ஒருநாள் விக்கிரமாதித்த மகாராஜா தனது சகாக்களுடன் காட்டில் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மரக்கிளையில் ஜோடி கிளிகள் கொஞ்சியபடி இருந்ததை பார்த்துக் கொண்டிருந்தார் விக்கிரமாதித்த மகாராஜா.
திடீரென்று அதில் ஆண் கிளி செத்து கீழே விழுந்தது. இதை பார்த்த பெண் கிளி, செய்வதறியாது அலறிக்கொண்டு கண்ணீர் விட்டது. இதை பார்த்ததும் மனம் இளகிய விக்கிரமாதித்த மகாராஜா, தனது அமைச்சரிடம் மட்டும் தனது உடலை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மூலமாக தனது உயிரை அந்த இறந்த கிளியினில் செலுத்த ஆண்கிளி உயிர்த்தெழுந்து பறக்கத் தொடங்கியது.
இரண்டு கிளிகளும் ஜோடியாக உற்சாகமாக விண்ணில் பறந்தன. அந்த ஜோடி கிளிகள் ஒரு கூட்டத்து கிளியுடன் சென்று இணைந்தன . விக்கிரமாதித்தன் கிளி தனது புத்திசாலித்தனத்தால், மற்ற கிளிகளால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒரு நாள் கிளிக்கூட்டம் வானில் பறந்து கொண்டிருந்த பொழுது காட்டின் ஒரு பகுதியில் நவதானியங்கள் விதைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவற்றை சாப்பிட அனைத்து கிளிகளும் ஆசை கொண்டன.
அனைத்தும் தரையிறங்க தயாரானபோது விக்ரமாதித்தன்கிளி, அதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கூறி தடுத்தது. ஆனால் நவதானியங்களை பார்த்த ஆசையில் அனைத்துக் கிளிகளும் விக்ரமாதித்தன் கிளி சொல்வதைக் கேளாமல், விக்ரமாதித்தன் கிளியையும் சேர்த்து இழுத்து தரை இறங்கின. ஆசையாசையாய் கிளிகள் அனைத்தும் நவதானியங்களை தின்றுகொண்டிருந்தன. அப்போதுதான் அவைகள் வேடன் விரித்த வலையில் தாங்கள் மாட்டிக் கொண்டதை உணர்ந்தன.
விக்ரமாதித்தன் கிளி சொன்னதுபோல் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று கூறி வருத்தப்பட்டன. அந்த நேரத்தில் விக்ரமாதித்தன் கிளி, “இனி நடந்ததை பேசி நேரத்தை வீணடிப்பதை விட, அதிவேகமாக இங்கிருந்து தப்பிப்பது எப்படி என யோசிக்கலாம்” என கூறியது.
இதைக் கேட்டதும் அனைத்து கிளிகளும் யோசிக்க தொடங்கின. அந்த நேரத்தில் விக்கிரமாதித்தன் கிளி ஒரு யோசனையை கூட்டத்திற்கு கூறி அவைகளை தயார் படுத்தியது.
அந்த யோசனை என்னவென்றால், “நாம் மொத்தமாக ஆயிரம் கிளிகள் இருக்கிறோம். வேடன் வரும்பொழுது அனைத்து கிளிகளும் இறந்தது போல் நடிக்க வேண்டும். உடனே வேடன் அனைத்துக் கிளிகளையும் வலையில் இருந்து எடுத்து தரையில் போடுவான். அப்பொழுது முதலில் கீழே விழும் கிளி தன்னை ‘ஒன்று’ என எண்ணிக்கொண்டு, அடுத்து விழும் ஒவ்வொரு கிளியையும் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் ஆயிரம் என எண்ணிக்கை வந்ததும் முதலில் விழுந்த கிளி விசில் அடிக்க வேண்டும். அந்த விசில் சத்தத்தை கேட்டதும் அனைவரும் பறந்து தப்பித்துவிடலாம் ” என்றது.
அந்த யோசனைக்கு அனைத்து கிளிகளும் ஒப்புக் கொண்டன. கொஞ்ச நேரத்தில் விக்ரமாதித்தன் கிளி சொன்னதுபோலவே வேடன் ஒருவன் அங்கு வந்தான். அனைத்து கிளிகளும் இறந்து கிடப்பதை பார்த்து, “இனி இவை எதற்கும் உதவாது” என கவலையோடு, வலையிலிருந்து ஒவ்வொரு கிளியாக எடுத்து தரையில் போட தொடங்கினான். முதலில் விழுந்த கிளி யோசனைப்படி, ‘ஒன்று’ என எண்ணத்தொடங்கியது.
திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தேறிக் கொண்டிருந்தது. கடைசியாக 999 கிளிகளை எடுத்து போட்டிருந்தான். ஆயிரமாவது கிளியை எடுத்தபொழுது , வேடனின் இடுப்பில் இருந்த மடக்கு கத்தி ஒன்று கீழே விழுந்தது. அதை ஆயிரமாவது கிளி என்று தவறாக எண்ணிய அந்த முதல் கிளி, விசில் அடித்தது. விசில் சத்தத்தை கேட்டதும் அனைத்து கிளிகளும் உற்சாகமாக விண்ணில் பறந்தன. ஆனால் ஆயிரமாவது கிளியாக இருந்த விக்ரமாதித்தன்கிளி மட்டும் வேடன் கைகளில் மாட்டிக்கொண்டது.
கிளிகள் அனைத்தும் தன்னை ஏமாற்றியதை கண்ட வேடனுக்கு, கோபம் பீறிட்டு வந்தது. கோபத்தின் உச்சியில் இருந்த வேடன் விக்ரமாதித்தன் கிளியின் தலையினை திருகி கொல்ல முயன்றான்.
அந்த நேரத்தில் விக்ரமாதித்தன் கிளி வேடனிடம், “என்னை கொன்றால் உனக்கு எதுவும் கிடைக்காது. அதே நேரத்தில் என்னை சந்தையில் கொண்டு விற்றால் உனக்கு அதிக பணம் கிடைக்கும்” என்றது. கிளி விபரமாக பேசுவதை பார்த்து ஆச்சரியப்பட்ட வேடன், கிளி சொன்னபடியே அதனை விற்பதற்காக அருகிலிருந்த சந்தைக்கு எடுத்துச் சென்றான்.
விக்கிரமாதித்தன் கிளியை பிடித்து சென்ற வேடன் நகரிலிருந்த பிரதான சந்தைக்கு எடுத்துச் சென்றான். விக்ரமாதித்தன் கிளியின் வினோதமான பேச்சைக் கேட்ட செட்டியார் ஒருவர், தன் வியாபாரத்திற்கு இந்த கிளி உதவும் என நினைத்து ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து கிளியை வாங்கிக்கொண்டார்.
அந்த செட்டியார் நினைத்தது போலவே அந்தக் கிளி அவரது வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. தூரத்தில் செல்பவரையும் பெயர் சொல்லி அழைத்து பொருட்களை வாங்க வைத்தது. இவ்வாறு வியாபாரம் பெருக பெருக செட்டியார் மிகப் பெரும் செல்வந்தர் ஆனார்.
தொடரும்… (இரண்டாம் பகுதியை படிக்கவும்)