கரையைக் கடந்த யாஸ் புயல்: 3 லட்சம் வீடுகள் சேதம் – மேற்குவங்கத்தில் கடும் பாதிப்பு

0
453


வங்கக்கடலில் உருவான யாஸ் அதிதீவிரப் புயல், ஒடிசாவின் வடக்கு கடலோரப் பகுதியில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக, மேற்குவங்கத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்தன.

வங்கக்கடலில் உருவாகி அதிதீவிரப் புயலாக மாறிய யாஸ், ஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாலாசோர் அருகே இன்று காலை 10.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது, மணிக்கு 130 கிலோமீட்டர் முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயல் முழுமையாகக் கரையைக் கடப்பதற்கு மூன்றரை மணிநேரம் பிடித்தது. பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்தது. புயல் காரணமாக, ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தம்ரா பகுதியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா எல்லையில் உள்ள உதய்ப்பூர் பகுதியில் சோதனைச்சாவடியில் வைக்கப்பட்ட தடுப்புகள் தூக்கிவீசப்பட்டன. படகுகள் மற்றும் கடைகளும் சேதமடைந்தன.

பதர்கம் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். வேரோடு விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய விமானப் படை விமானங்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தமிழகத்தின் அரக்கோணத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் விமானப் படை விமானத்தில் மீட்புப்படையினர் சென்றனர்.

யாஸ் புயல் காரணமாக, மேற்குவங்கத்திலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன. பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு மித்னாப்பூர் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து வெளியே வந்த ஒருவர், சூறாவளிக் காற்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார். புயல் காரணமாக 3 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், 134 நீர்நிலைகளின் கரைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அலைகள் மேலே உயர்ந்து வந்ததால், கடும் சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.