திகிலூட்டும் பேய் கதைகள் – 04 – ஆணி அறையப்பட்ட புளியமரம்..!

0
922
       ரமணி பாட்டி, தன் பேரக் குழந்தைகள் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்து இருப்பதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அவர்களோடு முழு பொழுதையும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தாள். 
மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வெளியே செல்லும் பேரக் குழந்தைகளிடம், “எங்கு வேண்டுமென்றாலும் சென்று விளையாடுங்கள்..! ஆனால் சாலையின் கீழ் புறத்தில் இருக்கும் அந்த புளியமரம் பக்கத்தில் மட்டும் செல்ல வேண்டாம்..” என்று தவறாது எச்சரித்து அனுப்பினாள். பேரக்குழந்தைகளும், “சரி பாட்டி..” என்று தலையசைத்துவிட்டு செல்வார்கள் 
ஆனால் அந்தப் பேரக் குழந்தைகளில் ஷோபனா சற்று சுட்டித்தனமானவள். எதை செய்யாதே என்றாலும் அதை செய்யும், பிடிவாத குணம் உடையவள். ஒரு நாள் ரமணி பாட்டி, மாலையில் வாக்கிங் செல்லும் பொழுது சோபனா, அந்த புளிய மரத்தின் அடியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். விரைந்து சென்ற ரமணி பாட்டி ஷோபனாவை திட்டியபடியே வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். 
இரவு நேரத்தில் தனியாக அமர்ந்திருந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த ரமணி பாட்டியிடம், ஷோபனா மெதுவாக சென்று “எதற்காக பாட்டி அந்தப் புளியமரத்து அருகே செல்லக்கூடாது என்று சொன்னிங்க” என்று கேட்டாள். 
அதற்கு அந்த ரமணி பாட்டி முதலில் சொல்ல மறுத்தாலும், தொடர்ந்து சோபனாவின் பிடிவாதத்தால், கண்களில் பயத்தோடு தழுதழுத்த குரலில், 5 வருடத்திற்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தைக் கூற தொடங்கினாள். 
“5 வருடத்திற்கு முன்பாக பக்கத்து ஊரில் ‘கமலா’ என்ற ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவளது சடலத்தை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம், ஒரு லாரியின் மீது அந்த புளிய மரத்தின் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. 
இந்த சம்பவத்தில் வாகனத்தின் இரண்டு டிரைவர்களும் பலியாக, அந்த பெண்ணின் சடலமானது மோதிய வேகத்தில் புளியமரத்தின் அடியில் அமர்ந்த நிலையில் விழுந்தது. 
தொடர்ந்து ஐந்து மணி நேரம் அதே இடத்தில் இருந்த அந்த சடலத்தை , அவளது உறவினர்கள் புளியமரத்திற்கு சற்று தொலைவில் வைத்து எரித்தார்கள். 
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில், அந்த பெண்ணின் ஆவி அந்த புளிய மரத்து வழியாக செல்லும் பல பேரை பிடித்து பாடாய் படுத்தத் தொடங்கியது. 
அதன் பின்னர் கேரள நம்பூதிரிகள் மூலமாக அந்த மரத்தில் ஆணி அடித்து அந்த பெண்ணின் ஆவியை கட்டி விட்டார்கள்..” என்று ரமணி பாட்டி கூறி முடித்ததும், சோபனா தனது உள்ளங்கையை காட்டி அவள் கூறிய ஒரு வார்த்தையில் ரமணி பாட்டி அதிர்ந்தே போனாள். 
அப்படி ரமணி பாட்டி அதிர்ச்சியடைய சோபனா என்ன சொன்னாள் தெரியுமா..? சோபனா உள்ளங்கையில் ஒரு ஆணியை வைத்துக்கொண்டு “அந்த மரத்தில் அறையப்பட்ட ஆணி இதுதானா..? என்று பாருங்கள்..” என்றாள். 
அதாவது அங்கு விளையாடும் நேரத்தில் அந்த ஆணியை கையோடு எடுத்து வந்திருக்கிறாள் சோபனா. இனி என்ன நடக்கப்போகிறதோ..? என்ற பயத்தில் ரமணி பாட்டி ஷோபனாவை தூங்க வைத்துவிட்டு நடுக்கத்தோடு படுத்திருந்தாள். 
அந்த நேரத்தில் வீட்டை சுற்றிலும் அழுகுரல் கேட்க தொடங்கியது. நாய்கள் ஊளையிட்டன. ஜன்னல் கதவுகள் ஒன்றையொன்று தட்டிக்கொண்டன. 
உடனடியாக படுக்கையை விட்டு எழுந்த ரமணி பாட்டி, பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த வேலைக்காரனை அழைத்து, அவனிடம் ஆணியை கொடுத்து அந்த மரத்தில் அடித்து வரச் சொன்னாள். 
குடிக்க பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இதற்கு சம்மதித்து, அந்த வேலைக்காரன், ஊரே அமைதியாக இருக்கும் அந்த இரவு வேளையில் தன்னந்தனியாக அந்த மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். 
மரத்தைப் பார்த்ததும் சற்று பதறிப்போன அந்த வேலைக்காரன், ஆணி அடிப்பதற்காக ஒரு கல்லினை குனிந்து எடுத்துவிட்டு நிமிர்ந்து அந்த மரத்தைப் பார்த்த பொழுது, மரத்தின் கிளைகளில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டான். கண்ணை துடைத்துக்கொண்டு, உற்றுப் பார்த்த பொழுது அந்தப் பெண் திடீரென திரும்ப…. 
“சோபனா…” என்று அலறியபடியே அந்த வேலைக்காரன் கீழே சாய்ந்தான். 
முடிந்தது…..