
அன்று காலையிலிருந்தே பள்ளி வளாகத்தில் கொஞ்சம் பரபரப்பாய் இருந்தது. ஜூன் மாதம் முதல் நாள், கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்படும் நாள்.
எனக்கு ஏற்கனவே ஏழு எட்டு வருடங்கள் ஆசிரியர் பணியில் அனுபவம் இருந்தாலும், இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. முதல் நாள் வகுப்பறைக்கான கால அட்டவணை கையில் வழங்கப்பட்ட பொழுது, அது ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம். எந்தெந்த வகுப்புகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு மனதிற்குள் மிகுந்திருக்கும். பிரசவ வார்டில் காத்துக்கொண்டிருக்கும் குடும்பத்திற்கு “ஆண் குழந்தையா, பெண் குழந்தையா?” என்று கேட்கும் பதற்றமான தருணத்தைப் போலத்தான் அதுவும்!
கால அட்டவணையைப் பார்த்தேன். வழக்கம் போல உயர் வகுப்பிற்கு நான்கு பிரிவுகளும், சிறிய வகுப்பில் ஒரு பிரிவும் என் கையில் கொடுத்திருந்தார்கள். அன்றைய முதல் நாள் வகுப்பு. கைவசம் இருந்த ஆங்கிலப் பாடப்புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தேன். அதில் “Grandmother” பற்றிய பாடம் இருந்தது.
பாடத் தலைப்பைப் பார்த்தவுடனேயே, என் சொந்தப் பாட்டியைப் பற்றிய பல நினைவுகளும் கதைகளும் என் மனதில் ஓடின. அதையெல்லாம் மாணவர்களுக்குப் புரியவைக்கத் துணைக்கதைகளாக மனதிற்குள் குறித்துக் கொண்டேன். எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் எடுத்த ஆசிரியர், ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் ஒரு சுவாரசியமான துணைக்கதையை வைத்துச் சொல்லித் தருவார். அதனால் அந்த ‘Verb’-ன் அர்த்தம் இன்று வரை என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதே வெற்றிகரமான பாணியையே நானும் தொடர நினைத்தேன்.
மனதில் பல எதிர்பார்ப்புகளோடு முதல் நாள் வகுப்பிற்குள் நுழைந்தேன். கரும்பலகையில் “Grandmother” என்று பெரிய எழுத்துக்களில் தலைப்பை எழுதி, அதை வாசித்து பாடத்தைத் தொடங்கினேன்.
ஆனால், அன்றைக்குப் பார்த்து ‘டெக்னாலஜி’ என் வழியில் ராட்சசப் பாறையாக வந்து விழுந்தது! மாணவர்களுக்கு மொபைலில் ஆன்லைன் வருகைப் பதிவு (Mobile Attendance) போட முயற்சித்தேன். நெட்வொர்க் சிக்னல், ‘நான் வரமாட்டேன்’ என்று அடம் பிடித்தது. செல்போனைத் தூக்கிக் கொண்டு வகுப்பறையின் நான்கு மூலைக்கும் ‘வைஃபை தேடும் சாமியார்’ போல அலைந்து கொண்டிருந்தேன். அதற்குள் ஆபீஸ் பியூன் கதவைத் திறந்து, “சார், சீக்கிரம் அட்டெண்டன்ஸ் சப்மிட் பண்ணச் சொன்னார்கள்!” என்று அலாரம் வைத்தார். அந்த மொபைலோடு மல்யுத்தம் செய்து அட்டெண்டன்ஸ் போட்டு முடிப்பதற்கும், முதல் பீரியட் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது. பாட்டி பாடம்… ஸ்டார்ட் ஆகாமலே ‘ஆஃப்’ ஆனது!
அடுத்த நாள், “இன்னைக்கு பார்த்துக்கலாம்!” என்று அதே “Grandmother” தலைப்பைக் கூறிப் பாடத்தைத் தொடங்க முயன்றேன். அதற்குள் ஒரு மாணவனின் பெற்றோர் வகுப்பறை வாசலில் ரௌத்திரம் பழகிக் கொண்டு வந்து நின்றார். “சார், என் பையன் வீட்ல சுத்தமா பேச்சைக் கேட்கிறதே இல்லை!” என்று தன் மகனைப் பற்றிப் புகார்களின் பட்டியலை வாசித்தார். நான் உடனே ஒரு ஆன்மீக சொற்பொழிவாளராக மாறி, அந்த மாணவனைப் பக்கத்தில் கூப்பிட்டு, “தம்பி… வாழ்க்கையில எப்படி நல்லபடியா நடக்கணும், பெற்றோரை எப்படி மதிக்கணும்…” என்று அரை மணி நேரம் மெகா அட்வைஸ் மழை பொழிந்தேன். அவன் “சரிங்க சார்” என்று தலையாட்டிவிட்டுச் செல்வதற்கும், அன்றைய பீரியட் முடிவதற்கும் சரியாக இருந்தது.
மறுநாள், “இன்னைக்கு யார் வந்தாலும் பாடத்தை முடிச்சே தீருவேன்!” என்று கரும்பலகையில் Chalk-ஐ தூக்கிக்கொண்டு நின்றேன். உடனே ஆபீஸிலிருந்து ஆள் வந்தது… “சார், மாணவர்கள் எல்லாரையும் ஆதார் கார்டு அப்டேட் பண்ண கம்ப்யூட்டர் லேபிற்கு கூட்டிட்டு வாங்க!” என்று. மாணவர்களை ஆட்டுக்குட்டி போல வரிசையாக கம்ப்யூட்டர் லேபிற்கு அழைத்துச் சென்று, அந்த டிஜிட்டல் கூத்தை முடிப்பதற்குள் அன்றைய ஆங்கில வகுப்பு ‘சுபம்’ போட்டது.
அதற்கடுத்த நாளாவது நிம்மதியாக நடத்தலாம் என்றால், “பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படம் திரையிடப் போகிறோம்!” என்று சொல்லி, மாணவர்கள் அனைவரையும் ஏவி அறைக்கு அள்ளிச் சென்றுவிட்டார்கள். திரையில் படம் ஓடியதோ இல்லையோ, என் பாடவேளை ஓடிப்போனது!
ஆங்கிலப் பாடம் என்பதால் எனக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வகுப்பு இருக்கும். அடுத்த வாரத்தின் முதல் நாள், புத்துணர்ச்சியோடு வகுப்பிற்குள் சென்று “Grandmother” என்று சத்தமாகக் கூவினேன். அதற்குள் வெள்ளை கோட் போட்ட மருத்துவர்கள் குழு வகுப்பிற்குள் நுழைந்தது. “ஹெல்த் கவுன்சிலிங் சார்!” என்று சொல்லி, மாணவர்களுக்குச் சுகாதாரம், கை கழுவும் முறை பற்றி வகுப்பு எடுத்தார்கள். அவர்கள் போனதும், அன்றைய பீரியடும் போயிருந்தது.
“சரி, நாளைக்கு நடத்துவோம்” என்று அடுத்த நாள் ஆயத்தமானால், “கண் பரிசோதனை செய்ய டாக்டர்கள் வந்திருக்கிறார்கள்” என்று மாணவர்களை வரிசையாக அழைத்துச் சென்றார்கள். மறுநாள் வகுப்பிற்குச் சென்றால், “கலைத் திருவிழா போட்டிகள் வருது சார், டான்ஸ் ஆடுற பசங்களை பிராக்டீஸுக்கு அனுப்பவும்!” என்று டான்ஸர்களைக் கூட்டிச் சென்றார்கள். அடுத்த நாள், “ஸ்போர்ட்ஸ் டே வருது!” என்று கிரவுண்டிற்கு ஓடினார்கள்.
கடைசியாக ஒரு நாள், “இன்னைக்கு இந்த பாட்டியைப் பற்றி நடத்தாம இந்த வகுப்பை விட்டு போக மாட்டேன்!” என்று சபதம் எடுத்து, கரும்பலகையில் “Grandmother” என்று எழுதி, பாடத்தின் முதல் வரியைத் தொண்டைத் தண்ணி வற்றப் படித்து முடித்தேன்…
திடீரென கதவு திறந்தது. ஆபீஸ் பியூன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்து என் கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.
அது — “முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை (Exam Time Table)”!
பாடப் புத்தகத்தில் இருக்கும் ‘பாட்டி’ கதையை நடத்தவே எனக்குள் ஒரு பெரிய கதையே உருவாகிவிட்டது! கற்பிக்கும் நேரத்தை விட, இதுபோன்ற கூடுதல் பணிகளிலேயே ஆசிரியர்களின் ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே கழிந்து கொண்டிருக்கிறது. (கூடுதல் பணிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. வகுப்பறையை பாதிக்காத வண்ணம் இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்)


