
90-களின் பொற்காலம் அது. வறுமை ஒரு மெல்லிய திரையாய் எங்களை மூடியிருந்தாலும், அந்த நாட்களில் வீசிய வசந்தத்தின் வாசனையை இன்றும் என்னால் உணர முடிகிறது. இன்றைய தலைமுறை குழந்தைகளைப் போல, ஒரு பொம்மை வேண்டுமென்றால் உடனே கைபேசியைத் தட்டி ஆர்டர் செய்யும் வசதி அன்று எங்களுக்குக் கனவிலும் கிடையாது. பொம்மைக் கடைகள் என்பது எங்கோ ஒரு பெருநகரத்தில் இருக்கும் அதிசயம்.
எங்கள் கிராமத்தின் நாடித் துடிப்பே ‘பீடி சுற்றும்’ தொழில் தான். ஒவ்வொரு வீட்டின் திண்ணையும் ஒரு குட்டி தொழிற்சாலை. பெரியவர்கள் கைகளில் அந்தப் புகையிலைத் தூளும், புகையிலை சுருள்களும் ஒரு லயத்தோடு ஆடிக்கொண்டிருக்கும். “சக்… சக்…” என கத்தரிக்கோல் புகையிலையை வெட்டும் சத்தமும், நூலால் பீடியைக் கட்டும் வேகமும் ஒரு தாள ஜதியைப் போல அந்தத் தெருவெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த உழைப்பின் வியர்வை வாசனையோடுதான் எங்கள் பால்ய காலமும் மெல்ல நகர்ந்தது.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பீடிக் கடைகளில் ‘போனஸ்’ கொடுப்பார்கள். அந்த ஒரு நாள் தான் எங்கள் ஊரின் ‘தீபாவளி’. அந்த நாளுக்காக நாங்கள் தவம் இருப்போம். அன்று பொம்மைக்காரர்கள் கொண்டு வரும் அந்த 5 ரூபாய் பிளாஸ்டிக் கார்கள் தான் எங்கள் கண்களுக்கு ‘ஆடி கார்’. அந்த அரிய பொக்கிஷத்தை ஆசை ஆசையாக வாங்கி வந்து, ஊர் ஓரத்து புளியமரத்து அடியில் தஞ்சம் புகுவோம். செடி கொடிகளுக்கு நடுவே, மணலில் கட்டிய வீடுகளுக்குள் அந்த 5 ரூபாய் கார்களை ஓட்டும்போது, நாங்கள் வெறும் சிறுவர்கள் அல்ல… ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபதிகள்!
அந்தப் புளியமரத்து நிழலில் மூன்று சிறுவர்கள் மூன்று விதமான கனவுகளை ஓட்டிக் கொண்டிருந்தோம்.
முதலில் ஒரு சிறுவன், கையில் ஒரு நீல நிற போலீஸ் கார். “பீப்… பீப்…” என்று சத்தமிட்டபடி, புளியமரத்து வேர்களுக்கு நடுவே இருக்கும் சந்து பொந்துகளைச் சோதனையிடுவான். “யார் அங்கே? வண்டிய ஓரம் கட்டு!” என்று அதட்டுவான். யாராவது தப்பு செய்தால் பிடித்து சிறையில் அடைப்பதே அவன் விளையாட்டு.
இரண்டாவது சிறுவன், ஒரு பெரிய லாரியை வைத்திருந்தான். அவன் புளியமரத்து அடியில் இருக்கும் மணலை ரகசியமாக அள்ளி லாரியில் நிரப்புவான். அங்கிருக்கும் சிறு கிளைகளை வெட்டி, ‘விலை உயர்ந்த தேக்கு மரங்களை’ கடத்துவது போல வண்டியில் ஏற்றி மறைத்து ஓட்டுவான். “யாரும் பாக்கலையே?” என்று அங்கும் இங்கும் பயந்தபடியே அவன் செய்யும் அந்தச் சாகசம், நிஜக் கடத்தல் காரனைப் போலவே இருக்கும்.
மூன்றாவது சிறுவன் கையில் ஒரு சாதாரண கார் தான் இருக்கும். ஆனால், இவன் வண்டியை மெதுவாக நகர்த்திக்கொண்டே, “இப்போ பாருங்க… கார் இருட்டுக்குள்ள போகுது… திடீர்னு ஒரு பெரிய பேய் வரப்போகுது…” என்று கதை சொல்ல ஆரம்பிப்பான். அவன் விவரிக்க ஆரம்பித்தால், மற்ற இருவரும் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு அவன் பின்னால் அமர்ந்துவிடுவார்கள். அந்தப் புளியமரத்து அடியில் அவன் சொற்களால் ஒரு மாய உலகத்தையே உருவாக்கிவிடுவான்.
இருபது ஆண்டுகள் கழித்து…
காலம் ஒரு சூறாவளியைப் போல எல்லாவற்றையும் மாற்றிப் போட்டது. அந்தப் பழைய நண்பர்களில் ஒருவனைச் சந்தித்தபோதுதான், அந்தத் திகைப்பூட்டும் உண்மையை அவன் சொன்னான்.
”டேய்… அன்னைக்கு போலீஸ் கார் வச்சிருந்தானே ஞாபகம் இருக்கா? அவன் இன்னைக்கு நிஜமாவே காவல்துறை அதிகாரி ஆகிட்டான்!” என்றான்.
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவன் தொடர்ந்தான், “ஆனா, அந்த லாரி வச்சிருந்தவன்… அன்னைக்கு விளையாட்டா மணல் கடத்துனான், இன்னைக்கு நிஜமாவே திருட்டு மணல் அடிச்சு கம்பி எண்ணிட்டு இருக்கான்!”
அப்போது நான் ஆவலுடன் கேட்டேன், “சரி… அப்போ அன்னைக்கு கார் வச்சுக்கிட்டு பேய் கதை சொல்லிட்டு இருந்தானே… அந்தப் பையன் இப்போ என்ன பண்றான்?”
நண்பன் என் தோளைத் தொட்டுச் சிரித்துக் கொண்டே சொன்னான், “ஏன்டா… உன்னையே நீ மறந்துட்டியா? அன்னைக்கு கதை சொல்லி எங்களை மிரட்டுன… இன்னைக்கு ஆசிரியரா மாறி அதே மாதிரி குழந்தைகளுக்குப் பாடங்களை கதையாச் சொல்லி அவங்களை ஏமாத்திட்டு இருக்க!”
“அட ஆமாம்!” என்று நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.என் கையில் இருந்த அந்த 5 ரூபாய் பிளாஸ்டிக் கார், வெறும் பொம்மை அல்ல; அது என் எதிர்காலத்தின் திறவுகோல் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. என் எதிர்காலம் அன்றே அந்த மணல் பரப்பில் எழுதப்பட்டுவிட்டது என்பதை நினைக்கும்போது, கண்கள் கசிந்து ஒரு நெகிழ்ச்சியான புன்னகை என் இதழோரம் அரும்பியது.
எனக்கு உடல் சிலிர்த்தது. அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா போன்ற மேதைகள் சிறுவயதிலேயே விண்வெளியைப் பார்த்ததும், ராக்கெட்டுகளை ரசித்ததும் எப்படி அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்ததோ, அதேபோல்தான் அந்த 5 ரூபாய் விளையாட்டுச் சாமான்களும் எங்கள் வாழ்வை வரைந்திருக்கின்றன.
ஒரு குழந்தையின் எதிர்காலம் என்பது வானத்தில் இருந்து குதிப்பதில்லை; அது அவர்கள் நிகழ்காலத்தில் காட்டும் ஆர்வத்திலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையிலும், அவர்களுக்குத் தெரியாமலே அவர்கள் வளர்த்துக்கொள்ளும் பழக்கவழக்கங்களிலும் ஒளிந்திருக்கிறது.
குழந்தைகள் இன்று எதை விரும்பி விளையாடுகிறார்களோ, எதில் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்களோ, அங்கேயே அவர்களது எதிர்காலத்தின் விதை ஊன்றப்பட்டு விடுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த விதைகளுக்குச் சரியான நீர் ஊற்றி வளர்ப்பது மட்டுமே.
கதை உணர்த்தும் நீதி: “விளையும் பயிர் முளையிலேயே தெரியும். ஒரு குழந்தையின் இன்றைய ஈடுபாடே நாளை அவனது அடையாளமாக மாறுகிறது.”