வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா தொற்றாளர்கள் கவனிக்க வேண்டியவை…
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அனைவரையும் மருத்துவமனைகளில் சேர்ப்பது என்பதோ அனைவருக்கும் மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குவதோ சாத்தியமற்றது.
எனவே , நோய்த்தொற்று பெற்றோர்களிடையே அவர்களது
வயது (AGE )
அறிகுறிகள் மற்றும் நோய்க்குறி ( SYMPTOMS & SIGNS)
அவர்களுக்கு இருக்கும் இணை நோய்கள்( COMORBIDITIES)
ஆகியவற்றை வைத்து
அறிவுப்பூர்வமான முறையில் வகைப்படுத்தும் ( TRIAGE) வேலையை மருத்துவர்கள் செய்வார்கள்
இதில்
தொற்று பெறும் இளைஞர்கள் இளைஞிகள்
இணை நோய்கள் இல்லாதவர்கள்
கொரோனாவின் சாதாரண அறிகுறிகள் மட்டும் (MILD COVID19 DISEASE ) இருப்பவர்களை
அவர்களது இல்லங்களில் தனியாக கழிப்பறை வசதியுடன் கூடிய அறை இருப்பின் இல்லங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள்.
தாங்கள் தங்களுக்கு மருத்துவர் வழங்கிய மருந்துகளை தொடர்ந்து எடுக்கவும்
தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் வீடுகளில் இருக்க வேண்டியவை
டிஜிட்டல் தெர்மாமீட்டர்
டிஜிட்டல் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்
தங்களுக்கு காய்ச்சல் இருக்குமானால் அதன் அளவை டிஜிட்டல் தெர்மாமீட்டர் வைத்து சோதித்து குறித்து வைக்க வேண்டும்.
தொடர்ந்து அதிகமான காய்ச்சல் இருந்து கொண்டே இருப்பது உள்ளே தொற்று நுரையீரலில் பரவி வரும் தன்மையாக இருக்கலாம்.
எனவே காய்ச்சல் தொடர்ந்து முதல் வாரம் முழுவதும் இருந்து கொண்டே இருப்பது ஒரு சமிக்ஞையாக இருக்கலாம்.
அதற்கடுத்தபடி செய்ய வேண்டியது
முதல் அறிகுறி ஆரம்பித்த
மூன்று முதல் ஏழாவது நாள் வரை
தினமும் மூன்று வேளை
காலை
மதியம்
இரவு
ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரை ஆள்காட்டி விரலில் வைத்து என்ன அளவு காட்டுகிறது என்று பார்த்து குறிக்க வேண்டும்.
எப்போதும் 95% க்கு மேல் ஆக்சிஜன் அளவு (SpO2) காட்டினால் அது நார்மல்
SPo2 என்பது நமது நுரையீரல் சரியான முறையில் ரத்தத்தை சலவை செய்கிறது என்பதை குறிக்கும் சமிக்ஞையாகும்
இந்த அளவுகள் 95% க்கு மேல் எப்போதும் இருப்பது சிறந்தது.
அதற்கடுத்து
காலை
மதியம்
இரவு மூன்று வேளையும்
ஆறு நிமிடங்கள் மிதமான வேகத்தில் தனிமையில் இருக்கும் அறைக்குள்ளேயே தொடர்ந்து நடக்க வேண்டும்.
அவ்வாறு நடந்த பின் உடனே பல்ஸ் ஆக்சிமீட்டரில் சோதனை செய்ய வேண்டும்.
ஏற்கனவே நடைக்கு முன் இருந்த ஆக்சிஜன் அளவுகளை விட நடைக்குப்பின் 5% குறைந்து
காணப்பட்டால் அது அபாய சமிக்ஞையாகும்.
நுரையீரலில் கொரோனாவால் ஏற்படும் நியூமோனியா தொற்று பரவி வருவதற்கான அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு.
உடனே மருத்துவமனையில் சென்று பார்த்து சிடி ஸ்கேன் எடுத்து மருத்துவர் பரிந்துரையில் அட்மிட் ஆக வேண்டி வரலாம்.
( ஆஸ்துமா / நீண்ட நாள் நுரையீரல் அழற்சி போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த அளவுகள் கோவிட் நோய் இல்லாமலும் 90-95 என்ற அளவில் இருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த அளவுகளில் இருந்து எவ்வாறு குறைகிறது என்பதை கவனிக்க வேண்டும் )
நல்ல புரதச்சத்துள்ள உணவுகளான
மாமிசம் உண்போராயின்
முட்டைகள் தினமும் மூன்று
மாமிசம்/மீன் தினமும் 200 கிராம்
ஆட்டுக்கால் / நெஞ்செலும்பு சூப்
போன்றவற்றை பருகலாம்
மரக்கறி மட்டும் உண்போராயின்
பாதாம் / வேர்க்கடலை தினமும் 100 கிராம்
முளைகட்டிய பயிறு 100 கிராம்
பால் 200 மில்லி
உண்ணலாம்
காய்ச்சல் இல்லாதவர்கள் மேற்சொன்னவற்றை உண்ணலாம்.
காய்ச்சல் அடிக்கும் போது
இட்லி
இடியாப்பம்
பால் பிரட் என்று உண்ணலாம்.
இருமல்
வயிற்றுப்போக்கு
மூக்கு அடைப்பு / ஒழுகுதல்
காய்ச்சல்
தொண்டை வலி
உடல் அசதி
உடல் சோர்வு
பசியின்மை
கண்கள் சிவந்து போதல்
நுகர்தல்/ சுவைத்தல் திறன் இழப்பு
போன்றவற்றில் ஒன்றோ பலவோ ஒருவருக்கு இருக்கலாம்
வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்ன ஒரே காரணத்திற்காக
எந்த அறிகுறியைப் பற்றியும் கவலைப்படாமல்
எந்த சுயகண்காணிப்பும் செய்யாமல்
அறிகுறிகள் முற்றுவதை கவனிக்காமல் இருந்தால் பிரச்சனைகள் ஏற்படும்
வீட்டில் பல்ஸ் ஆக்சிமீட்டர் இல்லை.
அதை வாங்கும் அளவு வசதி இல்லை
என்ன செய்யலாம்?
“மூச்சு விடுவதில் சிரமம்”
“வாயால் ஏங்கி ஏங்கி மூச்சு விடுவது”
“அடிக்கடி கொட்டாவி வருவது”
“மூச்சுத்திணறல்”
“சிறிது நடந்தால் தலை சுற்றல்/ தடுமாறிக்கொண்டு வருவது”
போன்ற அறிகுறிகள் “அபாயமானவை”
உடனே மருத்துவமனையை அடைய வேண்டும். உங்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்க வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பல இளைஞர் இளைஞிகள் இது போன்ற சமிக்ஞைகளை முறையாகக் கண்காணித்து
உடனடியாக மருத்துவமனைகளில் அட்மிட் ஆகிறார்கள்.
இந்த முறை இரண்டாம் அலையில் பல இளைஞர் இளைஞிகளும், முதியோர்களும் வயது பேதமின்றி அறிகுறிகள் முற்றி மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நிலைக்கு செல்லும் சதவிகிதம் முந்தைய அலையை விடக் கூடுதலாக இருக்கிறது.
எனவே தயவு கூர்ந்து
வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வோர்
மேற்சொன்ன பல அறிகுறிகளைக் கண்காணித்து தேவைப்பட்டால் மருத்துவமனையை நாட யோசிக்கவே கூடாது.
விரைவாக நோயைக் கண்டறிதல்
விரைவாக அபாய சமிக்ஞைகளைக் கண்டுகொள்ளுதல்
விரைவாக சிகிச்சையை ஆரம்பித்தல்
விரைவாக நோய் குணமாகி வீடு திரும்புதல்
இதுவே கொரோனாவை வெல்ல நமக்கான சூத்திரங்கள்
நன்றி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை