கருப்புப் பூஞ்சை நோய் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை-சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

0
371

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள், டெல்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது. நேற்று கோவில்பட்டியில் இரண்டு பேர், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது. இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, Lipsomal Amphotericin B Injection மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றார்கள்.

கரோனா மருந்துகள், உயிர்க்காற்று உருளைகளுக்குக் கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந்தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள். எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிடப்படும் என தகவல்கல் வந்த வண்ணம் உள்ளன.

கருப்புப் பூஞ்சை நோய் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சுகாதாரத்துறை அறிவிக்க உள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது கருப்புப் பூஞ்சை நோயை அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நோயாக அறிவிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

‘மியூகார்மைகோசிஸ் என்னும் கருப்புப் பூஞ்சை நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் என்று வாட்ஸ்ஆப்களில் வதந்தி பரவி வருகிறது. பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பதட்டம் அடைய வேண்டாம், பீதியடைய வேண்டாம். இது பரவும் நோயல்ல குணப்படுத்தும் நோய்தான்.

ஆக்சிஜன் உதவி பெறுபவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் காரணமாக அவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது. தமிழகத்தில் புதிதாக 3 பேர் உள்பட இதுவரை 9 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் கரோளா தொற்றில் இருந்து மீண்டவர்கள் இந்த பேரில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள், அந்த 7 பேருக்கும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் கருப்புப் பூஞ்சை நோயால் தமிழகத்தில் எந்த
உயிரிழப்பும் ஏற்படவில்லை.

கருப்புப் பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் அறிந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேணும்.

மேலும் தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.