எனது மிதிவண்டி-சிறுகதை

0
587

மலையனூர் அழகான ஒரு சிற்றூர். படித்தவர்கள் அதிகமாய் இல்லாமல் இருந்ததால் என்னவோ அந்த ஊர் மட்டும் எங்கும் குப்பையோ நெகிழியோ இல்லாமல் தூய்மையாய் இருந்தது. அங்கு 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அனைவரும் வறுமைக்கு மத்தியில் கூலி தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர்கள். நாடெங்கும் நாகரிகம், தொழில்நுட்பம் வளர்ச்சியுற்ற போதிலும், இன்னும் அந்த கிராமத்திற்கு முறையான வசதிகளென்று ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை. குழந்தைகள் படிப்பதற்கு அருகில் உள்ள தாமரைக் குளம் என்னும் ஊருக்கு 3கி.மீ நடந்து சென்று தான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. 

மலையனூரில் மீனாட்சி அம்மாள் தனது இரண்டு குழந்தைகளோடு கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தாள். கணவனை விதி கொண்டு சென்றதால், அரும்பாடு பட்டு குழந்தைகளை வளர்த்து வந்தாள். கதிரவன் தாய் சொல்லை மதிக்கும் (11ஆம் வகுப்பு படிக்கும்) மூத்த பிள்ளை. பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததால் இவன் 5 வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கப்பட்டதால் சகமாணவர்களுக்கு இருக்கும் அரும்பு மீசையோ கம்பீரக் குரலோ இன்னும் இவனிடம் இல்லை. 

அன்று ஒருநாள் கதிரவன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். எப்படி அவனுக்கு தூக்கம் வரும்? அவனது பல ஆண்டு கனவு, விடிந்தால் நிறைவேற இருக்கிறது. ஆம்…விடிந்தால் அவனுக்கு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி கொடுக்க இருக்கிறார்கள். சிறு வயது முதலே மிதிவண்டி மீது தீராத ஆசை. வறுமையில் இருந்ததால் அவனுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. 

தந்தை இருக்கும் வரை குழந்தைகளுக்கு எட்டாக்கனி என்று ஒன்று இருப்பதில்லை. 

குழந்தைகளின் எட்டாக்கனி எப்பொழுதும் தந்தையால் நிறைவேற்றி வைக்கப்படும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் கதிரவனுக்கு இல்லை.  

எட்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றால் சைக்கிள் வாங்கித் தருவதாக அவனது மாமா இராமலிங்கம் கூறியிருந்தார். அதைக் கேட்டு கதிரவன் உற்சாகத்தோடு படித்து முதல் மதிப்பெண் பெற்ற போது இராமலிங்கம் உயிரோடு இல்லை. விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார். 

அடுத்து, பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, தன் தாய் மீனாட்சி சைக்கிள் வாங்கித் தருவதற்காக குழுவில் பணம் சேர்த்து வருவதாக கூறியிருந்தாள். ஆனால் அதுவும் மகளின் எதிர்பாராத மருத்துவச் செலவுக்கென்று ஆகி போனதால் அவளாலும் வாங்கி கொடுக்க இயலவில்லை.. 

கதிரவன் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். அது நான்கை தாண்டவில்லை… மீண்டும் புரண்டு படுத்தான். மிதிவண்டி வந்துவிட்டால் இனிமேல் நடந்து செல்லத் தேவையில்லை என்றும், புத்தகப்பையை சுமந்து சுமந்து தோள்பட்டை வலியோ இனி வரப்போவதில்லை என்றும் நினைத்து கொண்டான். மிதிவண்டியின் முன்புற கூடையில் இனிமேல் டிபன் பாக்ஸ் வைத்துக் கொள்ளலாம். இனிமேல் டிபன் பாக்ஸ் சூட்டினால் தனது கை பொத்து போகாது என்று நினைத்துக் கொண்டான். பின் சற்று  நேரம் மிதிவண்டியினை எங்கு நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். பின்னர், தினமும் தூசி படாமல் மிதிவண்டியினை துடைக்க வேண்டும் என்றும், வாரம் ஒரு முறை பம்பு செட்டில் கொண்டு மிதிவண்டியினை கழுவ வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். கடைத்தெருக்கு சென்று வர யாரும் மிதிவண்டியினை கேட்டால் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் யாருக்கெல்லாம் கொடுக்க கூடாது என்று மனதில் பட்டியல் ஒன்று தயார் செய்து கொண்டான். . அப்படியே பலவித சிந்தனைகளோடு தூங்கிப் போனான்.. 

பொழுது விடிந்தது.. மற்ற நாட்களை விட இன்று சீக்கிரமே பள்ளிக்கு புறப்பட்டான். புத்தக பையை எடுத்தான். அம்மாவிடம் இன்று தான் நான் நடந்து பள்ளி செல்லும் கடைசி நாள். நாளை முதல் எனது மிதிவண்டியில் பள்ளி செல்வேன் என்று கூறினான். மகனின் சிறிய மகிழ்ச்சியை கூட பெரிதாக கொண்டாடும் மீனாட்சி அம்மாள் முகத்தில் இந்த முறை கவலையே குடி கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. முகம் மலர்ச்சியுடன் முன் நின்ற கதிரவனை ஏறிட்டுப் பார்த்து பள்ளிக்கு வழி அனுப்பி வைத்தாள்

பம்பரமாக பள்ளிக்கு சென்றான் கதிரவன். அலுவலகத்திற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை பார்த்து பரவசமடைந்தான். இந்த கூட்டத்திற்குள் நமது வண்டி எங்கே இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டான். “ஏய் எனது மிதிவண்டியே, நீ எங்கு இருக்கிறாய் என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டான்… 

மிதிவண்டி பக்கம் யாரும் போகாதீங்க என்ற குரல் கேட்க, அந்த இடத்தை விட்டு பிரிய மனம் இல்லாமல் வகுப்பறைக்கு சென்றான். . சக மாணவர்களோடு உற்சாகமாய் மிதிவண்டி பற்றிய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தான். 

மிதிவண்டி கொடுக்கும் நேரம் வந்தது. வகுப்பறையில் இருந்து சக மாணவர்களோடு கதிரவன் அலுவலகம் முன்பு அழைத்துச் செல்லப்பட்டான். . அந்த இடம் ஏதோ அரசியல் கூட்டம் நடைபெறுவது போல வெள்ளை வேஷ்டிக்காரர்கள் குழுமி இருந்தார்கள். கதிரவன் சக மாணவர்களோடு, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக அமர்ந்தான். வெள்ளை வேஷ்டிக்காரர்கள் மேடைக்கு ஒவ்வொருவராக வந்து பள்ளிக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். . கதிரவன் “சீக்கிரம் பேச்சினை முடிச்சு, மிதிவண்டியை குடுங்கப்பா” என்று எரிச்சலோடு முனுமுனுத்துக் கொண்டான். வழக்கம்போல முதல் மூன்று மாணவர்களுக்கு மிதிவண்டியினை கொடுத்து போட்டோ எடுத்து விட்டு வெள்ளை வேஷ்டிக்காரர்கள் அந்த இடம் விட்டு நகர்ந்து சென்றார்கள். 

வகுப்பு ஆசிரியர் ஒவ்வொருவராய் வரிசைப்படி எழுந்து வந்து கையெழுத்திட்டு மிதிவண்டியினை பெற்றுச் செல்லுமாறு அழைக்க கதிரவன் விரைந்து எழுந்து சென்றான். 

வகுப்பு ஆசிரியர் மிதிவண்டியினை வழங்க, பல ஆண்டு கனவு நிறைவேறுவதை எண்ணி பெருமகிழ்ச்சியோடு மிதிவண்டியினை பெற்றுக் கொண்டான். ஆசையோடு மிதிவண்டியினை வாங்கி, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து மிதிவண்டிக்கு ஒரு முத்தமிட்டான். பின்னர் மிதிவண்டியினை உருட்டி சென்று அருகில் உள்ள மிதிவண்டி கடையில் காற்று நிரப்பி, உற்காகத்தோடு தனது முதல் பயணத்தினை தொடங்கினான். 

வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடமும் தங்கையிடமும் மிதிவண்டியினை காட்டி பெருமகிழ்ச்சி அடைந்தான். வீட்டில் பூசைக்கு வைக்கப்பட்டிருந்த சந்தன வில்லைகளை எடுத்து நீரில் கரைத்து சைக்கிள் மீது தெளித்தான். அன்று இரவு முழுவதும் அதைப்பற்றியே அம்மாவிடமும் தங்கையிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

 அன்று இரவு கழிந்தது. அடுத்த நாள் காலையில்  புத்தகப் பையை எடுத்துக்கொண்டு மிதிவண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அங்கு சென்று பார்த்த பொழுது மிதிவண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் மிதிவண்டி இல்லை. வீட்டை சுற்றி தேடிப் பார்த்தான். ஆனால் மிதிவண்டி எங்கும் இல்லை.

அந்த நேரத்தில் வீட்டிற்கு மேற்புறம், தன் தாய் யாரிடமும் விவாதம் செய்து கொண்டிருப்பதை கேட்ட கதிரவன் வெளியே வந்து பார்த்தான். அங்கு கதிரவனின் மிதிவண்டியோடு, கந்துவட்டி குருசாமி நின்று கொண்டிருக்க, அவனோடு தான், கதிரவனின் தாயார் தர்க்கம் செய்து கொண்டிருந்தாள். ஒன்றும் புரியாதவனாய் கதிரவன் அருகில் சென்று பார்த்தான். அப்பொழுது குருசாமி கதிரவனிடம், “உன் தாயார் வட்டிக்கு என்னிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தாள்.  அதற்கு இதுவரை வட்டியும் தரவில்லை.  ஆதலால் கடனில் பாதிக்கு நான் இந்த மிதிவண்டியினை எடுத்துச் செல்கிறேன். உன் தாயார் என்னை தடுக்கிறாள்” என்றான். 

உடனே மீனாட்சி அம்மாள் குருசாமியிடம், “ஐயா, கொஞ்ச நாள் கெடு கொடுங்கள் நிச்சயமாக பணத்தினை திருப்பித் தருகிறேன்” என்றாள்.  ஆனால் எதையும் கேட்காதவனாய் குருசாமி மிதிவண்டியினை எடுத்துச் சென்றான். தெரு மூலை வரை தன் மிதிவண்டி செல்வதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

பரிதவித்து நின்று கொண்டிருந்த மீனாட்சியம்மாளை ஏறிட்டு பார்த்தபடி, கதிரவன் தனது புத்தக பையை தோளில் போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினான்.