மௌனத்தின் மொழி-சிறுகதை

0
549


அன்று இரவு 11 மணி… பால் போன்ற நிலவொளி பரவிக் கிடந்தது. அந்த நிசப்தமான சாலையில் நான் தனிமையில் நடந்து கொண்டிருந்தேன். அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனத்தையும் கைகாட்டி நிறுத்த முயன்றேன்; ஆனால், ஒன்றுகூட நின்றபாடில்லை.


இறுதியாக, தூரத்தில் ஒரு ‘குட்டி யானை’ (Tata Ace) வாகனம் வருவதைக் கண்டு கையை உயர்த்தினேன். அது சற்றுத் தள்ளிப் போய் நின்றது. மூச்சிறைக்க ஓடிச் சென்று அந்த வாகனத்தை நெருங்கினேன். ஓட்டுநருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு பெரியவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், ஓட்டுநர் என்னைப் பார்த்து, “பின்னாடியே ஏறிக்கங்க தம்பி,” என்றார். நானும் மெதுவாக அந்த வாகனத்தின் பின்புறம் ஏறிக்கொண்டேன்.
அங்கே ஏற்கனவே ஒரு கன்றுக்குட்டி நின்றுகொண்டு, எந்தச் சலனமும் இன்றி வாகனத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த தட்டிகளின் இடைவெளி வழியாக நிலவொளியில் நனைந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தது.


வாகனத்தின் ஓரத்தில் இருந்த உருண்டை வடிவிலான மரக்கட்டை ஒன்றில் அமர முயன்றேன். அப்பொழுதுதான் கவனித்தேன்… அந்த மரக்கட்டையின் விளிம்புகளில் காய்ந்த இரத்தக் கறைகள் படிந்திருந்தன. அதை பார்த்ததும் இந்த வாகனம் ஒரு இறைச்சிக் கடைக்குச் சொந்தமானது என்பதையும், என் அருகில் இருக்கும் இந்த கன்று நாளை காலை இறைச்சிக்காக வெட்டப்படப் போகின்றது என்பதையும் உணர்ந்தேன்.


வாகனத்தில் நின்று கொண்டிருந்த அந்த இளம் கன்றின் செயல்களை நீண்ட நேரமாக நான் கவனித்துக் கொண்டிருந்தேன். வாகனம் முன்னோக்கிச் செல்ல, மரங்களும் வேலியும் பின்னோக்கி ஓடுவதை அது ஒருவித வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. அதன் முகத்தில் அத்தனைப் பிரகாசம்; ஒரு வினோதமான மகிழ்ச்சி.
அதன் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறியும் ஆவலில், மெதுவாகப் பேச்சு கொடுத்தேன்.


“முகத்தில் இத்தனை சந்தோஷம் தெரிகிறதே! முதல் முறை வாகனத்தில் பயணம் செய்கிறாயா? அல்லது இந்த மரங்கள் பின்னோக்கி ஓடும் மாயாஜாலத்தைக் கண்டு வியக்கிறாயா?” என்று கேட்டேன்.
சற்றும் எதிர்பாராத விதமாக அந்தக் கன்று என்னைத் திரும்பிப் பார்த்து, “இல்லை… நீங்கள் சொல்லும் இவை எதுவுமே என் மகிழ்ச்சிக்குக் காரணமல்ல” என்றது.
“பின் வேறு என்னதான் காரணம்?” என்று குழப்பத்துடன் வினவினேன்.
இந்த வாகனம் எங்கு செல்ல போகிறது. நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்ததால் தான் இந்த மகிழ்ச்சி என்றது.


எனக்கு தூக்கி வாரி போட்டது. ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் ஏன் மரணிப்பதில் உனக்கு இத்தகைய மகிழ்ச்சி என்றேன்.


“எங்கள் வாழ்க்கை உங்களை விட முற்றிலும் மாறுபட்டது. ‘சுதந்திரம்’ என்றால் என்னவென்றே தெரியாத உலகம் எங்களுடையது” என்று ஒரு பெருமூச்சுடன் தன் சோகத்தை சொல்லத் தொடங்கியது.


“தாய் எனக்காகத்தான் பாலைச் சுரந்தாள். ஆனால், நான் வயிறாரப் பருகுவதற்கு மனிதர்கள் ஒருபோதும் அனுமதித்ததில்லை. என் உலகம் ஒரு முழக் கயிற்றால் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கயிற்றின் நீளம் எவ்வளவோ, அதுவே என் வாழ்நாள் எல்லை. காலையில் எழுவதும், நின்ற இடத்திலேயே உண்பதும், கழிப்பதும், இரவில் அங்கேயே உறங்குவதும்தான் என் வாழ்க்கை. அதுவும் எத்தகைய உணவு தெரியுமா? பெரிய மாடுகள் தின்று எஞ்சிய கழிவுகள்தான் எனக்கு மிஞ்சும். இதே நிலையில் உங்களை வைத்து யோசித்துப் பாருங்கள்… காலம் முழுவதும் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா?”


நான் மெளனமானேன். இல்லை என்பதுதான் என் பதில்.


தன் வலிகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கியது. “எனக்கு ஆறு மாத வயதிருக்கும் போது, என் மூக்குத் தண்டு வழியாக ஒரு கயிற்றைக் கோர்த்தார்கள். ‘மூக்கணாங்கயிறு’ என்று நீங்கள் சொல்லும் அந்தச் சரடு என் சதையைத் துளைத்த போது, இரண்டு நாட்கள் வலியால் துடித்தேன். இன்றும் ஏதேனும் உண்ணும் போதெல்லாம் அந்த வலி என்னைத் தீண்டிக்கொண்டுதான் இருக்கிறது என்றது.


அதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் மௌனத்தை ஒரு சாட்சியாக எடுத்துக்கொண்ட அந்தக் கன்று, மீண்டும் தன் வருத்தத்தைத் தொடர்ந்தது.


“இவை அனைத்தையும் விட, நேற்று நடந்த ஒரு சம்பவம் ‘இனி வாழவே வேண்டாம்’ என்கிற முடிவுக்கு என்னைத் தள்ளியது” என்றது.
திடுக்கிட்டுப்போய், “அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டேன்.


“என்னை கட்டிப் போட்டிருந்த தொழுவத்திற்கு அருகிலேயே ஒரு மாடி வீடு இருக்கிறது. நேற்று மாடியிலிருந்து ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டே, வாழைப்பழம் ஒன்றை உரித்தபடி இறங்கி வந்தார். அந்தப் பழத்தைப் பார்த்ததும் என் வாயில் எச்சில் ஊறியது. ஏனெனில், நான் உணவு உண்டு அப்போது எட்டு மணி நேரமாகியிருந்தது.
அவர் அந்தப் பழத்தைத் தின்றுவிட்டு, அதன் தோலை என் பக்கமாக வீசினார். ஆனால், விதி வசத்தால் அந்தத் தோல் என் கயிற்றின் எல்லைக்கு ஒரு ஜான் தள்ளிப் போய் விழுந்தது. கண் முன்னே உணவு… ஆனால் அதைத் தீண்ட முடியாத அடிமைத்தனம்! கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் அந்த ஒரு ஜான் தூரத்தைக் கடக்கப் போராடினேன். பசி வயிறைக் கிள்ளியது; கயிறு என் கழுத்தை அறுத்தது. இறுதியில், அந்தத் தோல் என் கண் முன்னேயே காய்ந்து கருகிப் போனது. ஒரு பழத்தோலைக் கூட உண்ண வழியில்லாத எனக்கு இந்த வாழ்வு எதற்கு என்று தோன்றியது” என்றது.


இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் இதயம் ஒரு கணம் நின்று போனது போன்ற பிரமை. பதற்றத்தில் கண்கள் தானாக விழித்துக்கொண்டன.


ஆம் இதுவரை நடந்தது அத்தனையும் கனவு!
உடனடியாகப் படுக்கையை விட்டு எழுந்தேன். வியர்க்க விறுவிறுக்க மாடியிலிருந்து இறங்கி, அருகில் இருந்த அந்தத் தொழுவத்தை நோக்கி ஓடினேன். அங்கே, நேற்று நான் அலட்சியமாக வீசியெறிந்த அந்த வாழைப்பழத் தோல் காய்ந்து கருகிக் கிடந்தது. ஆனால், பக்கத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியைக் காணவில்லை.


படபடப்புடன் அதன் உரிமையாளரைத் தேடிச் சென்றேன். கன்று எங்கே என்று கேட்டதற்கு அவர், “அதை இன்றுதான் வண்டி ஏற்றி அனுப்பினேன் தம்பி. பொதுவாக அந்தக் கன்று பிடிவாதம் பிடிக்கும், இழுத்தால் வராது. ஆனால் இன்று என்ன ஆச்சரியமோ… அதுவாகவே வண்டியில் ஏறிக்கொண்டது” என்றார்.
எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அதன் மனநிலை என்ன என்பதை அந்தக் கனவு எனக்கு உணர்த்திவிட்டது.


நேற்று ஒரு நிமிடம் நின்று, அந்தத் தோலை அதன் அருகில் கொடுத்திருந்தால், ஒரு ஜீவன் எட்டு மணி நேரம் பசியோடும் வலியோடும் போராடியிருக்காது. என் ஒரு கண அலட்சியம், அந்த வாயில்லா ஜீவனின் வாழ்நாள் நம்பிக்கையையே சிதைத்திருக்கிறது. அந்த எட்டு மணி நேரப் போராட்டத்தில் அது எவ்வளவு தூரம் மனதளவில் செத்துப் போயிருக்கும் என்று நினைக்கும்போது, என் உள்ளம் குற்ற உணர்ச்சியில் தவித்தது.

கதையின் நீதி:
1.அலட்சியம் ஒரு துரோகம்:நமது ஒரு கண நேர அலட்சியம் அல்லது சோம்பேறித்தனம், மற்றொரு உயிருக்கு வாழ்நாள் வலியையும் ஏமாற்றத்தையும் தரக்கூடும்.
2.வாயில்லா ஜீவன்களின் வலி: மனிதர்களைப் போலத் தங்களுக்கு வேண்டியதைத் தேடிப் பெற முடியாத நிலையில் இருக்கும் விலங்குகளிடம் நாம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
3.”உயிரினங்களை வளர்க்க ஆசைப்பட்டால், அவற்றை அவற்றின் இயல்பான சூழலில் சுதந்திரமாக வளர விட வேண்டும்; சிறைப்படுத்துவது வளர்ப்பல்ல, அது ஒரு உயிரின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகும்.”

-C.P NARAYANAN