ஐஸ் குச்சி-சிறுகதை

0
199

அது 2001 ஆம் ஆண்டு.. பழமை நிறைந்த உலகம், மிகப்பெரிய மாற்றத்திற்கு தன்னை தயாராக்கிக் கொண்டிருந்தது. நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை. காலை ஒன்பது மணியானபோதிலும் அன்று நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் சனி, ஞாயிறு என்றால் எட்டு மணி வரை தூங்கும் வழக்கம் எனக்கு உண்டு. 

முந்தைய நாள் இரவு, ஊரில் திரை கட்டி படம் போட்டதால் படம் பார்த்து தூங்க நேரம் ஆகிவிட்டது. அந்த சோர்வில் அன்று காலையில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென யாரோ என்னை எழுப்புவது போல் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தேன். என் முன்னே என் அம்மா நின்று கொண்டிருந்தார்கள். 

வயலில் வேலை பார்க்கும் அப்பாவிற்கு காபி கொண்டு போ என்று அறிவுறுத்த, நானும் வேண்டா வெறுப்பாய் எழுந்து, முகத்தை கழுவி, அப்பாவிற்கு காபி கொண்டு செல்ல தயாரானேன். காபி கொடுத்துவிட்டு திரும்பும் பொழுது தான், அன்று சனிக்கிழமை என்ற ஞாபகமே எனக்கு வந்தது. அந்த கணம் முதல் என் மனதுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த பரபரப்பு ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் வருவதுண்டு. அந்த பரபரப்போடு வீட்டிற்கு ஓடோடி வந்தேன். 

வீட்டிற்குள் வந்ததும் கடிகாரத்தை பார்த்தேன். கடிகாரம் 10 மணியை காட்டியது. இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது. அதற்குள் அவர் வந்து விடுவார். யார் அவர்? வேறு யாருமல்ல.. ஐஸ்காரர் தான். ஒவ்வொரு சனிக்கிழமையும் மதிய வேளையிலும் மிதிவண்டியில் பெட்டியை கட்டிக்கொண்டு ஐஸ்காரர் வருவது வழக்கம். 

அன்றைய காலகட்டங்களில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது திருவிழாக்களிலோ மட்டுமே ஐஸ் கிடைக்கும் என்பதால் ஐஸ் என்பது எங்களுக்கு வரப்பிரசாதமாக தோன்றும். அந்த நாட்களுக்காக நாங்கள் தவம் இருப்போம். இன்றைய காலகட்டத்தில் தெருக்கள் தோறும் உள்ள கடைகளில் ஐஸ் கிடைப்பதால் அதன் மகத்துவம் இன்றைய கால குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த ஐஸ் வாங்கி சாப்பிடுவதற்கு நான் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அன்று ஒரு ஐஸ் வாங்கி சாப்பிட்டால் தான் அந்த வாரம் முழுமை அடைந்து விட்டது என்று நினைத்துக் கொள்வேன். ஒரு சில சனிக்கிழமைகளில் எனக்கு அது மிக எளிதாக கிடைக்கும். உறவினர்கள் தந்த காசையோ அல்லது வேப்பமுத்து பொறுக்கி சேர்த்த காசையோ நிலவரையில் பத்திரப்படுத்தி ஐஸ் வாங்குவதற்காக வைத்திருப்பேன். 

ஆனால் இன்று என்னிடம் எந்த காசும் இல்லை. இன்னும் சிறிது நேரத்திற்குள் ஐஸ் காரர் நிச்சயம் வந்துவிடுவார். எனக்கு தெரியும் அவர் மழைக்காலங்களிலோ அல்லது என்னிடம் காசு இருக்கும் நாட்களிலோ மட்டும் அவர் வர மாட்டார். இன்று என் கையில் காசு இல்லாததால் நிச்சயம் அவர் வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்தது போலவே ஊர் எல்லையில் அவர் வருவதற்கான ஓசை கேட்டது.. அவர் வரும்போது கூஜாவின் மூடி போன்ற (உடுக்கை மாதிரியான) தகரத்தினால் செய்யப்பட்ட ஒன்றினை வைத்து ஒலி எழுப்பிக் கொண்டே வருவார்.. 

அந்த ஒலியினை கேட்டதும் எனக்குள் பதற்றம் ஏற்பட்டது. இன்று எப்படி ஐஸ் வாங்க போகிறோம் என்ற எண்ணம் என்னை ஆட்கொள்ள தொடங்கியது. ஐஸ்காரர் ஊருக்குள் பிரவேசித்து விட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அந்த ஒலி எனக்கு நெருக்கமாக ஒலிப்பது போல் தோன்றியது. 

ஐஸ் வாங்குவதற்கு காசை முதலாவதாக என் அப்பா அல்லது அம்மாவிடம் கேட்கலாம் என தோன்றியது. பெரும்பாலான நேரங்களில் அவர்களிடம் கொடுப்பதற்கு காசு இருக்காது. இருந்தாலும் ஐஸ் வாங்குவதற்கு என்று கேட்டால் நிச்சயம் கிடைக்காது. ஏனெனில் வருடத்தில் நான்கு சீசன்களிலும் எனக்கு சளி பிடிக்கும் என்பதால் நிச்சயம் ஐஸ் வாங்குவதற்கு காசு தர மாட்டார்கள். 

அழுது அடம் பிடித்து வாங்கி விடலாம் என்றால் அதற்கான சூழல் அன்று இல்லை. அதற்கு முந்தைய நாள் தான், நான் பக்கத்து வீட்டில் என்னோடு படிக்கும் தோழி ஒருத்திக்கு கத்தரிக்காயை அவித்த முட்டை என்று ஏமாற்றி கொடுத்த விவகாரத்தில், என்னால் இரண்டு குடும்பத்திற்கும் பயங்கர வாக்குவாதம் நடந்திருந்தது. வாக்குவாதம் முடிந்ததும் நான் என் அப்பாவிடம் சென்று “கத்தரிக்காய் கொடுத்தது ஒரு குற்றமா அப்பா? ” என்று கேட்க என் மீது முதல் கொலைவெறி தாக்குதல் அன்று நடந்தது. பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டி அடித்தது போல் அன்று எனக்கு அடி கிடைத்தது. ஆதலால் அப்பாவிடம் காசு கேட்டு அடம் பிடிக்க வேண்டும் என்ற முதல் திட்டத்தினை கைவிட்டுவிட்டேன். 

அடுத்ததாக பெரியப்பாவிடம் கேட்டு வாங்கலாம் என்று பெரியப்பா வீட்டை நோக்கி ஓடினேன்.  அவர்கள் வெளியூர் சென்றிருப்பார்கள் போலும். வீடு பூட்டி கிடந்தது. ஐஸ் வாங்குவதற்கான இரண்டாவது திட்டமும் தோல்வியில் முடிந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நேரம் செல்லச் செல்ல எனக்கு என்னவோ போல் இருந்தது. 

விரைந்து என் வீட்டை நோக்கி ஓடினேன். நிலவரையில் ஏதேனும் இருக்கிறதா என்று துலாவி பார்த்தேன். எதுவும் இல்லை. அதில் சவரம் செய்துவிட்டு வைக்கப்பட்டிருந்த பிளேடு கையை காயப்படுத்தியது தான் மிச்சம். கசிந்த ரத்தத்தை துடைத்த பின்னர் மேலே வைக்கப்பட்டிருந்த தகரப் பெட்டியை மெதுவாக கீழே இறக்கி பரிசோதித்து பார்த்தேன். அதிலும் எதுவும் இல்லை.

கடைசியில் ஒரு நோட்டு ஒன்று இருந்தது. அந்த நோட்டின் மத்தியில் 50 ரூபாய் தாள் இருப்பது என் கண்ணில் பட்டது. அந்த நோட்டில் இருந்த கணக்கு வழக்குகளை பார்க்கும் பொழுது நிச்சயமாக இது வட்டிக்கு வாங்கிய பணத்திற்கான வார வட்டியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதை எடுத்து ஐஸ் வாங்கினால் நிச்சயம் மீண்டும் ஒருமுறை கம்பத்தில் கட்டி அடி வாங்க வேண்டி இருக்கும் என்பதால் எடுத்த இடத்தில் அப்படியே வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். 

அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசிக்க, திடீரென புதிய யோசனை ஒன்று வந்தது. எங்கள் ஊரின் மேற்புறம் பத்துக்கும் மேற்பட்ட வைக்கோல் போர் வைக்கப்பட்டிருக்கும். அதில் யார் வீட்டு பெட்டைக்கோழியாவது முட்டை இட்டிருக்கும். சில நேரங்களில் அந்த முட்டை எங்களது கைகளில் கிடைப்பதுண்டு. பசி இருந்தால் அதை எங்களுக்கு உணவாக்கிக் கொள்வோம் அல்லது கடையில் சென்று விற்று விடுவோம். இன்று முட்டை ஏதேனும் கிடைக்குமா என்ற எண்ணத்தோடு வைக்கோல் போரை நோக்கி ஓடினேன். ஓடிய வேகத்தோடு இரண்டு வைக்கோல் போரை சுற்றியும் முட்டை இருக்கிறதா என்று பரிசோதித்தேன். எதுவும் கிடைக்கவில்லை அடுத்து மூன்றாவது வைக்கோல் போரை நெருங்கியபோது பாம்போ அல்லது பாம்பு மாதிரியான கயிறோ ஏதோ ஒன்று கண்ணில் பட ஐஸை விட உயிர் முக்கியம் என்று நினைத்துக் கொண்டு தலை தெறிக்க வீட்டை நோக்கி ஓடி வந்தேன்.

எப்படியாவது ஐஸ் வாங்கி விட வேண்டும் என்ற உத்வேகத்தோடு மீண்டும் மீண்டும் யோசிக்க, பிறந்தது ஒரு புதிய யோசனை . வேகமாக எங்கள் வீட்டிற்கு முன்பாக இருந்த பெட்டிக்கடையை நோக்கி ஓடினேன். மதிய வேளை என்பதால் பெட்டிக்கடை பூட்டி இருந்தது. யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, பெட்டிக்கடையின் கீழே உள்ள இடைவெளியில் உள்ள மணல் பரப்பில் கையை விட்டு அனாக்கள் ஏதும் தென்படுகிறதா என்று பார்த்தேன். ஏனெனில் சில நேரங்களில் யாரேனும் காசுகளை தவற விட்டு இருப்பார்கள். அப்படி தவறவிட்ட காசுகள் எனக்கும், என் நண்பர்களுக்கும் சில நேரங்களில் கிடைத்திருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு தான், ஏதேனும் காசு இருக்கிறதா என்று கையால் சல்லடை போட்டு கொண்டிருந்தேன். எதுவும் கிடைத்தபாடில்லை. ஏமாற்றத்தோடு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். 

இன்று நமக்கு ஐஸ் கிடைக்காது போல என்று நினைத்தேன். ஆனாலும் என் மனதுக்குள் நமக்கு ஒரு குட்டி அதிர்ஷ்டம் ஒன்று உண்டு என்று நினைத்துக் கொண்டேன். பள்ளியில் மதிய உணவு வாங்க வரிசையில் நிற்கும் பொழுது, நான்கு நபர்களில் ஒருவருக்கு சாப்பாடு வைப்பவர் அந்த கரண்டியினை சாதத்தோடு தட்டில் வழித்து விடுவார். அவ்வாறு செய்வதால் ஒரு பிடி சாதம் அதிகமாக கிடைக்கும். அந்த வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் அந்த ஒரு பிடி சாதத்திற்காக தன் தட்டில் கரண்டியை வழித்து விட மாட்டார்களா என்று ஏங்குவார்கள்.. வரிசையில் நான் எங்கு நின்றாலும் எனக்கு அந்த ஒரு பிடி சாதம் பெரும்பாலான நேரங்களில் கிடைத்திருக்கிறது. அந்த அதிர்ஷ்டம் இன்று எனக்கு ஐஸ் வாங்கி கொடுக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதற்குள் ஐஸ்காரர் எங்கள் ஊரின் ஒரு எல்லையில் இருந்து அடுத்த எல்லைக்கு சென்று விட்டார். இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. அதற்குள் நான் ஐஸ் வாங்கியாக வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க, அந்த நேரத்தில், யாரோ “டீக்கடைக்கு போய் வருகிறேன்” என்று சொல்வது என் காதில் கேட்டது.. அந்த நொடி எனக்குள் புதிய யோசனை ஒன்று தோன்ற, வேகமாய் அந்த டீக்கடைக்காரரின் எருக்குழியை நோக்கி ஓடினேன். 

டீக்கடைக்காரரின் எருக்குழியில், தேயிலையை எடுத்துக் கொண்டு வீசி எறியப்பட்ட தேயிலை கவர் கிடக்கும். அந்த கவருக்குள் சில நேரங்களில் கூப்பன் வைத்திருப்பார்கள். அந்த கூப்பனை கடையில் கொண்டு கொடுத்தால் அந்த கூப்பனில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையை நமக்கு தருவார்கள். அந்த கூப்பனுக்காக தான் நான் இப்பொழுது அந்த எருக்குழியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன். 

அங்கு சென்று எருக்குழியை பார்த்த போது, அதில் இறங்கவா வேண்டாமா என்று ஒரு தயக்கம் எனக்குள் ஏற்பட்டது.  ஏனெனில் அந்த தெருவின் சாக்கடை நீர் அனைத்தும் எருக்குழியில் கலந்து கொண்டிருந்தது. சுரங்கத்தில் இறங்கினால் தான் தங்கம் எடுக்க முடியும் என்பது போல, எருக்குழியில்  இறங்கினால் தான் எனக்கு ஐஸ் கிடைக்கும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நான் இறங்கி விட்டேன். மேற்புறமாய் கிடந்த தேயிலை கவர்களை வேகவேகமாய் எடுத்து புரட்டிப் பார்த்தேன். நான்கு கவர்களை பிரித்து ஏமாந்து போன எனக்கு ஐந்தாவது கவரில் கூப்பன் இருப்பது போல தென்பட்டது. வேகமாக கவரை கிழித்து கூப்பனை கையில் எடுத்தேன். அதில் ஒரு ரூபாய்க்கான கூப்பன் இருந்தது. அந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஏதோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது போன்ற ஒரு உணர்வு. 

கூப்பனை கொண்டு வேகமாக கடைக்கு ஓடினேன். எங்கள் தெருவில் கடை பூட்டி கிடந்ததால் பக்கத்து தெருவிற்கு ஓடினேன். அங்குள்ள கடையில் கூப்பனை கொடுத்து ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டேன்.. மிகுந்த மகிழ்ச்சியோடு ஐஸ்காரர் நின்றிருந்த திசையை நோக்கி வேகமாக ஓடினேன். ஆனால் நான் ஊர் எல்லை சாலையில் சென்று நின்று பார்த்தபோது  ஐஸ்காரர் ஊர் எல்லையை  தாண்டி வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்தார். மிகுந்த ஏமாற்றத்தோடு அந்த இடத்தில் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தேன். கையில் வைத்திருந்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஏளனத்தோடு ஒரு முறை பார்த்தேன்

பின்னர் கனத்த இதயத்தோடு, என்னை நான் நொந்து கொண்டே வீடு திரும்பினேன். என் வீடு பூட்டி இருந்ததால் வீட்டிற்கு பின்புறமாக இருந்த தாத்தா வீட்டிற்கு சென்றேன். கதவருகே சென்றதும் என் தாத்தா எனது வருகையை உணர்ந்தவராய், “இவ்வளவு நேரம் எங்கு சென்றாய்; உன்னை தான் தேடிக் கொண்டிருந்தேன்” என்றார். மேலும் அவர், “நேற்று ஊசி போட்டு கையில் வீக்கம் இருந்ததால் அதற்கு ஒத்தனம் கொடுப்பதற்காக ஐஸ் ஒன்று வாங்கினேன். டம்ளரோடு ஐஸ் வீக்கத்தின் மீது வைத்து ஒத்தடம் கொடுத்துவிட்டு அந்த ஐஸை உனக்கு பிடிக்குமென்று டம்ளரில் உனக்காக வைத்திருந்தேன்” என்று கூறிக்கொண்டே அவர் கையில் வைத்திருந்த டம்ளர் ஒன்றினை கையில் கொடுத்தார். ஆசையோடு அந்த டம்ளரை கையில் வாங்கி பார்த்த போது, அதில் எனக்கு பிடித்த சேமியா ஐஸ் கொஞ்சம் உருகிய நிலையில் இருந்தது. 

தாத்தாவைப் பார்த்து எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த நான் வேகமாக டம்ளரில் இருந்த உருகிய ஐஸ் நீரை குடித்தேன். பின்னர் ஐஸை கையில் எடுத்துக் கொண்டு “தாத்தா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு தாத்தா வீட்டை விட்டு வெளியே வந்தேன். கையில் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அடுத்த வாரம் ஐஸ் வாங்குவதற்கு நிலவரையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு, ஐஸை சப்பிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.