Home Uncategorized வகுப்பறை தந்த நினைவலைகள்

வகுப்பறை தந்த நினைவலைகள்

0

நாளை பள்ளி திறக்கப்போகிறது. கோடை விடுமுறை முடிந்து துள்ளிக் குதித்து வரும் பிள்ளைகளை வரவேற்பதற்காகப் பள்ளி வளாகமே தயாராகிக் கொண்டிருந்தது. தூசி தட்டப்படும் சத்தம், தண்ணீரை ஊற்றித் தரை கழுவப்படும் வாசம், சக ஆசிரியர்களின் உரையாடல்கள் எனப் பள்ளியே பரபரப்பாக இருந்தது. நான் அமைதியாக ஒவ்வொரு வகுப்பறையாக நடந்து, தூய்மைப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.


அப்போது ஒரு வகுப்பறையின் மூலை அலமாரியில், பாதி கிழிந்த நிலையில் ஒரு நோட்டுப் புத்தகம் அனாதையாகக் கிடந்தது.
அதை கையில் எடுத்துப் பார்த்தேன். அது ஒரு அறிவியல் நோட்டு. ஒரு பக்கம் கோடு, மறுபக்கம் வெற்றுத்தாள். முதல் மூன்று பக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டு, மீதி பக்கங்கள் அப்படியே வெறிச்சோடிப் போயிருந்தன. இன்றைய பிள்ளைகளுக்கு இதன் அருமை தெரியவில்லை. ஆனால், அந்த வெற்றுப் பக்கங்களை பார்த்ததும் என் நினைவுகள் 25 வருடங்கள் பின்னோக்கி, நான் ஆறாம் வகுப்பு படித்த அந்த நாட்களுக்கு ஓடின.


அன்று ஜூன் மாதத் தொடக்கம். “அப்பா, இந்த வருஷம் ஆறாம் வகுப்புக்கு மூணு கோடு போட்ட நோட்டு, ஒரு அறிவியல் நோட்டு, இரண்டு கணக்கு நோட்டுன்னு மொத்தம் ஆறு நோட்டு வேணும்ப்பா” என்று என் தந்தையிடம் தேவையைக் பட்டியலிட்டேன்.
மாலையில் கடைக்குச் சென்றுவிட்டு வந்த தந்தை, என் கையில் நோட்டுகளைக் கொடுத்தார். எண்ணிப் பார்த்தேன், ஐந்து நோட்டுகள்தான் இருந்தன.
“அப்பா, அறிவியல் நோட்டைக் காணோமேப்பா?” என்று கேட்டேன்.
என் தந்தை சட்டென்று பதறிப்போய் என் முகத்தைப் பார்க்க முடியாமல் தரையைப் பார்த்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. தொண்டையை அடைத்த துக்கத்தோடு, “அறிவியல் நோட்டு வாங்க என்கிட்ட காசு பத்தலடா… அடுத்த வாரம் கூலி கிடைச்சதும் கண்டிப்பா வாங்கித் தர்றேன்” என்றார். ஒரு நோட்டுக்காக என் தந்தை அன்று கலங்கிய கண் கலக்கம், இன்று மூன்று பக்கங்கள் மட்டுமே எழுதி வீசப்பட்டிருக்கும் இந்த நோட்டைப் பார்த்ததும் என் நெஞ்சை உலுக்கியது.


கனத்த இதயத்தோடு அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்தேன். அங்கே மேசையின் கீழ் ஒரு ஜோடி பள்ளிச் சீருடை யாரோ வேண்டாம் என்று போட்டுவிட்டுப் போனதைப் போலக் கிடந்தது. அதைத் தொட்டுத் தூக்கியபோது, என் கைகள் நடுங்கின. என் கண்கள் அறியாமல் இரண்டாம் வகுப்பு படித்த நாட்களுக்குள் நுழைந்தன.
விவரம் தெரிந்த நாளில், எனக்கு என்று ஒரு புதுத்துணி கூடக் கிடைத்ததில்லை. அன்றுதான் முதன்முதலாகப் பள்ளியில் இலவச சீருடை வழங்கினார்கள். ஒரு வெள்ளை நிறச் சட்டையும், காக்கி நிறக் கால்சட்டையும்.
அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. என் வாழ்க்கையின் முதல் புதுத்துணி அது! அதன் புதுத்துணி வாசம் என் நாசியை நிறைத்தது. அதைத் தலைமாட்டிற்கு மேல் வைத்தால் யாராவது திருடிவிடுவார்களோ என்ற பயத்தில், என் பிஞ்சு நெஞ்சோடு அணைத்தபடியே விடிய விடியப் படுத்திருந்தேன்.
மறுநாள் காலை, ஆசையோடு வெள்ளைச் சட்டையைப் போட்டேன்; சரியாக இருந்தது. ஆனால் காக்கி டவுசரைத் தூக்கிப் போட்டபோது, அது என் முழங்காலைத் தாண்டி நின்றது. இடுப்பு மிகவும் தளர்வாக இருந்தது. பெல்ட் வாங்க எங்கே போவது? என் தாயோ கலங்காமல், வீட்டில் இருந்த ஒரு பழைய ‘அரைஞாண் கயிற்றை’ எடுத்து, அந்த டவுசரின் இடுப்பைச் சுருட்டிப் போட்டுக் கட்டினாள்.
டவுசர் சுருக்கங்களுடன் இருந்தாலும், “நான் புது டிரஸ் போட்டிருக்கிறேன்” என்ற பெருமிதத்தோடு, இடுப்புக் கயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டே அன்று நான் பள்ளிக்கு ஓடிய ஓட்டம்… இன்றும் என் கண்ணில் காட்சியாக விரிந்தது. இன்று வாரி இறைக்கப்படும் இந்தச் சீருடைகளுக்குப் பின்னால், அன்று எத்தனையோ ஏழைப் பிள்ளைகளின் மானமும், மகிழ்வும் ஒளிந்திருந்தது இவர்களுக்குத் தெரியவில்லையே!


கடைசி வகுப்பறைக்குச் சென்றபோது, அங்கே ஒரு ஜோடி புதிய இலவசக் காலணிகள் ஒரு ஓரமாகக் கிடந்தன. தூசியும் துப்புரவுமாக இருந்த அந்தச் செருப்பைப் பார்த்தபோது, என் கால்கள் சுடுவது போன்ற ஒரு பிரமை எனக்குள் ஏற்பட்டது.
நான் ஆறாம் வகுப்பு படித்தபோது, சனிக்கிழமை மதியம் அரை நாள் மட்டுமே பள்ளி இருக்கும். மதியம் 12 மணிக்கு மேல் பள்ளியை விட்டு வெளியே வந்தால், சுட்டெரிக்கும் கத்தரி வெயில் பூமியைப் பிளந்து கொண்டிருக்கும். பள்ளியிலிருந்து எங்கள் கிராமத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் தார்ச் சாலையில் நடக்க வேண்டும். வீட்டில் டிவியில் ‘சக்திமான்’ நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், மற்ற பிள்ளைகள் எல்லாரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகமாக ஓடிவிடுவார்கள். யார் காலிலும் செருப்புகள் இருக்காது அந்த காலத்தில்.
நான் அப்பொழுது மிகச் சிறிய குழந்தை. பெரிய பிள்ளைகளைப் போல என்னால் வேகமாக ஓட முடியாது. அந்தத் தார்ச் சாலையின் கொதிக்கும் சூடு என் பிஞ்சுப் பாதங்களைத் தாங்க முடியாதபடி சுட்டெரிக்கும். கால்கள் பொத்துப் போகும். வலியிலும் வேதனையிலும் என் கண்கள் கலங்கி, கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும்.
தார்ச் சாலையில் நடக்க முடியாமல், சாலையோரம் இருக்கும் காய்ந்த புற்களின் மீது கால் வைத்து ஓடப் பார்ப்பேன். அவசரத்தில் அழுதுகொண்டே ஓடும்போது, புற்களுக்குள் மறைந்திருக்கும் உடைந்த கண்ணாடித் துண்டுகளோ அல்லது கூர்மையான முட்களோ என் கால்களைப் பதம் பார்த்துவிடும். ரத்தம் சொட்டச் சொட்ட, வெயிலின் சூட்டோடு, வலியோடு அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிய நாள்கள் அவை.
“நமக்கும் ஒரு ஜோடி செருப்பு இருக்காதா? இந்தச் சாலை நம் காலைச் சுடாமல் இருக்காதா?” என்று அன்று ஏங்கிய ஏக்கம்… வறுமையின் உச்சக்கட்டம்.


இன்று என் கைகளில் இருக்கும் இந்த இலவசக் காலணிகளைப் பார்க்கிறேன். அன்று நாங்கள் எதற்கெல்லாம் ஏங்கித் தவித்தோமோ, எவையெல்லாம் எங்களுக்குக் கானல் நீராக இருந்தனவோ, அவை அனைத்தையும் இன்றைய அரசு, மாணவர்களின் கைகளில் தேடிவந்து கொடுக்கிறது. காலணிகள், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகள் என அத்தனையும் இலவசம்!


ஆனால், என் நெஞ்சம் மட்டும் ஏனோ கனக்கிறது.
அன்று ஏங்கிய எங்களுக்குக் கிடைக்கவில்லை; இன்று கேட்காமலேயே கிடைக்கும் இவர்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. அலமாரிகளிலும் குப்பைகளிலும் இவை வீசப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
இதற்குக் காரணம் என்ன?
ஒன்று, அரசு கொடுக்கும் பொருள்கள் மாணவர்களின் சரியான அளவிற்குப் பொருத்தமாக இருப்பதில்லை. மற்றொன்று, வறுமைக் கோட்டிற்கு மேலே வசதியாக இருக்கும் மாணவர்களுக்கும் இவை இலவசமாக வழங்கப்படுவதால், அவர்களுக்கு இதன் மதிப்பு தெரிவதில்லை.
அரசாங்கம் இந்தத் திட்டங்களை வாரி வழங்குவதை விடுத்து, யாருக்கு உண்மையிலேயே தேவையோ… எந்தக் குழந்தை செருப்பில்லாமல் வெயிலில் நடக்கிறதோ… எந்தக் தந்தை நோட்டு வாங்கக் காசின்றி கண்ணீர் வடிக்கிறாரோ… அவர்களுக்கு மட்டும் பார்த்துப் பார்த்துச் சேர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
கையில் இருந்த நோட்டையும் செருப்பையும் சீராக எடுத்து மேசை மீது வைத்துவிட்டு, கனத்த இதயத்தோடும், ஈரமான கண்களோடும் வகுப்பறையை விட்டு வெளியேறினேன். நாளை என் வகுப்பிற்கு வரும் பிள்ளைகளுக்குப் பாடத்தோடு சேர்த்து, இந்தச் சமூகப் பொருள்களின் மதிட்டையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உறுதியோடு!

-C.P NARAYANAN

error: Content is protected !!
Exit mobile version