தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து? இன்று முதல்வர் ஆலோசனை

0
180

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து? இன்று முதல்வர் ஆலோசனை

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொதுத் தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவரமடைந்து வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுத் தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இதனிடையே, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று மாலை அறிவித்தார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வை வைத்தே தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொதுத் தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதற்காக, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.