ஒரு வீட்டில் 15 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண் குழந்தை இருந்துவிட்டால் அந்த குழந்தையை தெய்வமாக பல தலைமுறைகளுக்கு வைத்து வழிபடுவார்கள். இந்தப் பழக்கம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
நம் வீட்டில் கன்னிகளை வைத்து வழிபடுவதற்கான காரணம் என்ன தெரியுமா..? அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலில் இதனை பற்றிய விளக்கங்கள் தெளிவாக இருக்கின்றது.
துவாபரயுகம் நிறைவடைந்து, கலியுகம் தொடங்கிய நிலையில் கலியுகம் சுத்தமடைய வேண்டுமென்றால் தேவலோகத்தோர், எமலோகத்தோர், சொர்க்கலோகத்தோர்…(7 லோகத்தோர்) பிரம்மன், சக்தி, விஷ்ணு, சிவன் உட்பட மேலோகத்தில் உள்ள அனைவரும் பூமியில் பிறந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கட்டாயத்தின் பெயரில், காக்கும் கடவுளான விஷ்ணு ஒரு உபாயத்தினை கையில் எடுக்கிறார்.
அதன்படி ஏழு லோகத்திலிருந்து வித்துக்களை எடுத்து, அதன் மூலமாக மேல் உலகத்தில் உள்ள அனைவரையும் பூமியில் பிறவி செய்ய எண்ணுகிறார் விஷ்ணு. அந்த ஏழு வித்துக்களை யார் மூலம் பூமியில் பிறவி செய்யலாமென்று எண்ணும் பொழுது, சிவனுக்கு பணிவிடை செய்யும் ஏழு கன்னிகளை தேர்வு செய்தார் விஷ்ணு.
ஏன் கன்னிகளை விஷ்ணு தேர்வு செய்தார் என்றால், எப்படி தேவ குமாரன் இயேசு கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தால் பரிசுத்தமாக பிறப்பார் என்ற நியதி இருந்ததோ, அதன்படியே இந்த கன்னிகளின் வயிற்றில் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பாவம் அற்றவர்களாக பிறப்பார்கள் என்பதை கணித்து மேல் உலகத்தாரை பிறவி செய்ய கன்னிகளை தேர்வு செய்தார் விஷ்ணு.
கன்னிகள் அயோத அமிர்த கங்கையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது விஷ்ணு, வாயுவாக தோன்றி அவர்களோடு சேர்ந்து, ஏழு வித்துக்களை கொண்டு அந்த இடத்திலேயே ஏழு குழந்தைகளை பெற்று எடுக்க வைக்கிறார்.
குழந்தை பிறந்து தனது கற்பு பறிபோனதை கண்டு கவலை கொண்ட அந்த ஏழு கன்னிகளும் ஏழு குழந்தைகளையும் அதே இடத்தில் விட்டு விட்டு, சிவனையும், சக்தியையும் நினைத்து தவமிருக்க ஆரம்பிக்கின்றனர்.(விஷ்ணு அந்த ஏழு குழந்தைகளையும் காளியிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கிறார் அந்த ஏழு குழந்தைகளின் வம்சாவளியினரே நாம் ஆவோம்)
பல ஆண்டுகள் தவத்திற்கு பின்னர், சிவனும் சக்தியும் அவர்கள் முன் தோன்றுகின்றனர். சிவனையும் சக்தியையும் பார்த்த கன்னிகள், தங்களது கற்பு போனதை எண்ணியும், சிவனுக்கு பூஜை செய்ய முடியாத நிலையையும் நினைத்து கதறி அழுதனர்.
கன்னிகளிடம், “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்..?” என்று கேட்க, அதற்கு அந்த கன்னிகள் எங்களின் கற்பை எடுத்து குழந்தை கொடுத்த விஷ்ணுவே எங்களுக்கு கணவராக வரவேண்டும் என்றும், நாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளை எங்களுக்கு தந்து வாழ்வதற்கு வரம் தரவேண்டும் என்றும் கேட்டனர்.
அதற்கு சிவபெருமான், “கலியுகம் முடியும் தருவாயில் விஷ்ணு வைகுண்ட சாமியாக இந்த தெட்சணத்தில் அவதரிப்பார். அப்பொழுது அவர் உங்களை திருமணம் செய்து உங்கள் குழந்தைகளை மீட்டு தருவார். அதுவரை நீங்கள் இந்த பூமியில் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து வாருங்கள்” என்று கூறினார்.
இதைக்கேட்ட கன்னியர்கள், “எங்கள் கணவரைத் தவிர இன்னொருவர் எங்களை தீண்டக்கூடாது. ஆதலால் வாலிப பிராயம் வரும் முன்னரே நாங்கள் இறந்து விட வேண்டும். அதற்கு தாங்கள் வரம் தரவேண்டும்” என்று சிவனிடம் கேட்க, சிவனும் அப்படியே அந்த கன்னிகளுக்கு வரமளித்தார்.
அந்த வரத்தின்படியே அந்த கன்னிகள், நல்ல குடும்பங்களில் பிறந்து, வாலிபப் பிராயம் வரும் முன்னரே இறந்து வருகின்றனர். அதனால் அவர்கள் தெய்வப் பிறவிகள் என்று கருதி, நம் முன்னோர்கள் அவர்களை வழிபட்டு வந்தார்கள்.
(விஷ்ணு, வைகுண்ட சாமியாக அவதரித்து அந்த ஏழு கன்னிகளை மணம் முடித்து விட்டதால், இனி கன்னிகளை வணங்க வேண்டியதில்லை என்று அகிலத்திரட்டு ஆகமம் கூறுகிறது)