கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
577

ரெனால்ட் நிசான் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் தமிழக அரசு இன்று ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரெனால்ட் நிசான் கார் நிறுவனத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்த போது, ஆட்டோமொபைல், டயர் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து  ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலை ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்பொது, ரெனால்ட் நிஸான் நிறுவனம் தரப்பில் கடந்த 26ஆம் தேதி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாகவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டாலும் ஒத்துழைக்க தயார் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுமுறை நாளன்று ஆய்வு நடந்துள்ளதாகவும், 50 சதவீத  தொழிலாளர்களை அனுமதித்தால் பணிபுரிய தயாராக இருப்பதாகவும், Face shield எனப்படும் முழு முகக்கவசம் அணிந்தால் வாகனத்தில் உள்ள குறைபாடுகள் தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஜூன் 1 (இன்று) காலை 10 மணிக்கு தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குனரை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டுமெனவும், அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினரும், தொழிற்சங்கத்தினரும் தங்கள் கருத்துக்களை அவரிடம் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இதுவரை எத்தனை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் ரெனால்ட் நிசான் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 4ஆம் தேதி தள்ளிவைத்தனர்.