உஷாரய்யா உஷாரு-06

0
810
      ராம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருருந்தான். அவனது மனைவி சுகந்தி, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். இவர்களுக்கு சம்பத், வினோத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 
       ஒருநாள் ராம் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வீட்டின் முன்பாக உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் சுகந்தி. குடத்தில் தண்ணீர் பிடித்து, குடத்தினை ஒவ்வொன்றாக வீட்டின் வாசலில் தூக்கி வைத்தாள். தொடர்ச்சியாக மூன்று குடத்தை தூக்கி வைத்து விட்டு, நான்காவது குடத்தினை தூக்கிய நிலையில், குழாயினை அடைத்துக் கொண்டிருந்தாள். 
       அந்த நேரத்தில் பைலை ஓபன் செய்து பார்த்தபடியே, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ராம், குடத்தை கவனிக்காமல் குடத்தினால் கால் இடறி வாசலில் குப்புற விழுந்தான். இதைப் பார்த்ததும் சுகந்தி சிரித்தபடியே அவனே வந்து தூக்க, டிரஸோடு பைலும் நனைந்த கோபத்தில் இருந்த ராம் சுகந்தியை ஓங்கி அறைந்துவிட்டான். 
        கீழே என்ன இருக்கிறது என்று பார்த்து வராமல், தவறு செய்யாத தன்னையா அடிக்கிறாய் என்று கோபத்தில் சுகந்தியும் கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்கிக்கொண்டார்கள். 
      இந்த சம்பவத்தில் ராம் குடத்தை கவனிக்காதது தன் குற்றம் என்று ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சனை இந்த அளவு போயிருக்காது. அதேபோல குடத்தினை வழியில் வைத்தது தன் தவறு தான் என்று சுகந்தி நினைத்து இருந்தாலும் பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும். 
      இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விவாகரத்துகள் அனைத்தும் இதுபோன்ற சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்கே நடக்கிறது. ஆதலால் கணவன்-மனைவிக்குள் ஏற்படும் சிறிய பிரச்சினைகளில் கூட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வந்தால் இல்லறம் நல்லறமாகும்.