“நமக்கு ஒரு கண் போச்சுன்னா, எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும்..” இந்த வழக்கு வந்த கதை தெரியுமா…

0
660
        ஒரு ஊரில் பொன்னுச்சாமி என்ற விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் கடினமாக உழைத்து செல்வந்தன் ஆனவன். இரக்க குணம் மிக்க அவன் ஏழைகளுக்கு தானதர்மங்கள் செய்து அமைதியாக வாழ்ந்து வந்தான் . அவனது பக்கத்து வீட்டில் முத்துசாமி என்பவன் வாழ்ந்து வந்தான். அவனும் அவனது மனைவியும் பொறாமை குணம் மிக்கவர்கள். பொன்னுச்சாமியின் வளர்ச்சியை பிடிக்காத அவர்கள், பொன்னுச்சாமி செய்யும் ஒவ்வொரு செயலையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். 
         ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்த பொன்னுச்சாமி குளித்து விட்டு ஈரத்துணியுடன் வீட்டிற்கு வெளியே வந்தான். இதைக்கண்ட முத்துசாமியின் மனைவி ஓடோடிச் சென்று முத்துச்சாமியை எழுப்பி பொன்னுசாமி எங்கோ செல்கிறான் நீ பின்தொடர்ந்து சென்று பார்த்துவிட்டு வா என்று கூறினாள். உடனடியாக எழுந்த முத்துசாமி யாருக்கும் தெரியாமல் பொன்னுச்சாமியை பின்தொடர்ந்தான். 
     பொன்னுச்சாமி பக்கத்து வீதியில் உள்ள கோவிலுக்குள் சென்றான் பின்தொடர்ந்த முத்துசாமி கோவிலுக்கு வெளியே நின்றபடி உள்ளே நடப்பதை பார்த்து கொண்டு இருந்தான். பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்த பொன்னுசாமி நேராக வீட்டிற்கு சென்று தூங்க ஆரம்பித்தான். இப்படியே 40 நாட்கள் அதிகாலை 4 மணிக்கு பொன்னுச்சாமி கோவிலுக்கு செல்வதும், முத்துசாமி அவனை பின்தொடர்வதுமாக இருந்தது. 
          41வது நாள் பொன்னுச்சாமி கைகூப்பி வேண்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று அவன் முன் கடவுள் தோன்றினார். கடவுளைப் பார்த்த பதட்டத்தில் பொன்னுச்சாமி மயங்கி விழுந்தான். இதை வெளியே இருந்து பார்த்துக்கொண்டு இருந்த முத்துசாமிக்கு லேசாக நடுக்கம் ஏற்பட்டது . உடனடியாக அங்கிருந்து நைசாக கிளம்ப ஆரம்பித்தான். அந்த நேரத்தில் உள்ளிருந்த கடவுள் மெதுவாக வெளியே நின்று கொண்டிருந்த முத்துசாமியை உள்ளே அழைத்தார். 
        பயந்துபோன முத்துச்சாமி நடுக்கத்துடனே கடவுள் முன் போய் நின்றான். முத்துசாமியை பார்த்த கடவுள் நான், 40 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு வந்த பொன்னுச்சாமிக்கு நிறைய வரம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் மயங்கி விழுந்து விட்டான். அதன்படியே நீயும் தெரிந்தோ தெரியாமலோ, 40 நாள்கள் பொன்னுச்சாமியை பின்தொடர்ந்தே நீயும் கோவிலுக்கு வந்துவிட்டாய் ஆதலால் உனக்கும் வரம் தரலாம் என்று இருக்கிறேன் என்றார். 
        இதைக் கேட்ட முத்துச்சாமி மகிழ்ச்சி வெள்ளத்தில் கடவுளிடம் தாருங்கள் நீங்கள் நினைத்ததை எனக்கு தாருங்கள்; என்று படபடப்போடு கூறினான். அந்த நேரத்தில் கடவுள் முத்துச்சாமியை பார்த்து, ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார். என்ன நிபந்தனை..? என்று முத்துசாமி கேட்க, நீ என்ன வரம் கேட்கிறாயோ..? அதிலிருந்து இரண்டு மடங்கை நான் பொன்னுசாமிக்கு கொடுப்பேன் ஆதலால் நீ எதை கேட்டாலும் நன்கு யோசித்து கேள் என்றார். 
       இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துசாமி அப்படி என்றால் வரமே வேண்டாம் என்று கூறினான். இதை கேட்ட கடவுள் வேண்டுமென்றால் உன் மனைவியிடம் கேட்டு விட்டு வா; நான் அதுவரைக்கும் காத்திருக்கிறேன் என்றார். இது நல்ல யோசனையாக பட முத்துச்சாமி வீட்டிற்கு விரைந்தான். அங்கு சென்று கோவிலில் நடந்ததையெல்லாம் மனைவியிடம் கூற, மனைவியும் கடவுள் சொன்ன நிபந்தனைகளை ஏற்க மனமில்லாமல் முழித்தாள், 
           இருவரும் சற்று நேரம் யோசித்த பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர். அந்த முடிவோடு முத்துசாமி கோவிலை நெருங்கினான். கடவுளைப் பார்த்து நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு கொடுக்கும் பலனை அவனுக்கு இரண்டு மடங்காக கொடுக்க வேண்டும்; ஏமாற்றி விடக்கூடாது..! சரியா..? என்றான். கடவுள் முத்துசாமியை பார்த்து, கட்டாயமாக உனக்கு கொடுப்பதை காட்டிலும் இருமடங்கு அவனுக்கு கொடுப்பேன் என்றார். 
        உடனடியாக முத்துச்சாமி, எனக்கு இந்த இரண்டு கைகளில் ஒரு கை போதும் என்று நினைக்கிறேன். ஆதலால் ஒரு கையை எடுத்து விடு என்றான். அதன்படியே கால்களும் எனக்கு இரண்டு தேவையில்லை; ஒன்று போதும் என்று நினைக்கிறேன் என்றான். மேலும் எனக்கு இந்த இரண்டு கண்களில் ஒரு கண் இருந்தாலே பார்வைக்கு போதுமானதாக இருக்கும். ஆதலால் ஒரு கண்ணை எடுத்து விடு என்றான். 
      அவன் கேட்ட வரத்தின்படி முத்துசாமிக்கு வரம் கொடுத்தால் பொன்னுச்சாமிக்கு இரட்டிப்பாக கொடுக்கும்பொழுது, இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு கண்களையும் எடுக்க வேண்டியிருக்கும். இதைக் கேட்ட கடவுள், செய்வதறியாது திகைத்து, இனிமேல் நான் பூமிக்கு வரவே போறதில்லை என்று கூறி வானுலகம் சென்று மறைந்தார்.