புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸ்அப் இயங்காது என மீண்டும் அறிவிப்பு!

0
234

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய கொள்கைகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளின் அடிப்படையில் வாட்ஸ்அப் யூசர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், மக்கள் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக புதிய பயன்பாடுகளை அணுகத் தொடங்கினர். இருப்பினும், நிறுவனம் தனது கொள்கை விதிகளை மாற்ற முன் வரவில்லை. மேலும், தனது கொள்கை விதிகளை ஏற்றால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டது. மேலும் மே 15ம் தேதிக்குள் கொள்கை விதிகளை ஏற்காவிடில் செயலி வேலை செய்யாது என்று சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், புதுப்பிப்பை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை வாட்ஸ்அப் ரத்து செய்துள்ளதாகவும், விதிமுறைகளை ஏற்கவில்லை என்றாலும் மே 15 அன்று வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் என்றும் நேற்று (மே7) செய்தி வெளியானது.

கொள்கை புதுப்பிப்பை ஏற்காமல் போனாலும் மே 15 அன்று எந்தக் கணக்குகளும் நீக்கப்படாது என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், அதன் FAQ பக்கத்தில் கொடுக்கப்பட்ட ஒரு விளக்கத்தின் மூலம், வாட்ஸ்அப் இன்னும் தனது கொள்கை முடிவை கைவிடுவதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதில், பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தியிடல் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாத யூசர்களின் செயலியில் ஒரு குறிப்பிட்ட வாரங்களுக்கு பிறகு தொடர்ந்து நினைவூட்டல்களைப் (Notifications) அனுப்பும் என்றும் சில காலத்திற்குப் பிறகு செயல்பாட்டை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியான நோட்டிபிகேஷன்களை பெறும் நேரத்தில், யூசர்கள் தங்களது வாட்ஸ்அப்பில் வரையறுக்கப்பட்ட செயல்பாட்டை சந்திப்பார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. பின்னர் புதுப்பிப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை அனைத்தையும் இழக்கக்கூடும் என்று விளக்கம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி யூசர்கள் தங்கள் சாட் பட்டியலை அணுக முடியாது. ஆனால் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து நினைவூட்டல்களைப் பெறும்போது உள்வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெற முடியும் என்று வாட்ஸ்அப் கூறியது.

இப்போது, யூசர்கள் மே 15 அன்று வாட்ஸ்அப்பின் செயல்பாட்டை இழக்க மாட்டார்கள் என்று நிறுவனம் கூறும் அதே வேளையில், தொடர்ச்சியான நோட்டிபிகேஷன்களை பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு, யூசர்கள் வாட்ஸ்அப்பில் தங்களுக்கு வரும் அழைப்புகள் அல்லது அறிவிப்புகளைப் பெற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்அப் உங்கள் தொலைபேசியில் செய்திகளையும் அழைப்புகளையும் அனுப்புவதை நிறுத்திவிடும். அதாவது யூசர்கள் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், வாட்ஸ் அப் செயல்படுவதை நிறுத்திவிடும் என்பதே இதன் பொருள்.

ஆனால் மே 15 அன்று இந்த முடக்கம் நடக்காது என்பது மட்டும் உறுதி. இது குறித்து வாட்ஸ்அப் தெரிவித்தாவது, “பெரும்பாலான யூசர்கள் ஏற்கனவே புதுப்பிப்பை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள யூசர்களுக்கு எங்கள் புதுப்பிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க கடந்த பல மாதங்களாக செலவிட்டோம். அந்த நேரத்தில், அதைப் பெற்ற பெரும்பான்மையான மக்கள் புதுப்பிப்பை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் வாட்ஸ்அப் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இருப்பினும், இன்னும் புதுப்பிப்பை ஏற்காதவர்களுக்கு வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்படாது அல்லது மே15 அன்று செயல்பாட்டை இழக்காது. வரும் வாரங்களில் வாட்ஸ்அப்பில் உள்ள யூசர்களுக்கு தொடர்ந்து நோட்டிபிகேஷன்களை வழங்குவோம்” என்று வாட்ஸ்அப் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்களை பிரதிபலிக்கும் பொருட்டு வாட்ஸ்அப் தனது கேள்விகள் பக்கத்தையும் புதுப்பித்துள்ளது. முதன்முதலில், புதிய விதிமுறைகளை ஒப்புக்கொள்வதற்கு யூசர்களுக்கு ஆரம்பத்தில் பிப்ரவரி 8 வரை நேரம் வழங்கப்பட்டது. ஆனால் பல பின்னடைவுகளுக்குப் பிறகு, பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தியிடல் தளம் காலக்கெடுவை மே15 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.