Pink WhatsApp எச்சரிக்கையாக இருங்கள்!

0
371

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாட்ஸ்ஆப் குழுக்களில் வேகமாக பரவிய ‘பிங்க் வாட்ஸ்ஆப்’ என்ற வைரஸால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வாட்ஸ்ஆப் குழுக்களில் லிங்க் ஒன்று வேகமாக பரவியது.
அதில், குழு நண்பர்களின் கவனத்திற்கு, அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பிங்க் வாட்ஸ்ஆப்பில், கூடுதல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது என http://whatsapp.profileviewz.com/?whatsapp என்ற லிங்க் வந்துள்ளது.
அந்த லிங்கை திறந்தவுடன் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வேகமாக பரவியது. அந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், அந்த லிங்கை ஒருவர் தொட்டாலே மீண்டும் அனைத்து வாட்ஸ்ஆப்  குழுக்களிலும் வேகமாக  பரவியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடனடடியாக 10க்கும் மேற்பட்ட குழுக்களில் வேகமாக பரவிய பிங்க் வாட்ஸ்ஆப் லிங்கை அழித்தனர். லிங்க்கை அழித்தாலும் மீண்டும், மீண்டும் பரவியதால், அதிர்ச்சியடைந்த வாட்ஸ்ஆப் பயனாளர்கள் Pink watsup என ஒரு வைரஸ் பரவி வருகிறது அதை யாரும் திறக்கவோ, பதிவிறக்கம்  செய்யவோ வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப்பில் இது போன்று லிங் அனுப்பப்பட்டு வைரஸ் பரப்பபட்டு வருவதாகவும், இதுபோன்று வரும் லிங்கை யாரும் தொட்டு திறக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், மேலும் இந்த லிங்கை நீங்கள் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ்ஆப் குழுக்களில் பயனாளர்கள் சில எச்சரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள பயனாளர்கள் உஷாராகி வேகமாக பரவிய பிங்க் வாட்ஸ்ஆப் லிங்க் பரவாமல் தடுப்பது எப்படி என ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வாட்ஸ்ஆப் பயனாளர்கள் குழுக்களில் வெள்ளிக்கிழமை மாலை பரவியது வைரஸா என பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுவதாவது,
இத்தகைய நம்பகத்தன்மையுடைய பெயரில் திருடப்படும் திருட்டின் பெயரை ‘ட்ரோஜன் அட்டாக்’ என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுவார்கள்.
நமது செல்லிடப்பேசிகளில் உள்ள தரவுகளை திருடுவதற்காக, இணைய திருடர்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற செயலிகளை ஆசை வார்த்தைகள் சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். இதை அறியாமல் தரவிறக்கும் செய்யும் பட்சத்தில் நமது செல்லிடப்பேசிகளில் உள்ள புகைப்படங்கள், விடியோக்கள், தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடு போக அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில், இணைய பாதுகாப்பு வல்லுநர்களை கொண்டு சோதித்த பின் பொதுமக்களின் சேவைக்கு கொண்டுவரும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற வலைதளத்தில் உள்ள செயலிகளையே பயன்படுத்த வேண்டும்.