24 மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு: முடிவுக்கு வருகிறதா இரண்டாவது அலை

0
315

இந்திய அளவில் 24 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. அதனால், கொரோனா இரண்டாவது அலை விரைவில் முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது.

24 மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு: முடிவுக்கு வருகிறதா இரண்டாவது அலை

இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப் போட்டுவிட்டது. சுமார் ஒரு மாத காலமே மிகத் தீவிரமாக இரண்டாவது அலையின் பாதிப்பு இருந்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் இந்திய சுகாதாரத்துறை கட்டமைப்பையே சிதைத்து எடுத்துவிட்டது கொரோனா இரண்டாவது அலை. தற்போது, தான் கொரோனா பாதிப்பின்தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 44 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 2,75,55,457 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,660 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,895 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,93,410 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,59,459 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.16 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 90.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 10.42 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 9 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாதிப்பு 4 நாட்களாக 10 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23.43 லட்சமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 23,43,152 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியாவில், தற்போது தமிழகத்தில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 33,361 பேருக்கும், கர்நாடகாவில் 24,214 பேருக்கும், கேரளாவில் 24,166 பேருக்கும், மகாராஷ்டிராவில் 21,273 பேருக்கும், ஆந்திராவில் 16,167 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய அளவில் 24 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அளவு குறையத் தொடங்கியுள்ளது. இது கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வருவதைக் காட்டுகிறது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.