ஹிரோஷிமா தினம்..!!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் “லிட்டில் பாய்” என்ற பெயரில் அமெரிக்கா அணுகுண்டை வீசிய கொடூர சம்பவம் நடந்தது.
இந்த வெடிகுண்டு தாக்குதல் 1945 இல் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நோக்கத்துடன் செய்யப்பட்டது. இந்த நாள் அமைதி மற்றும் அணுசக்தி மற்றும் அணு ஆயுதங்களின் ஆபத்து பற்றி விழிப்புணர்வை பரப்ப நினைவுகூரப்படுகிறது.
இந்தியா
நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு – மாநிலங்களவையில் தகவல்..!!
நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
பிரதமரின் பாரத மக்கள் மருத்துவத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2 ஆம் தேதி வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 10,500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும்.
அரசு மருத்துவமனை வளாகங்களில், கடந்த 2 ஆம் தேதி வரை 1,012 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மக்கள் மருந்தக உரிமையாளா்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது.
பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்கள் மற்றும் அவற்றுக்கான மூலப் பொருள்களின் சா்வதேச விலை சமீபத்தில் அதிகரித்தது. இந்த விலை உயா்வால் விவசாயிகளுக்கு இன்னல் ஏற்படுவதைத் தவிா்க்க, டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி), பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.14,775 கோடி மானியத்தை அறிவித்தது. அதோடு யூரியாவின் அதிகபட்ச விலை 45 கிலோ மூட்டைக்கு ரூ.242 என விலை நிா்ணயம் செய்யப்பட்டது.
7 மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் தயாரித்த நேனோ நைட்ரஜன் யூரியாக்களின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் நேனோ நைட்ரஜன் மூலம் உற்பத்தி அதிகமாக இருந்ததும் நைட்ரஜன் சேமிப்பு 50 சதவீதம் இருந்ததும் கண்டறியப்பட்டது.
கண்டுபிடிப்பு
நீரிழிவு நோயாளிகளின் காயங்களுக்கு கட்டுப்போட நவீன பேண்டேஜ் – இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கம்..!!
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் நாள்பட்ட காயங்களுக்கு கட்டுப்போட நவீன பேண்டேஜை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.
இதில் ‘அகா்’ என்ற கடல்பாசி செடியிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை பாலிமா் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளின் காயங்கள் மற்றும் நாள்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மிகச் சிறந்ததாக உள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பேண்டேஜுக்கு குறைந்த செலவு ஏற்படுகிறது. மக்கக்கூடிய, காயத்தை ஆற்றக்கூடிய இந்த பேண்டேஜை டாக்டா் விவேக் வா்மா தலைமையிலான கான்பூா் ஐஐடி குழுவினா் உருவாக்கியுள்ளனா். இதில் அயோடின் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மேம்பட்ட தயாரிப்பு தொழில்நுட்பங்கள் திட்டம் உதவியது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு தேசிய காப்புரிமை பெறப்பட்டுள்ளது. நவீன பேண்டேஜ்கள் தயாரிப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதால், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பானது புதிய வா்த்தகத்துக்கு வழிவகுத்துள்ளது.
விளையாட்டு
ஒலிம்பிக்கில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோ முதல் பதக்கம்..!!
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோ (Burkina Faso) முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் டிரிபிள் ஜம்ப் போட்டியில் Burkina Faso வீரர் Hugues Fabrice Zango கலந்து கொண்டார். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் Hugues Fabrice Zango 17 புள்ளி 47 மீட்டர் தூரம் தாண்டி 3 ஆவது இடம் பிடித்து வென்கலம் வென்றார்.
மேலும் பர்கின பாசோ நாட்டிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
விளையாட்டு
விளையாட்டுத் துறை உயரிய விருதான கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்..!!
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர், மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா என மாற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஹாக்கி வரலாற்றில் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் தயான்சந்த், ஒலிம்பிக் போட்டிகளில் 1928, 1932 மற்றும் 1936ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தங்கம் வெல்வதற்கு காரணமாக இருந்தவர். ஹாக்கி மந்திரவாதி என அழைக்கப்பட்ட இவரது ஆட்டத்தை கண்டு, ஜெர்மன் குடியுரிமையும், ஜெர்மன் ராணுவத்தில் கர்னல் பதவியும் தர ஹிட்லர் முன்வந்ததாகக் கூறப்படுவது உண்டு.
தயான் சந்த் பிறந்த நாள், தேசிய விளையாட்டு தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது பெயரை கேல்ரத்னா விருதுக்கு வைக்குமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகவும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெயர் மாற்றப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
ஒலிம்பிக் மகளிர் கராத்தே போட்டி – ஸ்பெயின் வீராங்கனை முதல் தங்கம்..!!
டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் கராத்தே போட்டியில் முதல் முறையாக ஸ்பெயின் தங்கம் வென்றது.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிருக்கான கராத்தே போட்டியின் காடா (KATA) பிரிவு இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை Sandra Sanchez, 2 முறை உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை Kiyou Shimizu-ஐ 28-க்கு 27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
அதேபோல் நடப்பு ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட செங்குத்தான சுவரில் ஏறும் Sport Climbing விளையாட்டிலும் ஸ்பெயின் வீரர் Alberto Gines Lopez முதல் முறையாக தங்கம் வென்றார்.
தமிழ்நாடு
முதுமக்கள் தாழியில் மரக்கைப்பிடியுடன் கூடிய இரும்பு வாள் கண்டெடுப்பு..!!
சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அகழாய்வில் மரக் கைப்பிடியுடன் கூடிய இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதுமக்கள் தாழியில் கிடைத்த அந்த இரும்பு வாள் 40 சென்டிமீட்டர் நீளமும், அதன் மரக் கைப்பிடி 6 சென்டிமீட்டர் நீளமம் உள்ளது. அதனுடன் தாழியில் மனித எலும்புகள், சுடுமண் கலங்களும் இருந்தன.
இந்த வாளின் காலம் குறித்து அறிவதற்காக இதை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக்கல் ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.