பள்ளிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல்?

0
136

பள்ளிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல்?

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளில் மிக முக்கியமானது கல்வி. பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பாடங்களைக் கற்ற மாணவர்கள் மொபைல் போனின் சிறிய திரை வழியாக ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது மாணவர்களின் மனநலத்தை பெரிதும் பாதித்துள்ளது. கல்வியோடு, விளையாட்டு, சிந்தனையைத் தூண்டும் கலைகள், யோகா என பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நண்பர்களுடன் பேசி மகிழ்வதும், ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவதும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள். ஆனால் கொரோனாவும் அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் இதை குழி தோண்டி புதைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே கழிந்துவிட்ட நிலையில் இந்த முறையும் அப்படியே செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

12ஆம் வகுப்பைத் தவிர பிற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

மே 1 முதல் கோடை விடுமுறையை பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்தது. புதிய கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, மே மாத இறுதியில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் புதுப்புது உச்சங்களை தொட்ட நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. எனவே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்றுடன் (மே 31) கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது. நாளை (ஜூன் 1) முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட உள்ளது. நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் புதிய கல்வி ஆண்டுகளுக்கான முன்னேற்பாடுகளை செய்ய ஆசிரியர்களை அழைக்காதது கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி நாளை (ஜூன் 1 ) அடுத்த கல்வி ஆண்டு தொடங்க வாய்ப்பில்லை என்கின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கே இந்த நிலைமை என்றால் பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.