திகிலூட்டும் பேய் கதைகள் – 07- கேரளத்து குறளி..!

0
1439
ரமேஷ் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன். அவன், தனது கல்லூரி படிப்பினை, கேரளாவின் புகழ்பெற்ற நகரத்தின் மலைப் பகுதியில் அமைந்திருந்த கல்லூரியில் தொடர்ந்தான். 
அங்குள்ள விடுதி மாணவர்களோடு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டான். அங்கு தங்கியிருந்த சில நாட்களில் சில விஷயங்கள், அவனுக்கு முற்றிலும் விசித்திரமாக இருந்தது. 
அதில் ஒன்று, அங்கு உள்ள விடுதி மாணவர்கள் யாரும் இரவு நேரத்தில் துணையில்லாமல் தனியே வெளியே செல்வதில்லை. அவர்களும் இவனை தனியாக வெளியே செல்ல அனுமதிப்பதுமில்லை. சொந்த ஊரில் தனியாக சுற்றித்திரிந்த அவனுக்கு, இது வேடிக்கையாகவும் சற்று எரிச்சலை தூண்டக் கூடியதாகவும் இருந்தது. 
இது பற்றி யாரிடமாவது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தான். ஒரு சமயம் அவன் நண்பனிடம், “ஏன் இங்கு இரவில் தனியாக வெளியே செல்வதில்லை..? என்று கேட்டான். 
அதைக் கேட்ட அந்த மாணவன் சற்று பயத்தோடு, “இந்த மலைப்பகுதியில், இரவில் தனியாக செல்பவர்கள் வீடு திரும்புவதில்லை; மர்மமான முறையில் இறந்து கொண்டு வருகிறார்கள்.” என்று பதிலளித்தான். 
அப்படியா…! என்று சற்று நக்கலோடு ரமேஷ், அவனிடம் அது பற்றி விரிவாக சொல்லும்படி கேட்டுக்கொண்டான். 
அதற்கு அந்த மாணவன் இங்கு இரவில் சற்று மாறுபட்ட உருவத்தோடு “குறளி” என்று பேய் திரிவதாகவும், திருமணம் முடியாத இளைஞர்கள் தனியாக வந்தால் அவர்களது சங்கை கடித்து ரத்தத்தை உறிஞ்சி கொன்று விடுவதாகவும் நம்ப படுவதாக கூறினான். 
இதைக்கேட்டதும் ரமேஷ் சிரிக்க தொடங்கினான். உடனே அந்த மாணவன் ‘குறளி’ பற்றி பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை ஒன்றை காண்பித்தான். 
அதில் குறளி பற்றி பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. திருமணமாகாத இளம்பெண்கள் தீராத ஆசைகளோடு தற்கொலை செய்து கொண்டால் குறளியாக மாறுவதாகவும், தனியாக வரும் இளைஞர்களின் சங்கினை கடித்தது ரத்தத்தை உறிஞ்சி கொல்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. மேலும் குறளி அருகே நெருங்கும் பொழுது உளுந்தம் பயிறு வாசனை அடிப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. 
மேலும் அதில் குறளியின் கற்பனை உருவம் ஒன்று வரையப்பட்டிருந்தது. உடல் முழுதும் வெண்ன்மையாகவும், உடல் குட்டையாகவும், முகம் நீண்டும் கோரமான பற்களோடும், முடி நீண்டும் அதில் காணப்பட்டது. 
இதைக் கேட்டதும் ரமேஷ் மீண்டும் சிரிக்கத் தொடங்கினான். உடனே அந்த மாணவன், “நீ இதையெல்லாம் நேரில் கண்ட பிறகுதான் நம்புவாய். அப்பொழுதுதான் உனக்கு அது பற்றி தெரியும்” என்று கூறி சென்றான். 
அடுத்த இரண்டு நாட்களில் உள்ளூர் விடுமுறை ஒன்று அவசரமாக அறிவிக்கப்பட, உள்ளூர் மாணவர்கள் விடுதியில் இருந்து வீட்டிற்கு சென்றனர். 
ரமேஷ் மட்டும் விடுதியில் தனியாக தங்கி இருந்தான். அன்று இரவு திடீரென்று மின்சாரம் தடை பட்டு போனது. 
இரவு உணவை வாங்குவதற்காக சிறிய டார்ச் லைட் அடித்தபடியே விடுதியிலிருந்து சற்று தூரத்தில் உள்ள கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரமேஷ். 
கும்மிருட்டாக இருந்த அந்த மலைப்பகுதியில் ரமேஷின் காலடி ஓசை மட்டும் மெதுவாக கேட்டது. திடீரென்று காற்றின் ஓசை மெல்ல மாறத் தொடங்கியது. ரமேஷை யாரோ பின் தொடர்வது போல உணர, ரமேஷ் நடையின் வேகத்தை கூட்டினான். காற்றில் உளுந்தம் பயிறு வாசனை மெல்ல வீசத் தொடங்கியது. 
திடீரென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் கீழே விழ, அதை குனிந்து எடுத்தான் ரமேஷ். அந்த நேரத்தில் ரமேஷின் முன்பாக வெண்மையாக ஒரு உருவம் வந்து நிற்பதை ரமேஷ் உணர்ந்தான். அந்த பத்திரிக்கையில் பிரசுரித்தது போலவே அந்த உருவம் இருந்தது. 
இதைப் பார்த்து நடுங்கி போன ரமேஷ், அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். அடுத்த சில நிமிடங்களில் நிலைமை மோசமாகி போக அடுத்த நாள் செய்தித்தாளில் ரமேஷ் தலைப்புச் செய்தி ஆகிப்போனான்.