CBSE: 12ம் வகுப்பு தேர்வு ரத்து: மதிப்பீட்டில் திருப்தி இல்லையென்றால் தேர்வு எழுதலாம்-சிபிஎஸ்இ!

0
351

14 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டியுள்ளதால், அது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், தேர்வு முடிவுகளை முடிந்தவரை விரைவில் வெளியிட முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி முடிவுகளில்  திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

இந்தியாவின் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன.

எனினும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா வேண்டாமா என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் 12ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.


இந்நிலையில்,  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, தேர்வு முடிவுகள் தொடர்பாக எவ்வித தேதியையோ நேரத்தையோ உறுதியாக நாங்கள் குறிப்பிட முடியாது. முடிந்தவரை முடிவுகளை விரைவில் வெளியிட  முயன்று வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், 12 வது தேர்வின் முடிவுகளை எதன் அடிப்படையில் முடிவு செய்வது என்பதற்கான  அளவுகோல்களை இரண்டு வாரங்களுக்குள் தீர்மானிப்போம் என்று எதிர்பார்க்கிறோம். இது இரண்டு வாரங்கள் எடுக்கும், ஏனென்றால் , 14 லட்சம் மாணவர்களின் முடிவுகளை வெளியிட வேண்டியுள்ளது என்பதால் அது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு மதிப்பீடு வரையறையில் திருப்தி இல்லை, மதிப்பீடு முடிவுகளை விட சிறப்பான தேர்ச்சியை பெற முடியும் என  அவர்கள் எண்ணினால் தாராளமாக தேர்வை எழுதலாம்.  கொரொனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு தேர்வு நடத்தப்படும்  என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.