அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா? – கோரிக்கை மனு…

0
424

 அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்’ என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புக்கு அனுப்பியுள்ள மனு: வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59; பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.

ஏற்கனவே, பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், ஓய்வு வயது 58 ஆகவே உள்ளது. தற்போது, 60 வயதில் ஓய்வு என்ற உத்தரவால் 2020, 2021ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அடுத்த ஆண்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவர். அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும். எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.