ஒரு குட்டி கதை – வான்கோழி பிரியாணி..!

0
5333
     விக்னேஸ்வரர்க்கு சுனில், அமல் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். விக்னேஸ்வரர் ஒரு சுயநலவாதி. யாருக்கும் தானம் அளிப்பதை விரும்பமாட்டார். அவரைப் போலவே அவரது மூத்த மகன் சுனில் இருந்தான் . ஆனால் அவனது இளைய மகன் அமல், இளம் வயதிலேயே இரக்க குணத்தோடும் கருணை மனதோடும் திகழ்ந்தான். 
அடுத்த நாள் தீபாவளியன்று, வீட்டில் என்ன சமையல் செய்யலாம்..? என்று மூவர் இடையே விவாதம் எழுந்தது. விவாதத்தின் முடிவில் வான்கோழி பிரியாணி செய்யலாம் என்று ஒரு தரப்பாக முடிவானது. 
அதன் பின்னர் அமல், “தன் சொந்த பந்தங்களுக்கு பகிர்ந்து கொடுத்து நாம் உண்ண வேண்டும்” என்று கூற, விக்னேஷ்வரரும் சுனிலும் இதை பயங்கரமாக எதிர்த்தனர். அமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 
அடுத்த நாள் வான்கோழி பிரியாணி தயார் ஆனது. கோவிலுக்கு சென்று வந்தே சாப்பிடலாம் என்று நினைத்து மூவரும் கோவிலுக்கு சென்றனர். 
கோவிலுக்கு முன்பாக அந்த ஊருக்கு புதிதாக வந்திருந்த பிரசித்தி பெற்ற சாமியாரை அனைவரும் வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்தனர். ஆனால் அவரோ வலுக்கட்டாயமாக முடியாது என்று கூறிவிட்டார். 
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுனில் தனது அப்பாவை பார்த்து, ” அவரை நீயும் வீட்டிற்கு சாப்பிட அழைக்கலாம். அப்படி அழைத்தால் தானே உன்னையும் ஊரில் பெரியவர் என்று எல்லோரும் நினைப்பார்கள் இது கூட தெரியாதா..?” என்று கோபப்பட்டு கொண்டான். 
அந்த உடனே விக்னேஸ்வரர் சுனிலை பார்த்து, “அழைக்கலாம் ஆனால் சாப்பிட வந்து விட்டால் என்ன செய்வது..?” என்றார். 
அதற்கு சுனில், “அவர் சாப்பிட வர மாட்டார் என்பதை தெரிந்து தானே நான் அழைக்க சொல்கிறேன். அவர் சுத்த சைவம் கட்டாயமாக நம் வீட்டுக்கு எல்லாம் வரமாட்டார்” என்று கூறி நக்கலாக சிரித்து கொண்டான். 
சுனில் யோசனையின் படி விக்னேஸ்வரர் அந்த சாமியாரை வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்தான். அவர் மறுக்க தலையசைக்கும் நேரத்தில் சுனில் முந்திக்கொண்டு, “எங்கள் வீட்டில் இன்று வான்கோழி பிரியாணி நீங்கள் கட்டாயமாக சாப்பிட வாருங்கள் (அப்படி சொன்னால் தான் சாமியார் வீட்டிற்கு வர மாட்டார் என்று நினைத்து) என்று சொன்னான். 
என்ன நினைத்தாரோ அந்த சாமியார், “உடனே வருகிறேன்” என்று ஒத்துக்கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஸ்வரர் கோபத்தோடு சுனிலையும், அதே நேரத்தில் இன் முகத்தோடு சாமியாரையும் பார்த்தபடியே, “அவசியம் நீங்கள் வீட்டிற்கு வர வேண்டும்” என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 
வீட்டை அடைந்ததும் சுனிலை கண்டபடி திட்டி தீர்த்தான் விக்னேஸ்வரர். 
அதற்கு சுனில், “அந்த சாமியாரைப் பார்த்தால் மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள் போல தெரிகிறது. மீதி அனைத்தும் நமக்கு தானே” என்று கூறி தன் அப்பாவை சமாதானப் படுத்தினான். 
வீட்டை அடைந்த பொழுது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது தெருநாய்கள் நான்கைந்து பாத்திரத்தை பரிமாறிக் கொண்டிருந்தன. நாய்களை விரட்டி விட்டு பாத்திரத்தை திறந்து பார்த்த பொழுது வெறும் பாத்திரம் மட்டுமே மீதியாய் இருந்தது. 
அந்த நேரத்தில் அமல் நடந்ததை பார்த்து, “இதற்குத்தான் அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ வேண்டும் என்பது. கொடுக்கக் கூடாது என்ற சுயநலம் இருக்கும்போது உதவி நமக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும் ” என்றான். 
அதற்கு சுனில், “நாங்க யாருக்கும் கொடுக்க கூடாது ன்னு சொன்னோம் எங்களுக்கு கிடைக்கல. இருக்கட்டும்.. ஆனா நீ எல்லாத்துக்கும் கொடுத்துட்டு சாப்பிடனும் என்று சொன்னாய்.. உனக்கும் கிடைக்கவில்லை” என்று கூறி நக்கலாக சிரித்து கொண்டான். 
அந்த நேரத்தில் அங்கு வந்த அமலின் நண்பன் அவனது தந்தை அமலை விருந்துக்கு அழைத்துவரச் சொன்னதாக வந்து சொன்னான். அதற்கு விக்னேஸ்வரர் அமலை பார்த்து, “போ.. உன் நண்பனோடு சென்று பழைய சோறும் பச்சை மிளகாயையும் சாப்பிட்டு வா.. என்று நக்கலாக சொன்னான். 
அதற்கு அமலின் நண்பன், “பழைய சோறா…! எங்கள் வீட்டிலயா.. இன்று மட்டன் ரைஸ், சிக்கன் ப்ரை, எக் வருவல், தந்தூரி சிக்கன்…. இப்படி 15 வகை உணவுகள் எங்க வீட்ல தயார் பண்ணி இருக்காங்க” என்றான். 
இதைக்கேட்ட விக்னேஸ்வரர் இளித்தபடி, “அமலை மட்டும் அழைத்து வரச் சொன்னாரா..? எங்களையும் அழைத்து வரச் சொன்னாரா..? என்று கேட்க , அதற்கு அமலின் நண்பன், “என் நண்பனை மட்டும் தான் அழைத்து வரச் சொன்னார்” என்று சிரித்தபடியே அவனை அழைத்துச் சென்றான். 
விக்னேஸ்வரரும் சுனிலும் இனி அடுத்தவருக்கு பகிர்ந்து கொடுத்து வாழவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்கள்.