இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வந்தது; இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை!

0
356

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வந்தது; இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை!


ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே எகிப்து நாடு சமரசம் செய்து போர் நிறுத்தத்தை அமல்படுத்த உதவியுள்ளது.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வருகிறது. ஜெருசலேம் நகரை இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் உரிமை கோரிவரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜெருசலேம் நகரை இஸ்ரேலினுடைய நகராக அமெரிக்கா அங்கீகரித்தது. இதனை தொடர்ந்து இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரு நாட்டின் எல்லையில் உள்ள காசா மலைக்குன்று உள்ளிட்ட பகுதிகள், ஹமாஸ் எனப்படும் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஜெருசலத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது, காசாவில் இருந்து, ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. வான்வெளி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இஸ்ரேல் மீதும் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தனர். இருதரப்பிலும் ஏராளமான உயிர், பொருள் சேதம் ஏற்பட்டது.

கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போர் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கிய நிலையில் எகிப்து அரசின் முயற்சியால் இருதரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போர் நிறுத்தம் செய்வது என இருதரப்பும் ஒத்துக் கொண்டதை அடுத்து 11 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.

11 நாட்களாக நடைபெற்ற போரில் பாலஸ்தீனம் தரப்பில் 65 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட 230 பேர் பலியானதாகவும், 1,710 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல இஸ்ரேல் தரப்பில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலியானதாக கூறப்படுகிறது.