கொரோனாவுக்கு சி.டி ஸ்கேன் அவசியமா? யாரெல்லாம் கட்டாயம் எடுக்கனும்..?

0
202

சி.டி ஸ்கேன் சிவியரிட்டி ஸ்கோர் என்பது, வலது மற்றும் இடது புறங்களில் உள்ள நுரையீரல்களின் பாதிப்பின் தன்மையை அறிந்து கொள்ள உதவுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரிப்பு காரணமான மருத்துவமனைகளும், அவசர சிகிச்சை பிரிவுகளும் நிரம்பி வழிகின்றன. தொற்று அறிகுறி இருப்பதை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம் மற்றும் நேர விரயம் காரணமாக சி.டி. ஸ்கேன் எடுக்க பலரையும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால், சி.டி.ஸ்கேன் சென்டர் முன்பும் மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சி.டி.ஸ்கேன் அவசியமா? கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டுமா? சி.டி.ஸ்கேன் எடுப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற கேள்விகள் உள்ளன. இதற்கான விளக்கத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சி.டி. ஸ்கேன் என்றால் என்ன?


கம்யூட்டட் டோமோகிராபி (Computer Tomography) என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் சி.டி ஸ்கேன் அழைக்கப்படுகிறது. எக்ஸ்ரேவின் அடுத்த வடிவமான இந்த முறையில், கதிரியக்கங்களை உடலில் செலுத்தி, குடல், எலும்பு, திசுக்கள் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடிக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் மூலம் உடலில் உள்ள தொற்றுகளை எளிதாக அடையாளம் கண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். பி.சி.ஆர் சோதனையை விட சி.டி ஸ்கேன் மூலம் கொரோனா தொற்றின் வீரியத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் சி.டி.ஸ்கேன் அவசியமா?

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான அனைத்து நோயாளிகளும் சி.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

சி.டி.ஸ்கேன் யாரெல்லாம் எடுக்க வேண்டும்?

கொரோனா தொற்றின் அறிகுறி மிகவும் கடுமையாக இருப்பவர்கள், 94 விழுக்காடுக்கும் கீழாக ஆக்சிஜன் இருந்து, கடுமையான காய்ச்சல், தொடர் இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்.

சி.டி.ஸ்கேனை விட எக்ஸ்ரே சிறந்ததா?

எக்ஸ்ரே சிறந்தது. ஏனென்றால், எக்ஸ்ரேவை விட 50 அல்லது 100 மடங்கு கதிர்வீச்சுகள் சி.டி.ஸ்கேனில் செலுத்தப்படும். பல்வேறு வகையான சி.டி.ஸ்கேன்கள் இருக்கின்றன. ஆனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெச்.ஆர்.சி.டி ((High Resolution Computed Tomography) ஸ்கேன் எடுக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

எக்ஸ்ரே இருக்கும்போது, சி.டி ஸ்கேன் ஏன் எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது?

எக்ஸ்ரே வழியாக 2 டி பார்வையில் நுரையீரலை பார்க்க முடியும். இதன்வழியாக தொற்றின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும். மிதமான அல்லது அறிகுறி மட்டும் இருப்பவர்களுக்கு சி.டி.ஸ்கேன் அவசியமில்லை. மேலும், சி.டி.ஸ்கேன் 3டி பார்வையைக் கொண்டது. நுரையீரலில் தொற்றின் அதிக ஆபத்தை உணர்ந்து கொள்ளவும், துல்லியமாக அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவும் சி.டி ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது.

CTSS என்றால் என்ன?

சி.டி ஸ்கேன் சிவியரிட்டி ஸ்கோர் என்பது, வலது மற்றும் இடது புறங்களில் உள்ள நுரையீரல்களின் பாதிப்பின் தன்மையை அறிந்து கொள்ள உதவுகிறது. வலது பக்கத்தில் உள்ள 3 லோப்களும், இடது புறத்தில் 2 லோப்களும் உள்ளன. அவற்றில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ப ஸ்கோர் கொடுக்கப்படும். அனைத்து லோப்களும் துல்லியமாக அலசி ஆராயப்பட்டு, 25 மதிப்பெண்களின் கீழ் தரவரிசைப்படுத்தப்படும்.

பாதிப்பு எண்ணிக்கை 1 முதல் 8 வரை இருந்தால் சாதாரண பாதிப்பு, 1 முதல் 15 வரை இருந்தால் மிதமான தீவிரம், 15க்கும் மேல் இருந்தால் கடுமையான பாதிப்பு என பொருள்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

மீண்டும் சி.டி எப்போது எடுக்க வேண்டும்?

தற்போது அளிக்கப்படும் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காமல், கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரும்பட்சத்தில் மீண்டும் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும். ஒருவேளை தொடக்க நிலை மருந்துகளில் நல்ல முன்னெற்றம் கிடைத்தால், சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

சி.டி.எஸ்.எஸ் ஸ்கோர் மற்றும் ஆக்சிஜன் அளவுக்கும் இடையே உள்ள தொடர்பு?

இரண்டு அளவீடுகளும் நுரையீரலை சார்ந்து இருப்பதால், இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. சில விஷயங்களில் ஏற்கனவே இருக்கும் நுரையீரல் நோய் பாதிப்புகளில் சி.டி.எஸ்.எஸ் ஸ்கோருக்கும், ஆக்சிஜன் ஸ்கோருக்கும் மாறுபாடு இருக்கும்.

சி.டி.ஸ்கேன் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

சி.டி ஸ்கேன் மூலம் உடலில் செல்லும் கதிர்வீச்சுகள் புற்றுநோயை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளன

கர்ப்பிணிகள் சி.டி.ஸ்கேன் எடுக்கலாமா?

கூடாது. சி.டி.ஸ்கேனில் வெளிப்படும் கதிர்வீச்சுகள் கருப்பை மற்றும் குழந்தையை கடுமையாக பாதிக்கும். ஒருவேளை கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருந்தால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப் படி முடிவு எடுக்க வேண்டும்.