பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விஷயங்கள் ..

0
212
             Covid 19 தாக்கத்திற்கு பின்னர் இந்த உலகம் பல்வேறு மாறுதல்களையும் இக்கட்டான சூழல்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என பெற்றோர்கள் கவலை படும் தருணமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளியானது தொடர்ந்து 10 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்து வருகின்றது. 

      இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த மாதம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி பெற்றோர்களின் கருத்துக்களை கேட்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி 70% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்குமாறு கூறியிருந்தார்கள். அதனை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளோடு ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பள்ளியை தொடங்கலாம் என்று அறிவித்தது.
         வரும் 19ஆம் தேதி பள்ளி திறக்க இருக்கும் நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பின்வரும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமானதாகும்.
        செய்ய கூடாது என்று சொல்லும் ஒன்றை செய்ய துடிக்கும் குமரப் பருவத்தில் உள்ள மாணவர்கள், அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை விதிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தயங்குவார்கள். மேலும் “இளங்கன்று பயமறியாது” என்பதை போன்று கொரொனா பற்றிய பயமும் அவர்களிடம் இருப்பதில்லை. இதனால் பெற்றோர்களாகிய நாம் அவர்களை அரசு மற்றும் பள்ளி காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்துவது அவசியமான ஒன்றாகும்.
பள்ளி திறக்க இருக்கும் இந்த சூழலில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விஷயங்கள்
#தங்கள் குழந்தைகள் ஆடைகளை சுத்தமாக அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
#சரியான முறையில் முடிவெட்டி, நகங்களை ஒழுங்குபடுத்தி தன் சுத்தத்தை பராமரிக்கிறார்களா..? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்
#கட்டாயமாக முக கவசம் (மாஸ்க்), சிறிய சேனிடைசர் கொடுத்து அனுப்ப வேண்டும்
#பள்ளி நேரத்திலும் அதன் பின்னரும் கட்டாயம் முக கவசத்தை முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்
#பள்ளிக்கு செல்லும் பொழுது மதிய உணவு மற்றும் குடிநீர் கட்டாயமாக கொடுத்து விடவும்.
#முடிந்தவரை பள்ளிக்கு பேருந்தில் அனுப்பாமல் பள்ளி அருகில் இருந்தால் சைக்கிளில் செல்ல அறிவுறுத்த வேண்டும். கொஞ்சம் தொலைவில் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் தங்கள் வாகனத்தில் கொண்டு சென்று விட்டு, அழைத்து வருவது சால சிறந்ததாகும். இதன் மூலம் கூட்ட நெரிசலில் கொரொனா பரவலை தவிர்க்கலாம்.

#பள்ளி காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய தற்கால அவசியத்தை குழந்தைகள் புரிந்து கொள்ளுமாறு சொல்லி அனுப்ப வேண்டும்
#நண்பர்களோடு உணவுப்பொருட்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது.  மேலும் உணவுப் பொருட்களையோ குடிநீரையோ மற்ற குழந்தைகளிடம் வாங்கி பயன்படுத்த கூடாது என்பதை சொல்லி அனுப்ப வேண்டும்.
#பள்ளியில் கொடுக்கும் மாத்திரைகளை தவறாமல் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
#பள்ளியில் கூட்டமாக திரிய வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பவும்.
#பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும்.
#வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டோ அல்லது கைகால்களை சோப்பினால் சுத்தம் செய்த பின்னரோ வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
#வீடு திரும்பியதும் குழந்தைகளின் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
#குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை,  கசாயங்களை அவ்வப்போது கொடுக்க வேண்டும்.
#உடல்நிலையில் மாற்றம் இருப்பின் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

அன்பார்ந்த பெற்றோர்களே….
    மேற்கண்ட நிபந்தனைகளை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளை கொரொனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்…