காவலர் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி..?

0
1619
     இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் அரசு பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவு இருந்து வருகின்றது. அரசு பணிகளில் அதிகப்படியான சம்பளம், சலுகைகள், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து ஆகியவை கிடைப்பதால் இளைஞர்களின் நாட்டம் அதை சுற்றியே வருகின்றது.
     தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள், அரசு பணிகளுக்கு ஆட்கள் பிடிப்பதற்கென்றே வாகனத்தை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றித் திரிவார்களாம். அந்த நிலை இன்று மாறி, ஒரு காலி இடத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் போராடக்கூடிய நிலை இன்று வந்துள்ளது. இலட்சியமும், போராடும் குணமும் கொண்ட ஒரு சிலரே, அரசு பணியில் சேரும் கனவில் வெற்றி பெறுகிறார்கள்.
கீழ்காணும் சில அறிவுரைகளை உள்வாங்கிக் கொண்டு, கடினமாக உழைத்தால் நீங்களும் அரசு தேர்வில் வெற்றி பெறலாம்.
1)இலக்கை தீர்மானித்தல்
      தன்னால், எது முடியும் என்று தோன்றுகிறதோ…! எதை சாதிக்க முடியும் என்று மனது நம்புகிறதோ…! அத்தகைய இலக்கை முதலில் நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நல்ல உடலும், உயரமும் கொண்டிருப்பவர்கள், காவல்துறை அதிகாரியாக வரலாம். உடல் வலுவின்றி தேகம் மெலிந்தவர்கள், கணிதத்தில் கை தேர்ந்தவராக இருந்தால் வங்கி, புள்ளியியல் துறை போன்றவற்றில் தேர்ச்சி பெறலாம். குறிப்பிட்ட கல்வித் தகுதி உடையவர்கள், தங்களது கல்வித் தகுதிக்கு உட்பட்ட இலக்கை தீர்மானிப்பது நலம். சரி இதில் ஒருவர் காவல்துறை பணியில் சேர்வதே இலக்காக நிர்ணயித்துக் கொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.
2)தடைகளை அகற்றுதல
      இலக்கை நிர்ணயித்துக் கொண்டவன், முதலில் தன் இலக்கை அடைய விடாமல் தடுப்பது எது..? என்று கண்டறிந்து, அதனை முதலில் அகற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் முதல் எதிரியாக அமைவது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்கள் ஆகும் . இத்தகைய வலைதளங்கள் நமது இலக்கை அடைய விடாமல் தடுக்கும் என்றால், முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண கைபேசிக்கு மாறிவிடுங்கள். தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே ஸ்மார்ட் போனை கையில் எடுப்பேன் என்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இப்படி உங்கள் இலக்கு எதனால் தடம் மாறுகிறதோ, அவற்றை முதலில் நீக்கிவிடவேண்டும்.
3)திட்டம் வரைதல்
       காவல்துறை பணிக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவர், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்வு எழுதும் நாள் வரை உள்ள காலத்தை கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். நேரத்தையும் படிக்க வேண்டியவற்றையும் ஒப்பிட்டு, ஒரு நாளைக்கு எவ்வளவு பாடங்கள் படித்தாக வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
      எப்பொழுதும் ஒரு தேர்விற்கு, என்னைப்பொறுத்தவரை மூன்று முறை படிப்பது சாலச் சிறந்தது. அதாவது காவல்துறை பணிக்கு தமிழ், கணிதம் , வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ், வரலாறு, கணிதம் ஆகியவற்றை மூன்று முறை படித்தாக வேண்டும். முதல் முறை படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அடுத்த முறை எடுத்துக் கொள்ள அதிலிருந்து பாதி நேரம் எடுத்துக் கொள்ளும். கடைசி முறை திருப்பிப் பார்க்க தேர்வுக்கு முன்னாடி மூன்று நாள்கள் போதுமானது. ஆகவே இதை கருத்தில் கொண்டு கால திட்டத்தை வரையறுத்து கொள்ள வேண்டும்.
4)வளங்களை உருவாக்குதல்
        தேர்வுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களில் தேர்வுகளுக்கு என்று பிரத்யேகமான பல செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற தேர்வுகளுக்கு உதவும் பல்வேறு வளங்களை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
5)மனதினை தயார் செய்தல்
        எப்பொழுதும் படிப்பு.. படிப்பு.. என்று இராமல் தேவையான நேரங்களில் ஓய்வு எடுத்தல் அவசியமானதாகும். ஆகவே இடையிடையே பாடல் கேட்டல், நடைபயிற்சி, உறக்கம், குடும்பத்தினருடன் உரையாடுதல் உள்ளிட்டவை நன்மை பயக்கும். உடற்பயிற்சி, யோகா ஆகியவை மனதினை ஒழுங்குபடுத்தி கவனத்தை ஒழுங்குபடுத்தி, நாம் படித்தவற்றை மனதில் தங்க வைக்கும்.
6)ஊக்கத்தோடு செயல்படுதல்
        எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். நாம் கட்டாயமாக தேர்வில் வெற்றி பெறுவோம். நம்மைவிட இந்த தேர்வுக்கு கடினமாக உழைப்பவர் யார்..? நான் தோற்றால் வேறு யார் வெற்றி பெறுவார்..? என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து மனதினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது.
7)இறுதி கட்ட போராட்டம்
        தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, கட்டாயமாக இரண்டு முறை பாடத்திட்டங்களை படித்திருக்க வேண்டும். கடைசி ஒரு வாரம் படித்தவற்றை திருப்பி பார்க்க எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதி நேரங்களில் திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பது நலம் பயக்கும். போதுமான நேரங்களில் நன்கு தூங்கி உற்சாகத்தோடு தேர்வு எழுத செல்ல வேண்டும்.
லட்சக்கணக்கான  நபர்கள் கலந்து கொள்ளும் ஒரு போட்டி தேர்வில், நாம் தினமும் ஒரு மணி நேரம் அதிகமாக படிக்கப் படிக்க அந்த லட்சம் பேரில் ஆயிரம் பேரை முந்திக்கொண்டு வெற்றியை நோக்கி செயகிறோம் என்று அர்த்தம். அதனால் அதிக நேரம்
 படிப்பதற்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
      மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றி கடினமாக உழைத்தால் கட்டாயமாக அரசுப்பணியில் வெற்றி பெறுவீர்கள்….
                      வாழ்த்துக்கள்….. இறைவனின் ஆசி என்றும் உண்டு..