ஆன்மீக கதை – கடவுளிடம் இப்படித்தான் வேண்ட வேண்டும்…!

0
1577
      மன்னன் ஒருவன், தனது பரிவாரங்களுடன் காட்டிற்குள் வேட்டையாட சென்றான். திடீரென மன்னன் அமர்ந்திருந்த குதிரை மட்டும் வெறிபிடித்து, காட்டிற்குள் மன்னனை எங்கெங்கோ இழுத்துச் சென்று, இறுதியில் ஒரு குழிக்குள் தள்ளிவிட்டு சென்றது. அந்த நேரத்தில் அங்கு வந்த கிராமத்து வாசிகள் 4 பேர் மன்னனை காப்பாற்றி பரிவாரங்களுடன் சேர்த்தனர். 
      மன்னன் அந்த 4 கிராமத்து வாசிகளையும் அரசவைக்கு அழைத்து, விருந்து உபசரிப்பு செய்து மகிழ்ந்தான். இறுதியாக அரசவையை விட்டு கிளம்பும் நேரத்தில், “உங்களுக்கு என்ன வேண்டும்” என்று மன்னன், அந்த கிராமத்து வாசிகளிடம் கேட்டான். 
     அதற்கு முதல் கிராமவாசி தனக்கு ஒரு மாடு வேண்டுமென்றான். இரண்டாமானவன் நிலம் வேண்டும் என்றான். மூன்றாமானவன் அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றான். அவர்கள் கேட்டபடியே மன்னன் அவர்களுக்கு செய்து கொடுத்தான். 
      நான்காமானவனிடம் “என்ன வேண்டும்..?” என்று மன்னன் கேட்க, அதற்கு அவன், “தங்களை காப்பாற்றிய அந்த நாளை ஒரு திருநாளாக நினைத்து, ஒவ்வொரு வருடமும் நீங்கள் என் வீட்டிற்கு வருகை தரவேண்டும். என்னோடு ஓரிரு நாள் தங்கி இருந்து சிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். 
     அவன் கேட்டுக் கொண்டபடியே ஒவ்வொரு வருடமும் அந்த கிராமத்திற்கே மன்னன் செல்ல ஆரம்பித்தான். மன்னன் செல்வதற்காக அந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்யப்பட்டது. அதன்பின்னர் மன்னன் தங்கியிருக்கும் நாட்களில் குடிநீருக்காக அந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. 
    மன்னன் தங்குவதற்காக அங்கு அரண்மனை கட்டப்பட்டது. அந்த இளைஞனின் நற்குணத்திற்காக மன்னன், தன் மகளை மணமுடித்து வைத்தான். ஆண் வாரிசு இல்லாத அந்த மன்னன், அந்த இளைஞனுக்கு முடிசூட்டி வைத்தான். 
     நாமும், மன்னனிடம் முதல் மூன்று பேர் கேட்ட மாதிரியே இறைவனிடம் பொன், பணம், ஆபரணங்கள் என கேட்கின்றோம். நான்காமானவன் போல நாமும் இறைவனிடம், “என்னோடு வந்து தங்கியிருங்கள்” என்று கடவுளிடம் பிரார்த்தித்தால், நாம் கேட்டதும் கிடைக்கும். அதோடு நமக்கு தேவையான சகலமும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.