12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறையில் நீட்

0
462

12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், நீட் பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்தப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜனவரி 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்காக, வகுப்புகள் நேரடியாகத் தொடங்கியுள்ளன. அனைத்து மாணவர்களும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல முக்கியமான பாடப் பகுதிகளை முதலில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், இ-பாக்ஸ் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் நீட் தேர்வுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

கரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் வழியே இ- பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பயிற்சிகளை அடுத்த மாதம் முதல் நேரடியாக நடத்தப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

இதற்காகத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற நிலையில், புதிதாகக் கற்பிக்க விரும்புவோருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து நீட் பயிற்சி வகுப்புகளை நேரடியாக நடத்த முடிவு செய்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.