திகிலூட்டும் பேய் கதைகள் – 08 -பழிவாங்கும் காற்றாலை

0
3030
      கோதண்டபுரம் கிராமத்தை காற்றாலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஊரை சுற்றி இருக்கும் 70 காற்றாடிகளை சர்வீஸ் செய்யும் பொருட்டு, அருண் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்திருந்தான். 
    அந்த கிராமத்தின் எல்லையோரம் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். அன்றிரவு 70 காற்றாடிகளை பற்றிய கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அருண். அப்பொழுது அதில் A38 என்ற காத்தாடிக்கு மட்டும் வாட்ச்மென் இல்லாததையும், இதுவரை எந்த சர்வீஸ் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டு அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். 
அடுத்த நாள் காற்றாலைகளை அருண் நேரில் சென்று பார்வையிட்டு கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு செக்யூரிட்டியை அணுகி A38 என்ற காற்றாடி எங்கே இருக்கிறது..? என்று கேட்டான். 
அதற்கு அந்த செக்யூரிட்டி ஒரு நிமிடம் அதிர்ந்தபடி, “சார் அது பற்றி ஏன் கேக்குறீங்க..? என்றான். 
“ஒன்றுமில்லை” அந்த காற்றடிக்கு மட்டும் ஏன் இதுவரைக்கும் செக்யூரிட்டி போடாம இருக்காங்க..? ஏன் அதற்கு சர்வீஸ் பண்ணாம இருக்காங்க..? என்று கேட்டான். 
அதற்கு அந்த செக்யூரிட்டி, “சார், அது ஒரு விவகாரம் புடிச்ச காற்றாடி. இதுவரை வந்த காற்றாடிக்கு போட்ட இரண்டு செக்யூரிட்டி, சர்வீஸ் பார்க்க வந்த 3 பேர், பக்கத்துல மாடு மேய்க்க வந்தவர், அப்படி இப்படின்னு கிட்டத்தட்ட ஆறு பேர் இந்த காற்றாடி பக்கத்துல மர்மமான முறையில் இறந்து போனாங்க. 
அது மட்டும் இல்ல சார், அந்த காத்தாடி எப்போ சுத்தும், எப்போ நிக்கும் என்று யாருக்கும் தெரியாது. காற்றடிக்கும் நேரம் எல்லாம் காத்தாடியும் சுற்றிக் கொண்டிருக்கும் போது அந்த காத்தாடி மட்டும் சுத்தாது. காற்றில்லாத நேரத்தில் எல்லா காத்தாடியும் சுற்றிக் கொண்டிருக்கும் போது இந்த காத்தாடி மட்டும் சுத்தாது. எல்லாரும் இந்த காற்றாடியில் பேய் இருக்குன்னு சொல்றாங்க சார். அதனால நீங்களும் அது பக்கத்துல போகாம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் சார்.” என்றான். 
இதைக் கேட்டு சிரித்த அருண், “எல்லாம் விபத்துக்களாகத்தான் இருக்கும். சாலையில் தினமும் ஆயிரம் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கும். அதற்காக சாலையை பயன்படுத்தாமல் இருப்பார்களா..? எனக்கு இது மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. ஏற்கனவே காற்றாடிகள் நஷ்டத்தில் போறதா சொல்றாங்க. இந்த காற்றாடியை ஓடவிட்டால் தான் லாபத்தை சம்பாதிக்க முடியும். அதனால் இந்த முறை கட்டாயம் சர்வீஸ் பண்ண வேண்டும்” என்றான்.. 
“இது ரொம்ப ரிஸ்க்கான விஷயம் சார். நல்லா யோசிங்க” என்று அந்த செக்யூரிட்டி கூறினார். 
அதற்கு அருண், “எனக்கு அந்த காத்தாடி எங்கே இருக்கு என்று மட்டும் சொல். மிச்சத்தை நான் பார்த்துக்குறேன்” என்றான். அந்த செக்யூரிட்டி அந்த காற்றாடி இருக்கும் இடத்தை கைகாட்டி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 
காற்றாடியின் அருகில் சென்ற அருண் அதனை ஏறிட்டுப் பார்த்தான். இந்த காற்றாடி அருணை மிரட்டலோடு பார்த்தபடி இருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு வந்த ஒருவனோடு, அருண் அந்த காற்றாடியை நெருங்கி உள்ளே சென்றான். வெளிச்சம் இல்லாத படியால் டார்ச்லைட் அடித்தபடியே இருவரும் படிகளில் கவனமாக மேலே சென்றனர். 
மேலே சென்றதும் இருவரும் மெதுவாக ஆளுக்கொரு இறக்கையில் நடந்து அதன் விளிம்பினை அடைந்தனர். திடீரென்று அங்கு நடந்த சம்பவம் அருணுக்கு தூக்கிவாரிப்போட்டது. மற்றொரு விளிம்பில் நின்ற அந்த நபர் திடீரென்று, “நான் கீழே குதிக்கப் போகிறேன்; நான் கீழே குதிக்கப் போகிறேன்” என்று கத்த தொடங்கினான். 
கத்திக் கொண்டிருந்த நபர் திடீரென்று கீழே குதித்தான். பதட்டத்தோடு கீழே இறங்கி அருண் அவன் அருகே சென்றபோது, அவன் உடல் சிதைந்து இறந்து கிடந்தான். 
அப்போது அங்கு வந்த செக்யூரிட்டி, ” சார், நான் சொன்னதை நீங்க கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது” என்று கூறிச் சென்றான். 
அன்று இரவு, நடந்ததை யோசித்தபடியே படுத்திருந்தான் அருண். நள்ளிரவில் தூக்கம் வராததால் டீ போட்டு குடித்தபடியே மாடியில் நின்று தூரத்தில் தெரிந்த அந்த காத்தாடியை பார்த்தவாறு நின்றான். 
திடீரென்று அந்த நேரத்தில் காற்றின் ஓசை மாறியது. அந்த காத்தாடியை சுற்றி ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக காட்டியது. அடுத்த சில நொடிகளில் அந்த காற்றாடி வேகமாக சுற்றத் தொடங்கியது. அதன் பின்னர் தீப்பிடித்து வெடித்தது. அதை பார்த்து பயந்துபோன அருண் வேகமாக அந்த காற்றாடி இருக்கும் இடத்திற்கு தனது காரை எடுத்துக் கொண்டு சென்றான். 
அந்த காற்றாடியின் அருகே சென்றபோது தீ விபத்து ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்ததை பார்த்து மிரண்டு போனான் அருண். 
திடீரென்று காற்றில் காற்றாடி முறியும் படியான ஓசை கேட்க தொடங்கியது. அடுத்த சில நொடிகளில் பயங்கர சப்தத்தோடு காத்தாடி முறிந்து அவனுக்கு முன்பு வீழ்ந்தது. 
இதைப் பார்த்து பதறிப்போன அருணுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காற்றாடி நின்ற அதே இடத்தில் இப்பொழுது ஒரு கோரமான பெண் உருவம் நின்று கொண்டிருந்தது. இவனைப் பார்த்து சீறியது. அடுத்த கணத்தில் எங்கிருந்தோ வந்த தீ கோந்து அருண் மீது பட அப்படியே கீழே சாய்ந்தான். 
உயிர் பிரியும் முன்பாக அவனுக்கு அந்த இடத்தில் ஸ்கூட்டி சப்தம் ஒன்று கேட்க, இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த சில காட்சிகள் நினைவுக்குள் வந்தது. 
இரண்டு வருடங்களுக்கு முன் அதிகாலையில் சாலையில் ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண், இந்த காற்றாடி இறக்கைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து போனாள். வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்து அருண் அந்தப் பெண்ணையும் ஸ்கூட்டியையும் இந்த காற்றாடிக்காக தோண்டப்பட்ட இடத்தில் போட்டு மூடினர். அந்த சம்பவத்தை நினைத்து பார்த்து விட்டு கண்களை திறந்தான். 
கோர உருவத்தில் தன்முன் ஸ்கூட்டியோடு அந்தப் பெண் வந்து நிற்க, அவளைப் பார்த்தபடியே அருணின் உயிர் பிரிந்தது.