செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் – ஏஐ)

0
330

செயற்கை நுண்ணறிவு! செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் – ஏஐ)தொழில்நுட்பம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சவாலாகும் அதேநேரம், தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாக வளர்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்களைப் போல் எந்திரங்களை சிந்திக்க வைப்பதுதான் செயற்கை நுண்ணறிவு.செயற்கை நுண்ணறிவு மூன்றுவிதமாக பிரிக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட ஒரு வேலையை மட்டும் சிறப்பாகச் செய்யும் ஆர்ட்டிஃபிஷியல் நேரோ இன்டலிஜென்ஸ்; ஒரு மனிதனின் மூளையை போல, கொடுக்கப்பட்ட பயிற்சிக்கு மேல் புதிய முடிவுகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் ஆர்ட்டிஃபிஷியல் ஜெனரல் இன்டலிஜென்ஸ்; பல கோடி மனிதர்கள் மற்றும் விலங்குகளினுடைய மூளையின் திறமையையும் ஒன்று சேர்த்தத் திறமை கொண்ட ஆர்ட்டிஃபிஷியல் சூப்பர் இன்டலிஜென்ஸ்.இப்போது பெரும்பாலும் நடைமுறையில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, ஆர்ட்டிஃபிஷியல் நேரோ இன்டலிஜென்ஸ் – ஆர்ட்டிஃபீஷியல் ஜெனரல் இன்டலிஜென்ஸ், இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தால் தரவுகளை அலசி ஆராய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளை கொடுத்துவிட முடியும். ஆனால் புதிதாக எதையும் செய்துவிட முடியாது. செயற்கை நுண்ணறிவு சிறப்பாக செயல்பட, அதற்கு நிறைய தரவுகள் கொடுக்க வேண்டும். இந்தத் தரவுகளைத் திரட்டுவதே ஒரு பெரிய பணியாக இருக்கும்.மருத்துவம், வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, உற்பத்திப் பணி என்று பல்வேறு துறைகளில், செயற்கை நுண்ணறிவு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.”செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு இந்திய நீதித்துறையில் திருப்பு முனையை ஏற்படுத்தும், இதை அச்சுறுத்தலாகப் பார்கக்கூடாது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி தெரிவித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வழக்கின் தன்மையை ஏஐ தொழில்நுட்பம் துல்லியமாகச் சொல்லிவிடும் என கணிக்கப்படுகிறது.ரோபோக்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று கணித்துள்ளனர். ஆட்டோமேஷன் எனப்படும் தானியக்கத் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தானியக்கக் கருவிகளின் வழியாகச் செய்யப்படும் பணிகளின் அளவு விரிவடைந்து கொண்டே வருகிறது.ஏஐ அடிப்படையிலான இயந்திரங்கள், கணினிகள் போன்றவற்றை அமைப்பது, மிகப்பெரிய செலவை ஏற்படுத்துகிறது. பழுதுக்கும் பராமரிப்புக்கும் பெரும் தொகை செலவாகிறது. மேலும், ஏஐ மென்பொருளை தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகும். உதாரணமாக, நீங்கள் மறந்தாலும், உங்களது ஏஐ கருவியானது சரியான நேரத்துக்கு நீங்கள் மறந்த வேலையைச் செய்து முடிக்கும். அதுவே, மென்பொருள் செயலிழந்தாலோ, மேம்படுத்த மறந்தாலோ, அந்தக் குறியீடுகளை மீட்டெடுப்பது சவாலான ஒன்றாக அமையும்.மனிதர்களுக்கு மட்டுமேயான உணர்ச்சி, தார்மிகம், நிர்வாகத்திறன் போன்றவை ஏ.ஐ.யுடன் கூடிய இயந்திரங்களுக்கு இருக்காது. மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயந்திரங்கள் மிகவும் திறமையாக செயல்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், ஒரு இயந்திரம் எவ்வளவு புத்திசாலியாக மாறினாலும், அது ஒரு மனிதனாக பரிணமிக்க முடியாது.தற்போது, கணினித் துறை சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியும் மனித குலத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, “2030-ஆம் ஆண்டிற்குள், உலகின் தற்போதைய மனித உழைப்பில் 30 %-ஐ செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் எடுத்துக்கொண்டுவிடும். 2030-ஆம் ஆண்டிற்குள் 400 முதல் 800 மில்லியன் வேலைகளை தானியக்கத் தொழில்நுட்பம் தனதாக்கிக் கொள்ளும். 375 மில்லியன் மக்கள் வேலையை வேறுதுறைக்கு மாற்ற வேண்டி வரும்’ என்று தெரியவந்துள்ளது.மாற்றங்களுக்குள் நம்மை பொருத்திக்கொள்ளத் தயாராக வேண்டும், புதிய தொழில்நுட்பத்தைக் கற்று, புதிய வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும். 1980-களில் கணினி புரட்சி ஏற்பட்டபோதும், வேலைவாய்ப்பு இழப்பு பயம் ஏற்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அதன் வழிக்கு மாறினார்கள்.அதேபோல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தையும், மக்கள் தகவமைத்துக் கொள்வார்கள், தகவமைத்துக் கொள்ள வேண்டும்.