12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும்?

0
719

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும்?

மத்திய அரசைப் போல தமிழக அரசும் 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா தமிழக அரசு எடுக்கப்போகும் நிலைப்பாடு குறித்து மாணவர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக முதல்வருடனான ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக்களை பெற்று தேர்வு குறித்து முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெற்றோர் மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மாணவர்கள், உயர்கல்விக்கு செல்கின்ற போது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொற்று குறைந்த பிறகு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சிஇ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததன் பின்னணி காரணங்களும் முன்வைக்கப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் தற்போது மத்திய அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததற்கு காரணம் புதிய கல்விக் கொள்கையை இந்த ஆண்டு முதல் அமல்படுத்துவதற்காகவே என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் உயிரைப் பற்றி அக்கறை கொள்ளும் மத்திய அரசு லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட்,ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்கிற கேள்வியையும் முன்வைக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.