குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளிப்பிடிக்காமல் இருக்க… சித்த மருத்துவர் டிப்ஸ்!

0
210

காலையில் மழை பெய்கிறது, இரவில் பனி கொட்டுகிறது. தற்போதைய பருவ நிலையே புரியாத புதிராக இருக்கிறது. விளைவு, நம் வீட்டுக் குழந்தைகள் சிந்திய மூக்கும் `ஹச்’ தும்மலுமாக இருக்கிறார்கள். இதோடு, இந்தக் குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாத உணவுகளைச் சாப்பிட்டுவிட்டால் குழந்தைகள் செரிமானக் கோளாறு, நெஞ்சில் கபம் என்று இன்னும் கஷ்டப்பட்டு விடுவார்கள். அதனால், குளிர்காலங்களில் ஒன்று முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட கொடுக்க வேண்டும்; என்னென்ன உணவுகளை சாப்பிடக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

சாப்பிடக் கூடாதவை

  • எந்த சீசனிலுமே ஃபிரிட்ஜில் வைத்த பழைய உணவுகளைக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அதிலும் குளிர்காலம் என்றால் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. காலையில் செய்த தேங்காய் சட்னி, மதியம் வைத்த சாம்பார் இரண்டையும் ஃபிரிட்ஜில் வைத்து இரவு டிபனுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களின் நெஞ்சில் சளிதான் பிடிக்கும்.

புளிக்குழம்பும் மீன் குழம்பும் ஊற ஊறத்தான் ருசி என்று பழைய குழம்புகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களுக்கு உங்கள் வீட்டில் தடை உத்தரவு போடுங்கள். பழங்களைப் பிழிந்து சாறாக குழந்தைகளுக்குக் கொடுத்தாலும், அதிலும் ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொடுக்காதீர்கள். அதற்குப் பதில் பழங்களைக் கடித்து சாப்பிடச் சொல்லுங்கள். வைட்டமின் மற்றும் தாது உப்புகளுடன், நார்ச்சத்தும் கிடைக்கும். இதனால், குளிர் காலங்களில் வருகிற செரிமானக் கோளாறும் பிள்ளைகளுக்கு வராது.

சில வீடுகளில் இரவில் மோர் சாதம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தை குளிர்காலங்களில் மட்டும் தள்ளி வையுங்கள்.

தினசரி காலை, மாலை அல்லது இரவில் பால் குடிக்கிற பழக்கம் உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், பாலில் குழம்பு மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, வீட்டிலேயே அரைத்த மிளகுத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து பிள்ளைகளுக்குக் குடிக்கக் கொடுங்கள். ஏனென்றால், பால் குழந்தைகளின் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்துகிற தன்மை கொண்டது. அதனால்தான் மஞ்சளும் மிளகும் சேர்க்கச் சொல்கிறேன்.

குளிர்காலங்களில் புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க் காய்கறிகளை பிள்ளைகளின் உணவில் சேர்க்காதீர்கள்.

கீரைகள் நல்லதுதான். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்ல, எல்லா சீசனிலும் பகலில் மட்டும்தான் கீரைகளை சாப்பிட வேண்டும்.

பேக் செய்து வருகிற ஊட்டச்சத்து பானங்களும் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றையும் இந்த ஜில் சீசனில் தவிர்த்து விடுங்கள். அதற்குப்பதில், சத்துமாவுடன் வெல்லம், சிறிதளவு சுக்குப்பொடி சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சிக் கொடுங்கள்.

இரவில் மோர் மற்றும் கீரை போலவே, தயிரையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. `இரவில் தயிர் சாப்பிட்டு என் பிள்ளைக்குப் பழக்கம்’ என்பவர்கள், உங்களுக்கே தெரியாமல் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறு, சைனஸ் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சாப்பிட வேண்டியவை…

சைவத்தில் தூதுவளை சட்னி, கற்பூரவல்லி சட்னி, கொள்ளு ரசம் , கொள்ளு சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை கண்டிப்பாகக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.

அசைவத்தில் நாட்டுக்கோழி ரசம், ஆட்டுக்கால் சூப், நண்டு போன்றவை சாப்பிடலாம். இறால், உடலுக்கு மந்தம் தரக்கூடிய அசைவ உணவு என்றாலும் தசைக்கு வலிமை தரக்கூடியது, மீன் உணவுகளும் ஓகேதான். ஆனால், குளிர்காலத்தில் அசைவ உணவுகளைப் பகலில் மட்டும்தான் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். சாப்பிட வேண்டியவற்றில் நான் சொல்லியிருக்கிற உணவுகள் எல்லாம் குளிர்காலத்தில் குழந்தைகளின் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து, சளிப் பிரச்னை இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளும்.