‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துபவர்கள் பயப்பட தேவையில்லை -மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

0
277

சமூக வலைத்தளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதே புதிய விதிகளின் நோக்கம். எனவே, ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துபவர்கள் பயப்பட தேவையில்லை என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது.

இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது. ஏதேனும் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனறு விதிகளில் கூறப்பட்டுள்ளது.

கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்த புதிய விதிகளுக்கு ஒப்புக்கொண்டு, சேவையை தொடர்ந்து வருகின்றன. ஆனால்,  வாட்ஸ்-அப் நிறுவனம், புதிய விதிகளை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தநிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒருபதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விமர்சனத்தையும், கேள்வி கேட்கும் உரிமையையும் மத்திய அரசு வரவேற்கிறது. தனி உரிமையை முழுமையாக அங்கீகரிக்கிறது. புதிய தகவல் ெதாழில்நுட்ப விதிமுறைகள், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படும் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவே செய்கிறது.

எனவே, ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துபவர்கள் பயப்பட தேவையில்லை. சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு வழிவகுக்கும் செய்தியை முதலில் வெளியிட்டவர் யார் என்று கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்.

சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்தியாவில் வசிக்கக்கூடிய குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் பயனாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.