கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது பரவும் மஞ்சள் பூஞ்சை – அறிகுறிகள், சிகிச்சை என்ன?

0
495

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை குறித்து வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது பரவும் மஞ்சள் பூஞ்சை - அறிகுறிகள், சிகிச்சை என்ன?

கொரோனா இரண்டாம் அலையில் நாடு சிக்கித் தவித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். ஆக்ஸிஜன், பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இட வசதியின்மை போன்ற காரணங்களால் மக்களுக்கு சிகிச்சையளிக்க சுகாதாரத்துறையினருக்கு பெரும் சவாலானதாக இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க, மூன்றாவது அலையின் குறித்து எச்சரிக்கை வேறு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை குறித்து வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அறிகுறிகள் என்ன, சிகிச்சைகள் என்ன என்பதை முழுமையாக அறிந்துகொள்ளும் முன்னரே மக்களை கலங்கடிக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. கருப்பு பூஞ்சை வெள்ளை பூஞ்சை மாதிரி தற்போது மஞ்சள் பூஞ்சை என்ற புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட இந்த மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தானது என்று கூறப்படுகிறது. தற்போது அந்த நோயாளி கண், காது, மூக்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரிஜ் பல் தியாகி (Brij Pal Tyagi) கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மருத்துவர் பிரிஜ் பால் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிடி ஸ்கேன் செய்து பரிசோதித்த போது நார்மலாக இருந்தது. ஆனால் அவருக்கு எண்டோஸ்கோபி செய்த போது அவருக்கு கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது தெரியவந்தது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள் பாம்புகள் உள்ளிட்ட ரெப்டைல்ஸ் வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எதனால் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது?

சுகாதாரமற்ற உணவின் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக உபயோகப்படுத்தும் ஸ்டிராய்டு, பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவினால் குணமானவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

இதன் அறிகுறிகள் என்ன?

மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அதீத சோர்வு, பசியின்மை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைவு, உள்ளே ரத்தம் கசியும் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை நேரும்.

இதற்கான சிகிச்சை என்ன?

Amphotericin-B எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து முதன்மையான மருத்துவம் ஆகும். தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்பை விட மஞ்சள் பூஞ்சை பாதிப்பு ஆபத்தா?

பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முக வீக்கம், மங்கும் பார்வை , இரண்டாக தெரியும் காட்சிகள், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமலின் போது ரத்தம் வருவது, அதீத தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும். ஆனால் மஞ்சள் பூஞ்சை பாதித்தவர்களுக்கு உடலின் உள்ளே பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டாலோ, பசியின்மை, உடல் எடை குறைவு ஆகிய மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.