் செய்து அர்ப்பணித்த அவர் தனது 69 வயதில் 1959 ஆம் ஆண்டில் இறந்தார்.
மூவலூர் ராமாமிர்தம் (1883-1962)
இவர் ஒரு தமிழ் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் மதராஸ் மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காகப் பணியாற்றினார்.
இவர் திருவாரூரில் பிறந்தார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் கிராமத்தில் வளர்க்கப்பட்டார். எனவே, இவர் பொதுவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.
1936 ஆம் ஆண்டில் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தேவதாசிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தியது.
முதலில் தேசியக் கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸின் ஆதரவாளராக இருந்த இவர், பெரியார் 1925 ஆம் ஆண்டில் காங்கிரஸை விட்டு வெளியேறிய பின்னர், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினரானார்.
1930 ஆம் ஆண்டில், மதராஸ் மாகாணத்தில் தேவதாசி முறையை சட்டத்தின் மூலம் ஒழிக்க முத்துலட்சுமி ரெட்டி மேற்கொண்ட முயற்சியை இவர் ஆதரித்தார்.
இவர் 1937-1940 ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். நவம்பர் மாதம் 1938 ஆம் ஆண்டில், அந்தப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது புதுமையான முயற்சியால் உருவாக்கப்பட்ட பொது விழிப்புணர்வும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கான இவரது தொடர்ச்சியான பிரச்சாரமும், 1947 ஆம் ஆண்டு மதராஸ் தேவதாசி (அர்ப்பணிப்புத் தடுப்பு) சட்டம் அல்லது தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய உந்துகோலாக இருந்தன.
1949 ஆம் ஆண்டில் பெரியார் அவரை விட மிகவும் இளைய பெண்ணான மணியம்மையை மணந்த போது, அவர் பெரியாரின் இயக்கத்தை விட்டுப் பிரிந்துச் சென்றார்.
பின்னர் அவர் பெரியாரின் சீடரான சி. என். அண்ணாதுரை அவர்களால் தொடங்கப்பட்ட “திராவிட முன்னேற்றக் கழகத்தின்” (தி.மு.க) ஆதரவாளரானார்.
அவர் 1962 ஆம் ஆண்டில் இறக்கும் வரை தி.மு.க கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.
தனது வாழ்நாள் இலட்சியம் நிறைவேறியதைக் கண்டு கண்ணுற்ற பிறகு அவர் ஜூன் 27, 1962 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
அவரது நினைவாக, ஏழைப் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு சமூக நலத் திட்டமான “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை” தமிழக அரசு நிறுவியுள்ளது.
இதற்கான தகுதிகள் பின்வருமாறு
கல்வியறிவு – மணமகள் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒருவேளை மணமகள் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயின் அவர் 5 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
வருமான வரம்பு – ஆண்டிற்கு ரூ.12,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு – மணமகள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்
மேற்கண்ட குறிப்புகளை PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்துங்கள்.