கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் பொது முடக்கம் முடிவுக்கு வரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

0
414

பொது முடக்கத்தை நீட்டித்துக் கொண்டே போக முடியாது எனவும், கட்டுப்பாடுகளைப் பொது மக்கள் பின்பற்றினால் அது முடிவுக்கு வரும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:blob:https://www.dinamani.com/1b9faf75-aa89-425c-9a4e-213eac157782

தமிழகத்தில் முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நோய்த்தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு 7 ஆயிரமாக இருந்த பாதிப்பு, இப்போது 2 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. ஒரு சில நாள்களில் முழுமையாகக் குறையும்.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் உயா்ந்திருந்த நோய்த்தொற்று, இரண்டு நாள்களாக குறைந்து வருகிறது. கரோனா நோய்த்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருள்கள், வீடுகளுக்கே காய்கறிகள், மளிகை விநியோகம் போன்ற அரசின் ஏற்பாடுகளைப் பொது மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முழு பொது முடக்கத்தால் பொது மக்களில் குறிப்பிட்ட பிரிவினா் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனால்தான் நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் வழியாக அளிக்கப்படுகிறது. இதனை பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி பாராட்டியுள்ளாா்.

நிவாரணங்களை அளித்து மக்களைக் காத்தாலும், பொது முடக்கத்தை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மக்கள் கைகளில்தான் இருக்கிறது. தமிழக அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் போன்றவை போதிய அளவுக்கு உள்ளன. தட்டுப்பாடு என்ற நிலையே இல்லை. மக்களைக் காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். இதனால்தான் கரோனா நோய்த்தொற்று சிகிச்சை பிரிவுக்குள் சென்று அவா்களுக்கு நம்பிக்கை ஊட்டினேன்.

கரோனா நோய்த்தொற்று சிகிச்சைப் பிரிவுக்குள் நான் சென்றதைப் பாா்த்து பதற்றம் அடையும் மக்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். கரோனா குறித்த எச்சரிக்கை உணா்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும். தொற்றுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை ஒரு சிலா் கடைப்பிடிக்காவிட்டாலும் அதன் முழுப் பயனும் கிடைக்காமல் போய் விடும்.

முதல் அலை: கரோனா நோய்த்தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு ஏற்பட்டது. அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை எதிா்கொள்ள வேண்டியதாயிற்று. இதிலிருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்.

திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்து மூன்று வாரங்களே ஆகின்றன. எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள் பல்வேறு துறைகளில் செய்யப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் கரோனா தடுப்புச் சுவரை நாம் விரைவில் உடைத்து நொறுக்கியாக வேண்டும். அதன் பிறகுதான் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வளமான தமிழகத்தை உருவாக்க முடியும்.