நினைவிருக்கிறதா பொங்கல் வாழ்த்து அட்டைகளை? – இழந்துவிட்ட ஒரு அழகியல்!

0
358
       இன்று வாழ்த்துக்கள் சொல்வதற்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று இருக்கின்றது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் வாழ்த்து சொல்வதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் இருந்தது. அதுதான் இந்த வாழ்த்து அட்டைகள். நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பிடித்த நடிகர்களின் வாழ்த்து அட்டைகளை வாங்கி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தபால் மூலமாக அனுப்புவார்கள். அதில் கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது. 
பரபரப்புகள் ஏதுமற்ற நம் பால்யத்தில் பண்டிகைகள் தொடங்கிவிட்டாலே புத்தாடை, பலகாரங்களைப் போலவே வாழ்த்து அட்டைகளும் விற்றுத் தீர்க்கும். ஆடை வாங்கக்கூட அத்தனை யோசிக்க மாட்டார்கள். ஆனால் மனம் விரும்பிய வடிவத்தில் வாழ்த்து அட்டை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் சுணங்கித்தான் போவார்கள்.
தீபாவளியைப் போலவே பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளும் சக்கைப்போடு போடும். சுருள்முடி நெற்றியில் விழ, பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் பாட்டுப் பாடும் மக்கள் திலகம் தொடங்கி, ரஜினிகாந்த், கமலஹாசன் உருவப் படங்கள் அச்சிட்ட வாழ்த்து அட்டைகள் எல்லாம் கடைக்கு வந்த அன்றே காணாமல் போகும் மாயமும் நடந்திருக்கிறது.

இரு புறமும் செங்கரும்புகள் நிற்க, நடுவே பொங்கல் பானையுடன் மாடுகள் இருக்கும் வாழ்த்து அட்டையே பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும் மகிழ்ச்சியையும் சொல்லிவிடும். புத்தாண்டு வாழ்த்து அட்டைகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களையும் குழந்தைகளையும் பார்க்கலாம்.
இப்படித் தேடித் தேடி அட்டைகள் வாங்கி, பின்பக்கம் தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, அடியில் வீட்டில் இருக்கிறவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு, மறக்காமல் ஸ்டாம்ப் ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது மனம் முழுக்கப் பரவுகிற மகிழ்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அதுவும் இளவட்டங்கள் தங்கள் முறைப்பெண் இருக்கும் வீட்டுக்கு வாழ்த்துச் செய்தியோடு, காதல் செய்தியையும் இலைமறை காய்மறையாக அனுப்புகிற வைபவமும் அரங்கேறும். பண்டிகைக்கு ஒரு வாரம் இருக்கும்போதே தபால்காரரின் சைக்கிள் மணி நம் வீட்டு வாசலில் ஒலிக்கிறதா, யாராவது வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்களா என்று காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. விஞ்ஞான வளர்ச்சி பெருகப் பெருக, வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்துவிட்டது.
‘டேய் மாமா வீட்டுக்கும் பெரியம்மா வீட்டுக்கும் கார்டு போடணும்டா’ என்று சொல்கிற பெரியவர்களும் அருகிவருகிறார்கள். வீட்டுக்கு வீடு தொலைபேசி வந்த பிறகு தொலைபேசியில் சம்பிரதாயத்துக்கு வாழ்த்து சொல்வதோடு நின்றுவிட்டோம். அதுவும் ஆளுக்கு இரண்டு செல்போன் என்ற நிலை வந்ததும், ‘ஹாப்பி பொங்கல் ‘என்று குழுச் செய்தி அனுப்பிவிட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம்.
பண்டிகை தினத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினால் அதிகமாகப் பணம் செலவாகும் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்புகிற கனவான்களும் சீமாட்டிகளும் இருக்கிறார்கள். அனுப்புகிறவருக்கும் மகிழ்ச்சி இல்லை, வாழ்த்துச் செய்தியைப் படிக்கிறவருக்கும் புன்னகை இல்லை. வாழ்வின் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களையும் ஆனந்தங்களையும்கூடத் தொலைத்துவிட்டோம் என்பதே புரியாமல், வாழ்த்துகளைச் சொல்லித் திரிகிறோம். இரண்டு இயந்திரங்களுக்கு இடையே பரிமாறப்படுகிற தகவல்கள்கூட மனித மனங்களுக்கு நடுவே நிகழ்வதில்லை.

தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு வந்து, யாரெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள், யார் பெயரையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பரபரப்புடன் பார்க்கிற சுகத்தை இந்தத் தலைமுறை அனுபவித்திருக்கிறதா? பிறந்த வீட்டில் இருந்து வந்த அட்டையைப் படிக்க முடியாமல் மகிழ்ச்சியில் கண்கள் பளபளக்க எத்தனை பெண்கள் நின்றிருப்பார்கள்?
விடுமுறை விண்ணப்பம் தவிர வேறு எதற்கும் பேனா மூடியைத் திறக்காத இந்தத் தலைமுறை எதை மகிழ்ச்சி எனக் கொண்டாடுகிறது? அடித்துப் பிடித்து சொகுசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்துப் பெரிய பெரிய கடைகளில் வாங்கிய இனிப்புகளை அள்ளிக்கொண்டுச் செல்வதிலேயே பண்டிகை முழுமை பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.
உண்மையில் இதுவா கொண்டாட்டம்? இதுதானா மகிழ்ச்சி? ஒரு கிலோ இனிப்பைவிட ஒரு வரி வாழ்த்து உங்கள் மனதை அடுத்தவருக்குப் புரியவைத்துவிடாதா? உங்கள் கையெழுத்தின் நெளிவில் உங்கள் நேசம் புரிந்துகொள்ளப்படாதா? சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் கிராமங்களிலும் இதே நிலைதான்.
“என் சின்ன வயசுல நிறையப் பேருக்கு வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கேன். சில சமயம் அட்டை வாங்கக் கையில காசு இருக்காது. நானே தபால் கார்டுல படம் வரைஞ்சு அனுப்பியிருக்கேன். இப்போ சிலர் போன்ல வாழ்த்துச் சொல்றாங்க. இன்னும் சிலர் ஒரு மெசேஜ் அனுப்பிடறாங்க. என்ன பண்றது? காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாமே மாறிடுச்சு. அதுக்கேத்த மாதிரி சந்தோஷமும் குறைஞ்சுடுச்சு” என்று வருத்தத்துடன் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த அரங்கநாதன்.
திண்டுக்கல் சுப்பிரமணியத்தின் அனுபவமும் அதையேதான் ஆமோதிக்கிறது. “பண்டிகை வந்தா போதும் நான் என் தம்பிகளோட சேர்ந்து வாழ்த்து அட்டை வாங்கக் கிளம்பிடுவேன். யாருக்கெல்லாம் வாழ்த்து அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. யாருக்கு அனுப்புறோமோ அதுக்கு ஏத்த மாதிரி வாழ்த்து எழுதுவோம். என் தம்பியோட கையெழுத்து அழகா இருக்கும். அதனால அவன்தான் நிறைய அட்டையில எழுதுவான். பொங்கல், தீபாவளி வந்தா சொந்தங்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம்னு சொன்னா என் மகன் ஆச்சரியமா பார்க்கிறான். அவங்களுக்கு போன்ல சொல்றது மட்டும்தான் வாழ்த்து. என்ன பண்றது? இந்தத் தலைமுறை மகிழ்ச்சிகளோட அறிமுகம் இல்லாமதான் வளருது” என்று நிதர்சனத்தைச் சொல்கிறார் சுப்பிரமணி.
இந்தத் தலைமுறைக்கு எதுவும் வாய்க்கவில்லை என்று சொல்வதைவிட அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தரலாமே. நேரமில்லை என்று சப்பைக்கட்டுவதை விட்டுவிட்டு நாமே நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பினால், அந்த அன்பு நிச்சயம் எதிரொலிக்கத்தான் செய்யும். இதோ தீபாவளி வந்துவிட்டது. யாருக்கெல்லாம் வாழ்த்துச் சொன்னோம்? இன்னும் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசப்போகிறோம்? நம் வாழ்த்துச் செய்தியை எதிர்பார்த்து எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? நம் வாழ்த்து, எத்தனை மனங்களை மலரச் செய்யப்போகிறது, எத்தனை முகங்களைப் புன்னகையால் முகிழ்க்கப் போகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலில்தான் பண்டிகையின் கொண்டாட்டமும் உறவின் மகத்துவமும் அடங்கியிருக்கிறது.