ஒரு குட்டி கதை – ” முட்டாள் மரவெட்டி..”

0
1646
         ஒருமுறை சிவனும் பார்வதியும் ஆகாயத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது, பூலோகத்தில் மரவெட்டி ஒருவன் உயரமான மரத்தின் நுனிக் கிளையில் இருந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். 
     இதைப் பார்த்த பார்வதி அன்னை, “அவன் என்ன..? இப்படி வெட்டி கொண்டிருக்கிறான். மரக்கிளை முறிந்தால் கீழே இருக்கும் பாறையில் விழுந்து இறந்துவிடுவானே…! என்று சிவனிடம் கூறினாள். அதற்கு சிவபெருமான், அவனுடைய விதி, இன்னும் சற்று நேரத்தில் முடிய போகிறது என்றார். 
      இதைக் கேட்ட பார்வதி, என்ன..! இவ்வளவு சாதாரணமாக சொல்கிறீர்கள்.. அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறினாள். உடனே சிவபெருமான் அவனுக்கு விதி முடிந்துவிட்டது நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். இதைக் கேட்டதும் கோபத்தில் பார்வதி அன்னை ஒரு பக்தனை காப்பாற்ற வேண்டியது இறைவனின் கடமை அல்லவா..! அதை நீங்கள் மறந்து விட்டீர்களா..? என்று படபடத்துக் கூறினாள். 
       நீங்கள் எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டும்; இது என் வேண்டுகோள்; என்று கூறினாள். அதற்கு சிவபெருமான், எழுதப்பட்ட விதியை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. இருந்தாலும் உனக்காக ஒரு வாய்ப்பு தருகிறேன். அதாவது அவன் இன்னும் சற்று நொடிகளில் மரத்திலிருந்து கீழே விழப் போகிறான்; விழும் பொழுது அப்பா என்று கத்தினால் நான் சென்று காப்பாற்றுகிறேன்; அம்மா என்று சொன்னால் நீ சென்று காப்பாற்று என்று கூறினார். உடனே சரி என்றாள் பார்வதி அன்னை. 
     இருவரும் மரவெட்டியை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். மரமொடிந்து கீழே விழும் சமயத்தில், மரவெட்டியானவன் “செத்தேன்..!” என்று கூறி கீழே விழுந்து இறந்து போனான். 
கதை உணர்த்தும் நீதி: 
நேர்மறையான வார்த்தைகள் நேர்மறையான விளைவுகளையும், எதிர்மறையான வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளையும் உருவாக்கும் என்பது இந்த பிரபஞ்ச நியதி.