பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சப்போர்ட் | அல்லோபதி மருத்துவர்கள் அதிருப்தி

0
264

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். மேலும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிடவும் அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என்றும் பேசியிருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாபா ராம்தேவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த இந்திய மருத்துவ சங்கம், கருப்பு தினத்தை கடைபிடித்தது.மேலும் ராம்தேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய மருத்துவ சங்கமும், பிற பிரபல நிறுவனங்களும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இத்தகைய அவதூறான கருத்துக்கள் மருத்துவ ஊழியர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இதுபோன்ற அறிக்கைகள் முழு நாட்டிற்கும் பீதியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாபா ராம்தேவ் தன்னுடைய பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் என்னும் மருந்தை கொரோனாவிற்கு பரிந்துரைத்ததும், அதற்கு எதிராகவும் இதுபோலவே பலர் குற்றச்சாட்டை வைத்தனர். பின்னர் பாபா ராம்தேவ் அது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தே என்று தெளிவுபடுத்திய பின்பு சர்ச்சை நீங்கியது.

தற்போது கோவிட் -19ஐ எதிர்த்துப் போராடுவதால் கடுமையான எதிர்ப்புக்களை எடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் சங்கங்கள் முடிவு செய்திருந்தன. இதுகுறித்து மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர்கள் குறித்தும், அலோபதி மருத்துவம் குறித்து ஒழுங்கீனமான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவைக் கண்டித்தும் கருப்பு தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளோம், எனினும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை நடைபெறும். அவர் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் பாபா ராம்தேவ் பேசியது அவரின் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது என்பதால் இதில் ராம்தேவுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்துவிட்டது.