
தினமும் காலை எட்டு மணிக்குத் தோளில் தொங்கும் பையுடன், கண்களில் கனவுகளையும் கால்களில் வேகத்தையும் சுமந்துகொண்டு கல்லூரிக்கு நடக்கத் தொடங்கும் அந்த மூன்று கிலோமீட்டர் சாலை, எனக்கு வெறும் தார்ச்சாலை மட்டுமல்ல; அது மனிதர்களைப் படிக்கும் ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகம்.வெயில் சுள்ளென்று உறைக்கத் தொடங்கும்போதோ, அல்லது கடிகார முள் வகுப்பு நேரத்தை நெருங்கும்போதோ, என் வலது கை தன்னிச்சையாகச் சாலையை நோக்கி நீளும். ஒவ்வொரு முறை பைக்கில் ‘லிப்ட்’ கேட்கும்போதும், அந்தப் பயணத்தின் சில நிமிடங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயங்களாக மாறிவிடுகின்றன. அப்படிப் பலருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தாலும், என் தந்தையின் வயதொத்த ஒரு நடுத்தர வயது மனிதருடன் ஏற்பட்ட நெருக்கம் மட்டும் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
பழைய டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL) வண்டியின் பின்னால் காய்கறிப் பைகளைக் கட்டிக்கொண்டு வருவார் அவர். நான் கை காட்டிய முதல் நாளே சற்றும் யோசிக்காமல் வண்டியை நிறுத்தினார். “ஏறு தம்பி, படிக்கிற பையன் வெயில்ல நடக்கக் கூடாது” என்றபடி வண்டியைக் கிளப்பினார். அன்றைய பயணத்தில் தன் மகள் கல்லூரியில் படிப்பதைப் பற்றியும், அவளுக்காகத் தான் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து உழைப்பதைப் பற்றியும் பெருமையோடு பேசிக்கொண்டே வந்தார். கல்லூரி வாசலில் என்னை இறக்கிவிட்டபோது, “நல்லா படிப்பா, உங்க அப்பா அம்மாவுக்குப் பெருமை சேரு” என்று அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த வாஞ்சை, அன்று முழுவதும் என் வகுப்பறைப் பாடங்களை விட அதிகமாக என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.அதன்பிறகு, அந்தச் சாலையில் எங்கள் சந்திப்பு அன்றாட நிகழ்வாகிப் போனது.
அவருக்குத் தன் மகள்தான் உலகம். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு வியாபாரத்திற்குப் புறப்படுவதற்கு முன், தன் மகளைத் தனக்கு முன்னால் நடக்கவிட்டு, அவளது முகத்தைப் பார்த்துவிட்டுத்தான் வண்டியையே எடுப்பாராம். தன் மகள் தனக்குக் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம் என்று அவர் ஆழமாக நம்பினார்.ஒவ்வொரு முறை தன் மகளைப் பற்றிப் பேசும்போதும், அந்த மனிதரின் முகம் மாறும் அழகே தனி. ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் ஜோதிகா, சந்திரமுகியின் நெத்திச்சுட்டியையும் நகைகளையும் எடுத்துக் காட்டும்போது, அவர் முகத்தில் ஒரு தெய்வீகமான, அளவில்லாத தேஜஸ் படருமே… அச்சு அசலாக அதே தேஜஸ்தான் தன் மகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அந்த அப்பாவின் முகத்திலும் தெரியும். வெயிலிலும் உழைப்பிலும் கறுத்துப் போயிருந்த அந்த முகத்தில், மகளின் பெயரை உச்சரித்த நொடியிலேயே எங்கிருந்தோ ஒரு ஒளி வந்து ஒட்டிக்கொள்ளும். அந்தக் கண்களில் தெரிந்த கள்ளங்கபடமற்ற, குழந்தைத்தனமான பூரிப்பைப் பார்க்கும்போதே எனக்கும் மனம் நிறைந்துவிடும்.
ஒவ்வொரு நாள் பயணத்திலும் அவளைப் பற்றிய ஏதாவது ஒரு பெருமையைச் சிலாகித்துப் பேசிக்கொண்டே வருவார். அதில் ஒருநாள் அவர் சொன்ன சம்பவம் என்னை மிகவும் நெகிழ வைத்தது.”தம்பி, என் பொண்ணுக்கு அப்போ ரெண்டு வயசு இருக்கும். எங்க தோட்டத்துல போர்வெல் போட ஏற்பாடு பண்ணியிருந்தோம். தண்ணி பார்க்க வந்தவங்க சொன்ன ரெண்டு இடத்துலயும் போர் போட்டும் ஒரு சொட்டுத் தண்ணி கூட வரல. கையில இருந்த காசெல்லாம் கரைஞ்சு போச்சு. ‘இனி என்ன பண்றது’ன்னு தலையில கையை வெச்சுட்டு உட்கார்ந்திருந்தேன். அப்போ பார்த்து, என் சின்னப் பொண்ணு தளிர் நடை போட்டு என்னை நோக்கி ஓடி வந்தா. விளையாட்டா அவகிட்ட, ‘அப்பாவுக்கு ஒரு செம்பு தண்ணி எடுத்துட்டு வாடா கண்ணு’ன்னு சொன்னேன். அந்தப் பிஞ்சுக் குழந்தை பக்கத்துல இருந்த குளத்துல இருந்து ஒரு செம்பு தண்ணியை அள்ளிக்கிட்டு வந்து, என் கையில கொடுக்காம, தோட்டத்துல ஒரு இடத்துல பொத்துன்னு வெச்சுட்டு ஓடிப்போயிடுச்சு. எனக்கென்னவோ உள்ளுக்குள்ள ஒரு பொறி தட்டுச்சு. ‘இந்த இடத்துல போடுங்க’ன்னு பிடிவாதம் பிடிச்சு போர் போடச் சொன்னேன். நம்ப மாட்டீங்க தம்பி, ஆழம் போகப் போகத் தண்ணி பீறிட்டு அடிச்சது! அன்னையில இருந்து அவதான் என் மகாலட்சுமி!
அவ கல்யாணத்துக்காகத்தான் இப்போ ராப்பகலா உழைச்சு, கொஞ்சம் கொஞ்சமா நகையும் பணமும் சேர்த்துக்கிட்டு இருக்கேன்” என்று அவர் சொன்னபோது, அந்த முகத்தில் வழிந்த அந்தக் களங்கமில்லாத சந்தோஷம் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது.காலச் சக்கரம் சுழன்றது.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை நிமித்தமாக நான் வெளியூர் சென்றுவிட்டேன். சில வருடங்களுக்குப் பிறகு, தற்செயலாக அந்தப் பகுதிக்குச் செல்ல நேர்ந்தபோது, அந்த அன்பு மனிதரின் நினைவு வந்தது. வழியில் இருந்த ஒரு கடையில் அவரைப் பற்றி விசாரித்தேன்.அவர்கள் சொன்ன செய்தி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அவர் இறந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டதாம்.அதிர்ச்சியில் உறைந்து போன நான், “என்னாச்சு, நல்லாத்தானே இருந்தார்?” என்று பதற்றத்துடன் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் என் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது.அவர் உயிருக்கு உயிராக நேசித்த, தன் அதிர்ஷ்ட தேவதையாகக் கொண்டாடிய அந்த மகள், யாரையோ காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்துகொண்டாளாம். அதுமட்டுமல்ல, அவளுக்காகவே அவர் ரத்தமும் வியர்வையும் சிந்திச் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் பணத்தையும் கூட அவள் மொத்தமாக எடுத்துக்கொண்டு போய்விட்டாளாம்.
பணம் போனதை விட, தன் மகாலட்சுமியாக நினைத்த மகள் தன்னை இப்படி ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாளே என்ற பேரிடியை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. யாரிடமும் பேசாமல், சரியாகச் சாப்பிடாமல், ஆறு மாத காலம் நடைப்பிணமாகவே வாழ்ந்திருக்கிறார். அந்தத் தீராத மன அழுத்தமும் பட்டினியும், உள்ளுக்குள்ளேயே ஒரு கொடிய புற்றுநோய்க் கட்டியாக உருவெடுத்து, அவரைப் பரிதாபமாக உயிரிழக்கச் செய்துவிட்டது.
அவர் இறந்த செய்தி கேட்டு ஓடோடி வந்த அந்த மகள், தந்தையின் உடலைப் பார்த்துக் கதறி அழுதாளாம். ஆனால், அவள் எவ்வளவு அழுது என்ன பயன்? அவளையே தன் ஒட்டுமொத்த உலகமாக நம்பி வாழ்ந்த அந்தத் தந்தை, அந்த உலகம் சிதைந்த அதிர்ச்சியிலேயே தன் உயிரையும் மாய்த்துக்கொண்டு போய்விட்டாரே!
அந்தக் கடையிலிருந்து நகர்ந்தபோது என் கால்கள் கனத்தன. இன்றும் அந்த மூன்று கிலோமீட்டர் சாலையைக் கடக்கும்போதெல்லாம், என் நினைவுகள் பின்னோக்கிப் பயணிக்கின்றன.
தோட்டத்தில் ஒரு செம்புத் தண்ணீரோடு ஓடி வந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை நினைத்துப் பூரித்த அந்த அப்பாவும், மகளின் பெயரைச் சொன்னதும் முகத்தில் ஒரு தேஜஸோடு குழந்தையைப் போலச் சிரித்த அந்தக் கள்ளங்கபடமற்ற, அப்பாவி முகமும் என் கண்முன்னே நிழலாடுகின்றன.”நல்லா படிப்பா” என்ற அந்தத் தந்தையின் வாஞ்சையான குரலும், பின்னால் காய்கறிப் பைகளுடன் செல்லும் அந்தப் பழைய டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டியின் சத்தமும், ஒரு தீராத வலியாக இன்றும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கதை உணர்த்தும் நீதி:
பிள்ளைகளின் நலனுக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கும் பெற்றோரின் தியாகத்தையும், கள்ளங்கபடமற்ற அன்பையும் பிள்ளைகள் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.
பெற்றோர் உயிரோடு இருக்கும்போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காயப்படுத்திவிட்டு, அவர்கள் பிரிந்த பிறகு கதறி அழுவதால் எந்தப் பயனும் இல்லை.