திகிலூட்டும் பேய் கதைகள் – 05- அவள் வருவாள்…!

0
1512
   வில்லியம், ஜான்சி என்ற தம்பதியினர், குழந்தை இல்லாததால் ஒரு கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தாயை இழந்த கை குழந்தையை தத்து எடுத்தனர். 
அந்த குழந்தையை எடுத்துச் செல்லும் நேரத்தில் அக்கிராமத்து கிழவி ஒன்று, அவர்களை வழிமறித்து, “வேணும்னா பாருங்க..! நீங்க இரண்டு நாட்களில் இந்தக் குழந்தையை திரும்ப கொண்டு வந்து இங்கு விடுவீங்க… ஏன்னா இவங்க நான் சொன்னபடி எதையும் செய்யல..” என்று கூறினாள். 
கிழவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் அந்த தம்பதியினர் குழந்தையை எடுத்துச் சென்றனர். குழந்தையை எடுத்துச் சென்ற அன்று இரவு வீடு முழுவதும் நிசப்தம் தோன்றியது. இரவு நேரத்தில் அழத் தொடங்கிய அந்த குழந்தையை எடுக்கச் சென்ற ஜான்சி, திடீரென்று முன்பு கருப்பு உருவம் ஒன்று தோன்றி மறைய ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். 
மீண்டும் குழந்தையை நெருங்கும் போதெல்லாம் ஏதோ ஒரு உருவம் வந்து வந்து செல்வது போல் ஜான்சிக்கு தோன்ற, இரவு நேரத்தில் அந்த குழந்தை எடுக்க பயந்துபோய் ஜான்சி ஒதுங்கியே நின்றாள். 
அடுத்தநாள் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு வீடு திரும்பினார்கள். அன்றிரவும் அவர்களை அந்த உருவம் விட்டபாடில்லை. இந்தமுறை ஜான்சியை அந்த உருவம் இரண்டு முறை தாக்கி, மாடிப்படிகளில் இருந்து கீழே உருட்டி விட்டது. 
அக்கிழவி சொன்னபடியே நடப்பதாக உணர்ந்த அந்த தம்பதியினர், அந்த குழந்தையை ஒப்படைக்க அந்த கிராமத்திற்கு வந்தனர். 
கிராமத்திற்கு வந்திருந்த அந்த தம்பதியினரை மீண்டும் பார்த்த அந்த கிழவி, “இவங்க நான் சொன்னது செஞ்சிருந்தா.. இதெல்லாம் நடந்திருக்காது..” என்று கூறி சிரித்தபடியே நான் சொன்னதெல்லாம் நடந்ததா..? என்று கேட்டாள். 
நடந்தவற்றை அந்த தம்பதியினர் அந்த கிழவியிடம் எடுத்துக் கூறினர். கிழவி சிரித்தபடியே மீண்டும் அந்த வசனத்தை கூறத் தொடங்கினாள். உடனே அந்த தம்பதியினர் அந்தக் கிழவியிடம், “நீங்க என்ன சொன்னீங்க … அவங்க என்ன செய்யாமல் விட்டாங்க.. கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க..” என்று கேட்டதும் அந்த கிழவி நடந்த விஷயத்தை கூற தொடங்கினாள். 
“இந்த குழந்தையின் தாய் வசந்தி பிரசவத்தின்போது மரணித்தாள். அவளை அடக்கம் செய்யும் முன்பாக நான் ஊர்க்காரர்களிடம் சென்று பிரசவத்தில் இறந்த பெண்ணுக்கு மட்டும் செய்யும் சில சடங்குகளை செய்ய சொன்னேன். 
அதாவது ஒரு பெண் பிரசவத்தில் இறந்தால், அப்பெண்ணின் உள்ளங்கையை அரிவாளால் கீறி விட்டு, அதன் பின் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். அதாவது இப்படி கீறி விட்டால், அந்தப் பெண் பேயாக வந்து அந்த குழந்தையை எடுக்க முயலும்போது அவள் கை காயங்கள் அவளை எடுக்க விடாமல் தடுக்கும் என்பதால் அந்த ஆவி குழந்தையை நெருங்காது என்பதற்காக இந்த சடங்குகளை செய்து வருகிறார்கள் என்றாள். 
மேலும் சுடுகாட்டிற்கு அந்த பெண்ணை எடுத்துச் செல்லும் பொழுது ஒரு படி கடுகினை சுடுகாட்டிற்கு செல்லும் வழி எல்லாம் விதைத்துக்கொண்டே சென்று அந்தப் பெண்ணை அடக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த பெண்ணின் ஆவி ஒவ்வொரு கடுகாய் பொறுக்கி வீட்டிற்கு வருவதற்குள் எட்டு நாட்கள் முடிந்து இருக்கும். அதற்குள் அவளது ஆன்மா தனது சக்தியை இழந்து இருக்கும். 
இந்த காரணத்திற்காகத் தான் பிரசவத்தில் இறக்கும் பெண்களை இந்த இரு சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வார்கள். ஆனால் நான் சொன்னதை போல் இவர்கள் செய்யாததால் அந்த ஆவி மீண்டும் வந்து கொண்டே இருக்கும்” என்றாள். 
மேலும் அந்த கிழவி, “இந்த குழந்தையை நீங்கள் எட்டு நாட்களுக்கு பின் வந்து எடுத்துச் செல்லுங்கள். அதற்கு அப்புறம் அந்த ஆவியின் சக்தி குறைந்து இருக்கும். அதன் பின்னர் அவளை கட்டுப்படுத்திவிடலாம்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தாள் அந்த கிழவி. 
அடுத்த நாள் மதிய வேளையில் கரண்ட் பில் அளவிடுவதற்காக வந்த அதிகாரி ஒருவர், வசந்தியின் வீட்டுக்குள் அளவை குறிப்பதற்காக உள்ளே நுழைந்திருக்கிறார். அளவை குறித்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது அந்த குழந்தையை எடுத்து யாரோ தாலாட்டுவது போல தோன்ற அந்தத் தாயையும் குழந்தையையும் பார்த்தபடியே வெளியே வந்திருக்கிறார். 
வெளியே வந்து இந்த வீட்டில் யார் இறந்தது..? என்று கேட்க, அக்குழந்தையின் தாய் என்று அவர்கள் கூற, பதறிப்போன அந்த அதிகாரி அவர்களை அழைத்தபடி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அந்த பெண்ணின் ஆவி கருப்பு உருவமாக தோன்றி மறைந்து போனது.