
அனைவருக்கும் வணக்கம்…
நாம் படிக்கும் பொழுது கவனச் சிதறல் அதிகமாக வருகிறது… நாம் நினைக்கும் 100 செயல்களில் 25 செயல்களோ அதற்கு குறைவாகவோ தான் நடக்கிறது.. ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே இருக்கிறோம்.. நாம் சமநிலையில் இல்லாமல் துன்பத்தில் அதிகமாய் துவண்டு போகிறோம். இன்பத்தில் அதிக இன்பமாய் இருக்கிறோம்… எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?
நம் மனதில் ஒரு வினாடியில் சராசரியாக 40 எண்ணங்கள் எழுகின்றன. 14-40 எண்ணங்கள் தோன்றினால் அது ஆரோக்கியமானது அல்ல.. அதன் எண்ணிக்கை எந்த அளவு குறைகிறதோ (14க்கும் குறைவாக)அந்த அளவுக்கு நம் மனம் அமைதியாகி பல்வேறு நன்மைகள் நடக்கும்.. மனம் அமைதியாகும் பொழுது நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும். படிக்கும் பொழுது கவனச் சிதறல் ஏற்படாது.. தேர்ச்சி பெறுவதற்கான உத்திகளை மனம் உருவாக்கி கொடுக்கும்.. மனம் நமக்கு தேவையான மோட்டிவேஷனை அவ்வப்போது வழங்கும்.. சரி .. மனதில் எழும் எண்ணங்களை எப்படி குறைத்து நாம் எவ்வாறு மன அமைதியை பெறலாம்…
- இறைவனை நினைத்து தினமும் 10-20 நிமிடம் வரை தியானம் செய்ய வேண்டும்.
- நன்றி செலுத்துதல்- ஒரு நாளைக்கு 20 நபர்களுக்காவது மனதார மனதிற்குள் நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் மனதார நன்றி செலுத்த வேண்டும். நன்றி உணர்வு உங்களுக்கு ஆசிர்வாதத்தை வழங்க வல்லது.
- ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த நிமிடத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும். (நிகழ் காலத்தை கவனி)
- உங்களை சுற்றியுள்ள பகுதி அனைத்தையும் தூய்மையாக வைத்திருங்கள். தூய்மைக்கும் மன அமைதிக்கும் நேரடி தொடர்பு உண்டு.
- ஒவ்வொரு செயலிலும் நேர்த்தி அவசியம். எடுத்துக்காட்டாக காலை எழுந்தவுடன் பெட் சீட், பாயை மடித்து வைத்தல். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்தல்
- அதிகாலையில் எழும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.. வெற்றி பெற்றவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்தவர்களே.. எழுந்ததும் குளிக்கும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்..
- யார் மீதும் எந்த சூழலிலும் குறை கூறுதல் கூடாது. அனைத்து தவறுகளுக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
- உணவு உண்ணும் பொழுது அதில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும். உணவை தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும், விவசாயிகளுக்கும், சமைத்து தந்தவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். அந்த நேரத்தில் டிவியையோ அலைபேசியையோ பார்த்தல் கூடாது.
- நீர் பருகும் பொழுதும் குளிக்கும் பொழுதும் நல்ல எண்ணங்களை நினைவில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும். ஏனெனில் நீருக்கு சக்தி உண்டு (ஜப்பானியர்களின் நம்பிக்கை & அறிவியல் உண்மை). நாம் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னும் நம்மோடு இருந்து வரும் நீருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆகாரமுமாய் உணவிற்கு ஆதாரமாய் இருந்து நம் உடல் சுரப்பிகளிலும் இருக்கும் நீருக்கு நன்றி செலுத்த வேண்டும்
- நல்ல புத்தகங்களை வாங்கி தினமும் 10 பக்கங்களாவது வாசிக்க வேண்டும்
- நம்முடைய இலக்குகளை ஒரு நோட்டில் எழுதுங்கள். ஏனெனில் எழுதுவது அனைத்தும் நடக்கும் சாத்தியங்களை பிரபஞ்சம் உருவாக்கிக் கொடுக்கும்.
- அலைபேசி பயன்பாட்டை குறையுங்கள். பேசுவதை குறையுங்கள். சமூக வலைதளத்தின் பயன்பாடுகளை முற்றிலுமாக குறைத்து விடுங்கள் அல்லது நிறுத்தி விடுங்கள்.
- ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
- எதிர்மறையாக பேசுபவர்களை தவிர்த்து விடுங்கள்.
- எதை செய்தாலும் மிக மெதுவாக அச்செயலை உணர்ந்து செய்யுங்கள்.
இதையெல்லாம் செய்யும் பொழுது உங்களுக்கு மன அமைதி ஏற்படும். நம் வாழ்வினை அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகளை பிரபஞ்சம் அருளும். இறைவன் அருளால் வாழ்க வளமுடன்…
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் உங்கள் தமிழ் மடல் 💐💐💐

