விக்கிரமாதித்த சிம்மாசனம் கிடைத்த கதை..!

0
1049
            முன்பொரு காலத்தில் உஜ்ஜயினி மாகாணத்தை, போஜமகாராஜன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஒருநாள் விவசாயிகள் சிலர், மன்னனை சந்தித்து, காட்டு விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதாகவும், குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் முறையிட்டனர். 
           இதைக் கேட்ட போஜமகாராஜன், “விரைவில் அவைகள் ஒழிக்கப்படும் ..” என்று மக்களிடம் உறுதி அளித்துவிட்டு, சிறிய படையோடு வேட்டையாட காட்டிற்கு சென்றான். வேட்டையை வெற்றிகரமாக முடித்த மன்னன், தனது படையோடு அரண்மனைக்கு திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் களைப்பும், தாகமும் மன்னன் உட்பட அனைவரையும் வாட்டியது. 
          அவர்கள் வரும் வழியில் கம்பங்கொல்லை ஒன்று இருந்தது. அதனை சரவண பட்டன் எனும் விவசாயி ஒருவன் பரண் ஒன்று கட்டி, அதன் மீது அமர்ந்திருந்து காவல் காத்து வந்தான். மன்னனும் படைவீரர்களும் சோர்வுற்று வருவதை கண்ட சரவண பட்டன், பரண்மீது அமர்ந்து கொண்டே மன்னனையும், படைவீரர்களையும் தன் கம்பங்கொல்லையில் உள்ள கதிர்களையும் கனிகளையும் உண்டு இளைப்பாறிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். 
           சரவணபட்டணின் வேண்டுகோளுக்கிணங்கி மன்னனின் படை வாரங்கள் கதிர்களையும், கனிகளையும் உண்ணத் தொடங்கினர். அதைப் பார்த்தபடியே சரவண பட்டன் பரணில் இருந்து கீழே இறங்கி வந்தான். கம்பங்கொல்லையில் நின்ற மன்னனின் பரிவாரங்களை பார்த்து சரவணபட்டன், திடீரென்று “ஓ..”வென்று அழ ஆரம்பித்தான். 
           மேலும் மன்னனைப் பார்த்து “மன்னா…! நீங்கள் செய்வது முறையாகுமா..? நீங்கள் புசிப்பதற்கு என் கொல்லைதான் கிடைத்ததா..? எனது ஆண்டு வருமானம் இதை நம்பியே இருக்கிறது..” என கதறி அழுதான். 
      இதைப்பார்த்த மன்னன் ஒன்றும் புரியாமல், வேதனையோடு படை வாரங்களை கொல்லையை விட்டு வெளியே வரச்சொல்லி, அந்த இடத்தைவிட்டு வெளியேற தொடங்கினான். 
        திட்டிக்கொண்டே பரணில் ஏறிய சரவண பட்டன், மீண்டும் மன்னனைப் பார்த்து, “மன்னா.. நான் ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து கொல்லையில் வந்து உண்டு இளைப்பாறிச் செல்லுங்கள்..” என்று கெஞ்சத் தொடங்கினான். 
       இதைக்கேட்டு மனம் இரங்கிய மன்னன், படை வாரங்களை மீண்டும் கம்பங்கொல்லைக்கு திரும்பிச் சென்று பசியாற சொன்னான். இதைப் பார்த்த படியே பரணில் இருந்து இறங்கிய சரவணபட்டன், “மன்னா…! மறுபடியும் நீங்கள் செய்வது முறையாகுமா..?” என கூறியபடி கதறி அழத் தொடங்கினான். 
        இதைப் பார்த்த மன்னன், சரவணபட்டன் பரணில் இருக்கும் பொழுது, நமது பசியை உணர்ந்து உண்ணச் சொல்கிறான். ஆனால் தரையில் கால் பட்டதும் தன் நிலை மறந்து புலம்பத் தொடங்குகிறான். அப்படி என்றால் இந்த இடத்தில் ஏதோ ஒரு மாயை இருக்கிறது என்று நினைத்த மன்னன் அந்த இடத்தை சோதிக்க முற்பட்டான். 
          மன்னன் பரண் நோக்கி சென்று, பரணில் கால் வைத்ததும் சஞ்சலமடைந்த அவனது மனம் அமைதியானது கண்டு ஆச்சரியப்பட்டு சரவணன் பட்டனுக்கு பொன் பணம் ஆபரணங்கள் என கொடுத்து அந்த இடத்தை விலைக்கு வாங்கிக் கொண்டான் மன்னன். 
          படைவீரர்களை வைத்து அந்த இடத்தை கவனமாக தோண்டச் சொன்னார் . பல மணி நேர தோண்டுதல்களுக்குப் பின்னர், ஒளி பொருந்திய நவ ரத்தின சிம்மாசனம் ஒன்று பூமியிலிருந்து தென்படத் தொடங்கியது. 
        இதைப் பார்த்த மன்னனுக்கு பயங்கர மகிழ்ச்சி உண்டாயிற்று. கிட்டத்தட்ட 50 அடி உயர 32 படிகள் கொண்ட சிங்காசனத்தை பார்த்து அனைவரும் பிரமிப்புற்றனர். 
         நூற்றுக்கணக்கான வீரர்கள் கவனமாக சிம்மாசனத்தை அரண் மனைக்கு கொண்டு சென்றனர். போஜமகாராஜன், ஜோதிடரிடம் ஒரு முகூர்த்த நாள் பார்த்து, சிம்மாசனம் ஏற தயாரானான். சிம்மாசனத்தில் முதல் படியில் கால் வைத்தபோது, முதல் படியிலிருந்து வெளிவந்த பதுமை ஒன்று, “மன்னா…! இந்த சிம்மாசனத்தில் ஏற, உனக்கு என்ன தகுதி இருக்கிறது..? என்று மன்னனைப் பார்த்து கேட்டது. 
       இதைக் கேட்டு பதறிப்போன போஜ மகாராஜன் அந்த பதுமையிடம், ” நான் வேற தகுதியற்றவன் என்றால்.. இந்த சிம்மாசனத்திலிருந்து அரசாட்சி செய்த மன்னன் யார்…?” என்று கேட்டார். 
          உடனே அந்தப் பதுமையானது, “நேர்மையும் மதிநுட்பமும் வீரமும் ஒருங்கே கொண்டு, 56 தேசங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து, சிறப்பாக ஆட்சி புரிந்த மாமன்னர் விக்ரமாதித்தன் தான் இந்த சிம்மாசனத்துக்கு சொந்தக்காரர்..” என்று கூறி விக்கிரமாதித்த மகாராஜா வரலாற்றினை கூறத் தொடங்கியது. 
        இப்படி போஜ மகாராஜன் ஒவ்வொரு படியாக ஏற ஏற 32 படிகளிலிருந்தும் வெளிவந்த 32 பதுமைகள் சொன்ன, 32 கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்த கதைகளாகும். 
முடிந்தது…..