மாவட்ட வாரியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

0
362


    தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாமா? பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதுபற்றி குறிப்பிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இது முழு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். எனவே தொற்று பரவலின் வேகத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, அதாவது மே 31-ந் தேதியில் இருந்து ஜூன் 7-ந் தேதிவரை (வரும் திங்கட்கிழமை) மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

தற்போது நீடிக்கும் முழு ஊரடங்கிலும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 24 ஆயிரமாக குறைந்து வருகிறது. படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை எட்டியுள்ள கொரோனா பரவலை கீழே கொண்டு வருவதில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.

எனவே இந்த வேகத்தை விட்டுவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசிப்பதற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.

10 மாவட்டங்களில் குறையவில்லை

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்கலாமா? என்று இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் சில மாவட்டங்களில் மட்டும் அதிக தொற்று பரவல் இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருப்பதும் கூறப்பட்டது.

எனவே அந்த வகையில் மாவட்ட வாரியாக ஊரடங்கு உத்தரவை வித்தியாசப்படுத்தி மேலும் ஒரு வாரம் அமல்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. 10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்?

அந்த வகையில், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தொடரலாம்.

மிக சமீபமாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

அரியலூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர் கரூர், தென்காசி, வேலூர் உள்ளிட்ட தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார்.

ஆக்சிஜன் உற்பத்தி

தமிழகத்தில் உள்ள 142 அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.