பிளஸ் 2 தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு: மத்திய கல்வி அமைச்சர் தகவல்…

0
684

மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு: மத்திய கல்வி அமைச்சர் தகவல்…

மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன் லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 23-ம் தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசுகளின் கருத்துகளை முழுமையாக ஆராய்ந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முன்னதாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

2 கட்டங்களாக தேர்வு?

இதனிடையே, கல்வித் துறையின் பொதுவான செயல்பாடுகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தப் போவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதே போல தமிழக பள்ளிக்கல்வியில் 2 கட்டமாக தேர்வு நடத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக உத்தேச திட்டங்களை உருவாக்கியுள்ளோம். அதை முதல்வரிடம் தெரிவித்து, அவரது ஆலோசனைக்கு ஏற்ப உரிய திருத்தங்கள் செய்து, மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை  அனுப்ப உள்ளோம்.

கரோனா பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுமாதிரியாக உள்ளது. அந்த சூழலையும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுவோம்.

மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறுகிறீர்கள். அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கெனவே மாணவர் சேர்க்கை தொடர்பான தற்காலிக அட்டவணையை தயாரித்து வைத்திருந்தோம். கரோனா சூழல் காரணமாக அதை நடைமுறைப்படுத்த முடிய வில்லை.

தற்போது தமிழக அரசின் முழு கவனமும் கரோனாவைத் தடுப்பதில் இருக்கிறது. எனவே, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்திருப்பது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் வரப்பெற்றுள்ளது. அவர்களின் கருத்துகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிர்வாக ரீதியில் முடிவெடுக்கப்படும்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து நான்கைந்து முறைகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.